ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நாகலீலைத் தோட்டம் (2)

அந்த நாட்களில் உடுத்த சரியான உடை கிடையாது, நாகரீகம் சற்று தூர நின்று எட்டி பார்க்கும் கால வெளியில், மனதின் குதூகலத்திற்கு அளவே கிடையாது. வெறும் கித்தா மர கொட்டைகளை வைத்து கோலி விளையாடிய போது முகிழ்ந்த முழுமையும் உள்ள களிப்பும் இப்போது ஸ்நோ போவ்லிங் உருட்டும் உவகையில் இல்லை. கண்ணாடிகுஞ்சு சிறுமீன்களைப் பிடிக்க மாட்டு அட்டைகள் நிறைந்த ஓடைகளில் உருண்டு பிரண்டதும், மீன்குஞ்சுகள் என எண்ணி தலைப்பிரட்டைகளைக் கொண்டு போய் ஏமாந்து நின்றது, இன்று சன்வே லகூனில் நீர் சறுக்கு பலகை எனக்கு தரவில்லை. நாகலீலைத் தோட்டத்தில் மிக முக்கியமாய் எல்லா சுற்று புற பொடுசுகளும் அறிந்தது 21ஆம் நம்பர் ஆறு. பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், 21ஆம் நம்பர் இரப்பர் நிறையின் (பகுதியில்) ஊடாக அந்த தெளிந்த ஆறு இருந்ததால் ஏற்பட்ட நாமகரணமே அது. ஸ்படிகமாய் ஓடும் அந்த நதியின் அடியில் புரளும் வெள்ளை மணல் சிறு மேடுகளைத் துல்லியமாய் காணலாம். பருவங்களுக்குத் தகுந்தபடி மாறும் அதன் உள்ளாழங்களும், வட்ட வட்ட நீர் சுழிப்பும், அடியாழத்தில் நிரடி கொண்டிருக்கும் காய்ந்த இரப்பர் மர இலைகளும், உச்சி வரை சில்லிடவைக்கும் தட்பமும் வேறு எங்கும் கிடைக்காது. அந்த நாளிலே, அந்த ஓடையில் குதித்து குளிப்பதெற்கென்றே மற்ற தோட்டங்களில் இருந்து குறிப்பாக புக்கிட் சிலாரோங் மற்றும் விக்டோரியா தோட்டத்தைச் சேர்ந்த நிறைய பொடுசுகளும், வாலிபர்களும் படையெடுப்பதுண்டு. சில சமயங்களிம் அதனால் மூளும் சண்டைகளும் நிறைய உண்டு. அதில் ஒன்றை உங்களுக்கு பிறகு விஸ்தாரமாக கூறுகிறேன். அந்த ஆற்றுக்கு அதன் வளம் மட்டுமே சிறப்பல்ல, வேறேன்றும் உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும், அதன் போக்கில் சற்று பயத்தோடும் திகிலோடும் கலந்து உள்வாங்கும் போதுதான், அதனை மீண்டும் மீண்டும் அனுபவிக்க தோன்றும் உன்மத்த நிலையை உண்டாக்குகிறது. இந்த ஆறு இருந்த இடம் ஒரு நடுக்கட்டான். நடுக்கட்டான் என்பது வேறு ஒன்றும் இல்லை, சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லும் போது, அந்த பிரேத்தின் தலைமாட்டை மாற்றி சுடுகாடு இருக்கும் வழியை நோக்கி மாற்றி வைப்பார்கள். ஆகவே, அந்த ஆற்றுக்கும், சுடுகாட்டிற்கும் ஐம்பதடி தூரம்தான் இடைவெளி இருக்கும். ஒர் எட்டு பத்து வயது பையனாக இருக்கும் அந்த பிராயத்தில், எனக்கெல்லாம் சுடுகாடு என்பது ஏதோ நெருங்க முடியாத மர்மதேசமாகதான் இருந்தது. எதையுமே பரீசோதித்து பார்க்கும் அந்த வயதில், எங்களது சுதந்திரம் சில எல்லைகளுக்கு உட்பட்டுதான் இருந்தது. அந்த எல்லைகளுக்கு அப்பால் மினுங்கும் சொர்க்கமாய், ஆதாமிம் ஆப்பிள் பழமாய், திறந்து பார்க்க துடிக்கும் பெண்டோரா பெட்டகமாய் இந்த சுடுகாடும், ஆறும் இருந்ததில் வியப்பில்லைதான். பேய்கள் உலாவும் நடுக்கட்டான் பிரேதேச ஓடையில் குளிப்பதற்கு என்னை போன்ற சிறுவர்களுக்கு என்ன ஒரு உச்சகட்ட ஆசை இருந்திருக்க வேண்டும்? என்னதான் மறைந்து, ஒளிந்து குதியாட்டம் போட்ட போதிலும், தண்ணீரில் நனைந்த வெளுத்த முகமும், சிகப்பேறிய கண்களும், உடலில் காட்டமாய் படிந்திருக்கும் சேற்று வாசனையும் வீட்டில் காட்டிக் கொடுத்து விடும். அதற்கான அடியும் உதையும் அப்பா அம்மாவில் அன்றைய மனநலத்தை பொருத்துதான்! இந்த உதைக்கும் அடிக்கு பயந்து வீட்டிற்குப் பதுங்கி பம்மி சென்றாலும் என்னோடு குதியாட்டம் போட்ட மற்ற பொடுசுகளோ அல்ல அவர்களை செம்மையாக உதைத்த அவர்களது பெற்றோர்களோ எனது வீட்டிலும் வைத்தி வைத்துவிடுவார்கள்.. என்னால் இனமும் கூட அந்த 21ஆம் நம்பர் ஆற்று வாசனை நினைவு கூர முடிகிறது. ஏதோ முகம் தெரியா வயதில் குடித்த தாய்ப்பாலின் மணத்தைப் போலவே அந்த மழுங்கிய சேற்று வாசனை என்னை ஆழ்மன சஞ்சாரத்திற்கு இட்டு செல்கிறது. தமிழில் ‘அய்யகோ’ என்ற ஒரு சொல்பதம் உண்டு. துக்கத்தை மிகவும் அரட்டிக் கொண்டு ஒப்பாரி வைப்பதைப் போன்ற பிம்பத்தை இந்த வார்த்தை நிச்சயம் நினைவுறுத்தும். அப்படி ஆயிரம் தடவை எனக்கு அய்யகோ என்று பிளறி அழ தோன்றுகிறது அந்த ஆற்றை இப்போது பார்க்கும் போதெல்லாம். மடி வற்றிய கிழபசுவை அடிமாட்டுக்கு அனுப்பும் கோலமாய்தான் அந்த ஆற்றின் நிலையும் காணப்படுகிறது. சுற்றுபுற இரப்பர் தோட்டங்களையெல்லாம் மட்டமாக்கி, தொழிற்சாலைகளை நிறுவியதன் மூலம், 21ஆம் நம்பர் ஆறு இன்று தொழிற்சாலை கழிவுகளைத் தேக்கி வைக்கும் குளமாய் ஆகிபோனதில், வளர்ந்து வரும் பொருளாதரத்திற்குதான் நன்றியைச் சொல்ல வேண்டும். தொடரும்..........