வெள்ளி, 2 மார்ச், 2012

என்றென்றும் அன்புடன்

கதையைப் பற்றி ஒரு கண்ணோட்டம்

நான் எழுத பழகிய காலகட்டங்களில் புனையப்பட்ட கதையிது. இதனுடைய இலக்கிய வளமை எப்படி இருக்கும் என தெரியாமல், அந்த பதிம வயதில், என்னை வெகுவாக பாதித்த விஷயங்களைக் கதைகளாக உருமாற்ற முனைந்திருக்கிறேன்,

இன்றைய துரித உலகில் இணையம், ஐ-போன் என்று மூழ்கிவிட்ட பிரகிதிகளுக்கு, 15-20 வருடங்களுக்கு முந்தைய தொலைதொடர்பு சாதனாமான கடித வரைதலும், அதற்கான காத்திருப்பும் புரியுமா என தெரியவில்லை. தோட்டபுற இறுக்கங்களிலிருந்து விடுபட்டு, சுயமாக தொழிற்பேட்டைகளில் வேலை செய்ய தொடங்கிய, ஓரளவு படித்த, இலக்கிய ஆர்வமுள்ள பெண்கள் அப்போது எதிர்நோக்கிய ஒரு பிரச்சனைதான் இதுவும். மாத சஞ்சிகைகளிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பேனா நட்பு பெண்களின் மனமுதிர்ச்சியை விரிவாக்கிய போதிலும், சமூகம் மற்றும் ஒழுக்க விதிகளில் அது உண்டுபண்ணியத் தாக்கங்கள்தான் இந்த கதையின் பொறி.

சினேகமுடன்
இராஜேஸ் இராமசாமி

---------------------------------------------------------------------------------


"இதோ பாருடி, நீ சொல்லறது கதைக்கும் காவியத்துக்கும்தான்
வக்கணையா இருக்கும். மனுசியா உலகத்துல பொறந்துட்டா நாலு பேருக்கும், ஊருக்கும் பயந்துதான் வாழனும். இன்னையோட அவனுக்கு முழுக்கு போட்டுட்டு, ஒழுங்கா லட்சணமா பொம்பளையா இரு.”

மங்களத்தின் குரல் சமையறையைத் தாண்டி, நடுகூடத்தில் ஆயாசத்துடன் அமர்ந்திருந்த ப்ரியாவின் செவிமடல்களைத் தாக்கியது. உள்ளே மூண்ட கனல், வேகமாய் தலைக்கு ஏறி, அழுகையும் ஆத்திரமும்மாய் வெளிப்பட்டது.

“அம்மாகாரி கரடியா கத்தறாலேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? என்ன நெஞ்சழுத்தமும் ஆகாத்தியமும் இருந்தா, இப்படி புடிச்சு வச்ச புள்ளையாரு கணக்கா உட்கார்ந்திருப்ப?”

கறிக்கரண்டியோடு இடுப்பில் இருகைகளை ஊன்றிக் கொண்டு மங்களம், ப்ரியாவை உறுத்து பார்த்தபோது, இலங்கா இராட்சசி சூர்பணகையின் முகம்தான் நினைவுக்கு
வருகிறது.

“இன்னும் என்ன தெரியனும்னு ஆசைபடறம்மா? எத்தனை வாட்டி திரும்ப திரும்ப சொன்னாலும் ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? என்னை நல்லா புரிஞ்ச நண்பருக்குக் கடிதம் எழுதறது தப்பா? பேனா நட்புங்கறது புனிதமானது. நீ நி¨னைகிற மாதிரி காதல் கத்திரிக்காயெல்லாம் இதுல கிடையாது.”

ப்ரியா, நூறாவது முறையாக தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு இப்படி சொல்கிறாள். காலையில் தபால்காரர் பட்டுவாடா செய்த இரகுவின் கடிதம், இத்துணை ஆர்பாட்டத்தை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“ஒரு ஆம்பிள்ள மாசந் தவறாம ஒரு கன்னி பொண்ணுக்குக் கடுதாசி போட்டா என்னடி
அர்த்தம்? உனக்கும் அவனுக்கும் ஆசையில்லாமலா இந்த அக்கிரமம் ரெண்டு வருஷமா நடக்குது?உனக்கென்னடி இந்த வயசுல ஆண் சினேகம் கேட்குது? ஏதோ நாலு எழுத்து படிக்க வைச்சா, பேனா நட்பு மண்ணாங்கட்டின்னு கொழுப்பெடுத்து அலையற. விஷயம் வெளிய தெரிஞ்சு, தோட்டம் பூராவும் சந்தி சிரிக்க வைக்கனும்னு கங்கணம்
கட்டிகிட்டு திரியறியா?”

இதற்கு மேல், எந்த ஒரு இழிவார்த்தைகளையும் கேட்கமாட்டது, ப்ரியா தனது இரு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டாள். கண்களில் இருந்து
தடையில்லாமல் கண்ணீர் மாலை மாலையாக சுரந்து கன்னமேட்டை நனைத்தது.

“நீ எவனையாவது இழுத்துகிட்டு ஓடாமல் இருக்க, மொதல்ல உனக்கு ஒரு கூனோ குருடோ பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாதான், எனக்கு மனசு ஆறும். என் மானத்தையும் உசிரையும் வாங்கிறத்துக்கின்னே, எழவெடுத்து பொறந்திருக்க.”

மங்களம் பேச ஆரம்பித்து விட்டால், லேசில் ஓயமாட்டாள். அகப்பட்டவரை உண்டு இல்லை என்று பார்த்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பாள். எலும்பில்லாத நாக்கு, காதில் நாரசம் பாய்வது போல் கேவலமான வார்த்தைகளைச் சரமாய் சரமாய் பாய்த்து கொண்டிருக்கும். மங்களத்தின் கருநாக்குக்கு அவள் புருஷனே அடங்கியிருக்கும் போது, அவள் பெற்ற பெண் எம்மாத்திரம்?

இத்துணை வார்த்தைகளையும் மௌனமாய் மனதுக்குள் வாங்கி கொண்டு கல்லாய் சமைந்திருந்தாள் ப்ரியா. எதிர்த்து பேச திராணியற்று, நாக்கு மேல் அண்ணத்தோடு ஓட்டிக் கொண்டது. வேலை முடிந்து வீடு திரும்பிய களைப்பும் பசியும் சேர்ந்துக் கொண்டு அசதியை உண்டு பண்ணியது. பத்து மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலையில் லொங்கு லொங்குவென்று ஓவர்டைம் செய்து, இரவு எட்டு மணிக்கு உடல் வலியோடு திரும்பும் போது. ‘இந்தா’ என்று ஒரு வாய் காப்பி கொடுக்க கூட நாதியில்லை. வந்தவுடன் ரெக்கை முளைத்த ரெட்டைவால் குருவி மாதிரி சண்டை பிடிக்க ஆரம்பிதுவிட்டாள் மங்களம்.

வார்த்தைகளை அனாவசியமாய் வீசி, எதிராளியை அடியோடு சாய்க்கும் மங்களத்தின் வல்லமை, ப்ரியாவிற்குத் தெரிந்ததுதான். இருந்தாலும், இத்தனை நாள் மரத்து போயிருந்த இதயம், இன்று சுக்கல் சுக்கலாய் கண்ணாடி தெறிப்பது போல் சிதறுண்டு சின்ன சின்ன பிம்பங்களாய் அழுந்தது. வாய் விட்டு அழகூட முடியாமல், விம்மிய கேவலை நெஞ்சு கூட்டுக்குள் போட்டு அடக்கம் செய்துவிட்டாள். இனி ஒரு தரம், மட்டரகமான வார்த்தைகளைக் கேட்க அவளுக்கு சக்தி இல்லை.

இரவு படுக்கும் பொழுது, ஜன்னலோர கட்டிலின் வழி, நான்காம் பிறை மெல்ல கண் சிமிட்டியது. இந்த குறை நிலவை பற்றி, எத்தனை முறை இரகு அவளுக்குக், கதை கதையாய் எழுதியிருப்பான். இரகுவிற்குதான் எத்துணை கற்பனை திறன். அவனது கடிதமே ஒரு கவிதை போல் பொறுக்கி எடுத்த வார்த்தைகளை, பேனா மையினால் கோர்த்து சித்திரமாய் விரியுமே. இப்படி பொத்தி வைத்த மல்லிகை மொட்டுக்களாய், இரகுவின் நினைப்பு மெல்ல அரும்பி, மனம் முழுவதும் வாசனையைப் பரப்பியது.

ப்ரியா, ஐந்தாம் படிவத்தோடு, படிப்பிற்கு முழுக்கு போட்டாலும், அவளது இலக்கிய உள்ளம், கவிதைகளையும் கதைகளையும் தேடி தேடி படிக்கும். இந்த இலக்கிய இரசனையும், படித்ததை மனதுக்குள் உள்வாங்கி அசைபோடும் குணமும்தான், இரகுவை அவளுக்கு அறிமுகப்படுத்தியது. ஒருமுறை கதிரவன் மாத இதழின், வாசகர் விழாவில் நடந்த திடீர் கவிதை போட்டியில் இரகுவும் அவளும் பரிசு பெற்ற போதுதான், இரகுவை முதன் முதலில் பார்த்தாள்.

“வாழ்த்துக்கள் மிஸ்டர் இரகு,உங்க கவிதை உண்மையிலேயே அருமை. இந்த பத்து
நிமிஷத்துல எப்படி ஆள அடிக்கிற மாதிரி உங்களால எழுத முடியுது?”
பாராட்டுக்குக் கர்வபடாமல், சற்று வெட்கி சிரித்த அவனைப், ப்ரியாவுக்கு நிரம்ப பிடித்திருந்தது. அதன் பிறகு, அவன் சொன்ன வார்த்தைகள், அவளது புருவத்தை உயர்த்தின.

“உங்க கவிதைதான், எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ப்ரியா?”

‘நதியோடும் போகாமல்
கரையோடும் நில்லாமல்
நீர்சுழிப்பில் நாணலாய் வளைகிறது
பெண்மனம்

நனவோடும் இல்லாமல்
கனவோடும் வாழாமல்
கண்ணீரில் கரைந்து
கானலாய் சிரிக்கின்றது
பெண்ணின் மனம்.’

“ரொம்ப உணர்ந்து எழுதியிருக்கீங்க. எப்படி பெண்களால, உள்ளே அழுதுக்கிட்டு, வெளியே சிரிக்க முடியுது?”

பழகிய குறுகிய நேரத்தில், மனதைப் படித்தவனாய், அவளை நோக்கி கேட்டபோது, ப்ரியாவுக்கு நா எழவில்லை. சின்ன முறுவலைப் பூத்துவிட்டு
“இதெல்லாம் சொல்லி விளங்காது இரகு. ஒரு சமயம் நீங்க பொண்ணா பொறந்திருந்தா இந்த மாதிரி கேட்டிருக்க மாட்டிங்களோ என்னவோ?. “

“ஐயோ, உங்க அளவுக்கு என்னால தத்துவம் எல்லாம் பேச
முடியாது. என்னால முடிஞ்சது எல்லாம் இதுதான். என்று நட்போடு அவனது வலது கையை
நீட்டினான். முதல் முதலில் எனக்காக,எனது மனதுக்காக ஒருவன் கை குலுக்கி
பாராட்டியபோது உள்ளுக்குள் மனம் பூ பூத்தது. அகலமாய் விரிந்த அவனது கண்களைப்
பார்த்தபோது, அதில் துளியும் கல்மிஷம் இல்லாது, சினேகிதமாய் சிரித்தது. அன்றைய பொழுதிலிருந்து, இருவரும் நட்பாக கடிதங்களை வரைய ஆரம்பித்தோம். சிடு சிடு
அம்மாவுக்கும், முசுடு அப்பாவுக்கும் ஒற்றை மகளாய் பிறந்து, மன வெம்மையை ஆற்றமாட்டாது தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, இரகுவின் கடிதம் வேனிற்கால இளம் வெயிலாய் மனதுக்கு இதம் அளித்தது. இத்தனைக்கும், எனக்கு நெருங்கிய தோழிகள் சிலர் இருந்தாலும், இரகுவிடம் தோன்றிய அன்னியோனியம் வேறு எவரிடமும் ஏற்படவில்லை
என்றுதான் சொல்ல வேண்டும். எனது தோழிகள், என்னையும் இரகுவையும்
இணைத்து கேலி செய்தபோதிலும்,என்னுள் உறங்கி கிடந்த இளமை சற்றும்
கிளர்ந்தெழவில்லை. சத்தியமாய் எனக்குக் காதல் உணர்வே ஏற்படவில்லை.

மிகவும் நெருக்கமான அந்தரங்க தோழியிடம் பேசுவது போல்தான் எனது கடிதங்கள் பெரும் பாலும் இருக்கும். ஒரு சமயம் ,வாஞ்சையும் பாசமும் கலந்து ஒரு சகோதரனுக்கு அன்பொழுக எழுதுவது போல் அவ்வளவு உருக்கமாக இருக்கும். இன்னொரு சமயம், மிகுந்த சினேகத்துடன் தனது நண்பனுக்கு உரிமையோடு வரையும் மடலாக அமையும். இந்த இரண்டு வருட கடித போக்குவரத்தில், தப்பி தவறியும் எங்களது கடிதத்தில் காதல் நெடி துளியும் அடித்ததில்லை. பெற்ற தாயும், சுற்றி உள்ள தோழிகளும், அந்த அப்பழுக்கற்ற அன்பிற்குக் காதல் முலாம் பூசின போதுதான், மனம் சோர்வடைந்து, அந்த ஒரு மாதம் இரகுவிற்கு எழுதுவதைத் தவிர்த்தேன். அந்த ஒரு மாத இடைவேளை மூன்று மாதங்களாக நீடித்தபோதுதான், திடீரென, ஒரு நாள் வீட்டில் அனைவரும் இருக்கும் சமயம்
பார்த்து உள்ளே நுழைந்தான் இரகு.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, அவனை பார்ப்பதில் மகிழ்சியும் நிம்மதியும் ஏற்ப்பட்டாலும், எனது அம்மாவைக் கண்டு மனம் பதைபதைத்தது. அம்மாவுக்குச் சாதாரண நாளிலே உடம்பெல்லாம் மூளை,இந்த மூன்று மாதமாய் எனது முகத்தில் வழக்கமான
செழிப்பு தொலைந்து போய், இன்று அதிசயமாய் பூத்த போது, வந்திருக்கும் விருந்தாளி இரகுதான் என்று சட்டென்று புரிந்து போனது. வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல், இத்தனை நாள் காய்ந்து போன நாக்கு, வசமாய் இரகுவைப் பிலு பிலுவென பிடித்துக் கொண்டது.

“ஏண்டாப்பா, நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிக்கூட பொறக்கல? வயசுக்கு வந்த பொண்ணுக்கு இப்படி கண்டவன் எல்லாம் கடிதாசு எழுதறேன்னு பேர்ல்ல அக்கிரமம் பண்ணா, கேட்க நாதியில்லைன்னு நினைச்சுக்கிட்டியா? மங்களம் ஆரம்பித்து விட்டாள். நான் ஏதுவும் செய்வதறியாது, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

தன்னை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல், விழிக்கும் இரகுவைப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது.

“இதோ பாருப்பா, நாங்கெல்லாம் மானம் ரோசம்னு நாலும் பார்த்து வாழற மனுஷங்க. உனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சினா, பெத்தவங்ககிட்ட சொல்லி நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கோ, அதை விட்டுட்டு என் மகள் வாழ்க்கையில வீணா குழப்பம் பண்ணாதே? நாளைக்கு இவளுக்கு ஒழுங்க கல்யாணம் காட்சின்னு நடந்தாதான், நாங்க தலை நிமிர்ந்து நடக்க முடியும்.” அம்மா சற்று ஓய்ந்தாள்.

இரகு சற்று விஷயம் புரிந்தவனாய் என்னை இரக்கதோடு பார்த்தான். என்னுடைய கவிதையின் வரி இப்பொழுதான் அவனுக்கு புரிகிறது போலும், நனவோடும் நில்லாமல் கனவோடும் வாழாமல் கண்ணீராய் கரைகிறது பெண்ணின் மனம்.

“ஆண்டி, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ளே எதுவும் கிடையாது. ப்ரியா எனக்கு பாசமான சினேகிதி, என்னோட நலன்லே அக்கறை உள்ள தோழி. புனிதமான புருஷன் பொண்டாட்டி உறவு மாதிரி, எங்களோட நட்பும் பவித்திரமானது. இதை இப்படி அனியாயமா கொச்சை படுத்தாதீங்க.”

“புனிதம், பவித்திரமெல்லாம் மேடைக் கட்டி பேசதான் நல்லா இருக்கும் தம்பி. நாளைக்கே
இவளுக்கு கல்யாணம்னு ஆகும்போது, இந்த கருமாந்திரமெல்லாம் தெரிஞ்சா, இவ வாழ்க்கை என்னத்துக்கு ஆவறது? எவனாவது இவளைக் கட்டிக்குவனா?”

“ஏன் இப்படி ஆண் பெண் நட்பை சந்தேக கண்ணோடு பார்க்கறீங்க? இப்ப உங்க பிரச்சனை, ப்ரியாவுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகனும், அவ்வளவுதானே?”
அம்மா, ஆமோதிப்பது போல் மறு பேச்சு பேசவில்லை.

“ஏன், நானே ப்ரியாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி தரக்கூடாது? என்னாலதானே இவ்வளவு பிரச்சினை?” என்று நிறுத்தி என்னையும் அம்மாவையும் மாறி மாறி
பார்த்தான்.

எனக்கு மனது திக்கென்றது. எங்கே என்னை திருமணம் செய்து கொள்ள முனைந்துவிடுவானோ என்ற அசட்டு அச்சம் விடு விடுவென மன மூலைமுடுக்கெல்லாம் பரவியது. அப்படி ஒன்று நடந்தால், இத்தனை நாட்கள் அம்மாவின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகிவிடுமே என்ற கிலேசம் மூர்ச்சையடைய செய்தது. இவற்றையெல்லம் விட, இரகுவின் மேல் வைத்திருந்த நம்ம்பிக்கையும், தூய நட்பும் என்னாவது? அனைத்தும் நட்பு என்ற வேஷம் பூண்ட பொய்மைகளா? என்றென்றும் அன்புடன் என அவன் கடிதங்கள் முடியும் போது, அந்த சின்ன வாக்கியத்துக்குள் இத்தனை கற்பிதங்களும் ஆசைகளும் புதைந்து உள்ளதா? இவ்வாறு நினைக்கும் போது, என்னையறியாமலே கண்களில் நீர் குபுக்கென ஊறியது. அவனது சொல்ல போகும் வார்த்தைகளில்தானே எங்களது நட்பின் உயிர்நாடியே உள்ளது.

“எங்க அண்ணன் பேங்குல நல்ல வேலையில கை நிறைய சம்பாதிக்கிறாரு. ப்ரியா எனக்கு எழுதற கடிதத்தையெல்லாம் நானும் அவரும்தான் படிப்போம். ப்ரியாவோட இரசனையும் மனசும் அவருக்கு ரொம்ப புடிச்சுருக்கு, அவளையே திருமணம் செஞ்சிக்க ஆசைபடறாரு. இதை நானே, காலம் கனிஞ்சி வர்றப்ப சொல்லலம்னு இருந்தேன். இன்னைக்கு
உங்க குழப்படியால, சொல்ல வேண்டியதா ஆயிடுச்சு.” என்று சொல்லி தனது அண்ணனின் புகைப்ப்டத்தை காட்டியபோது ப்ரியாவுக்கு எதுவுமே புரியவில்லை.

அம்மாவுக்கு உள்ளூர சந்தோஷமாகதான் இருந்தது, எந்த சிரமமும் இல்லாது மகளுக்கு வங்கி வேலையில் கண்ணுக்கு இலட்சணமாய் மாப்பிள்ளை கிடைக்கும் போது கசக்கவா செய்யும்.

“நாளைக்கே எங்க அம்மா அப்பா, அண்ணனைக் கூட்டிக்கட்டு பொண்ணு பார்க்க வரோம். சரி, இப்பவாவது எங்க அண்ணிகிட்டே பேசலாமா” என்று கேட்டபோது, எனக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. சத்தியமாய் இந்த அழுகையில் எந்த சந்தேகமும் துக்கமும் இன்றி, எனது அஞ்ஞானத்திற்காக நொந்துக் கொண்டேன்

“ப்ரியா, தம்பிக்கு குடிக்க காப்பிக் கொடும்மா”, என்று பாசம் ஒழுகும் அம்மாவின் குரலைக் கூட சட்டை செய்யாது, இரகுவின் கைகளை பற்றிக் கொண்டு குலுங்கி குலுங்கி
அழுகிறேன். அப்போதுதான் சில அழுகைகள் கூட ஆனந்தமாய் இருக்கும் என புரிகிறது. இவன் என்றைக்கும் ‘என்றென்றும் அன்புடன்’ இரகுதான்.