வியாழன், 18 ஆகஸ்ட், 2022

நாவலுக்கான விசைமுகம்



முதல் விசை

தேனடையாய், பல உள் விரிவாக்கங்களால் புடைத்து விம்மிக் கொண்டிருக்கும் சமுகத்தில், இருண்ட பிரதேசங்கள் நிறையவே உண்டு. மாபியா, இலுமினாட்டி, பால் திரிபு கட்டமைப்புகள், கள்ளக்கடத்தல், தீவிரவாதம் என இந்த மாயா உலகங்களின் பட்டியல் காலதேச வர்த்தமானத்தின்படி நீண்டு கொண்டுதான் செல்கிறது. இந்த இருண்ட உலகங்களின் இருப்பு மண்ணில் மறைந்து துளிர் விடும் பச்சையாய், ஆழ சமுத்திரத்தின் பிரம்மாண்டமான ஆக்டோபஸ் கால்களின் நீட்சியாய், யதார்த்த உலகை மாய வலையில் சிக்கவைத்து, சமூக பிரக்ஞையில் வலுவாய் அமர்ந்துள்ளது. இந்த தனிப்பட்ட உலகங்கங்களில் இருந்து விலகி, சமூகத்தின் அக்கறைக்கு இலக்காகாத, இன்னும் தன் இருப்பை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாத ஓர் உலகமாய், ஒரு பிரிவு இருந்தும் இல்லாமலும், புரிந்தும் புரியாமாலும் இயங்கிக் கொண்டுதான் வருகிறது. பால்திரிபினர் என அறியப்படும் திருநம்பிகளின் உலகம். சிலுவையென பெண்ணுடலில் சிறைப்பட்ட ஆண்களின் ஆத்மாக்கள் ஆரோகணிக்கும் உலகம். ஆணாதிக்கம் மிகுந்த உலகத்தின் பிடியில் இயங்கும் சமுக ஏடுகளில், இன்னும் தெளிவாய் பதியப்படாத ஒர் இருண்ட உலகம். 

திருநம்பிகளைப் பற்றிய நமது அறிதலும் அறிவும் சொற்பமே. ஆணினால் அலைக்கழிக்கப்பட்ட அம்பையின் மறுபிறப்பில் இருந்தே நமக்கான திருநம்பிகளின் உலகம் துவக்கம் காணுகிறது. இங்குகூட பெண்ணாய் பிறந்த அம்பையின் மறுப்பிறப்பு, வஞ்சம் தீர்க்க வேண்டியே சிகண்டியாய் ஆணாய் உருவெடுக்கிறதே தவிர, ஓர் சக ஆணாய், இன்னொரு பெண்ணோடு இன்பம் சுகித்து வாழ அல்ல. திருநங்கைகளை அங்கிகரித்த இந்த நவீன யுகம், திருநம்பிகளின் மேல் பாரபட்சத்தைக் காட்டுவது ஏன்? மனரீதியாகவும், உணர்வின்பாலும் ஆணாய் இருக்கின்ற இவர்களின் பெண்ணுடலைக் காரணம் காட்டி, ஆணாதிக்க உலகம் முடக்குகிறதா?

நாவலுக்கான பொறி ஏதோ எமை மறந்த க்ஷணத்தில் தீயாய் பற்றிக் கொண்டு, அதற்கான களத்தை அதுவே தேர்ந்தும் கொண்டது. வாழ்ந்துப் பார்க்காத, வெறுமே எல்லைகளின் விளிம்பில் மேல்நுனியில் விரல் ஊன்றி எட்டிபார்த்த உலகத்தைக் கற்பனையில்பால் எழுதுவது ஏட்டுச் சுரைக்காயை சமைப்பது போன்றே, எற்றைக்கும் உதவா. நிரப்பபடாத பாத்திரமாய் இருக்கும் எனது சிந்தையுள் அதன் சாரத்தையும், விழுமியங்களையும், வாழ்க்கையும் ஏற்றிக் கொள்ளவே இந்த நாவலுக்கான விசைமுகம் களபயிற்சியாய் அமைகிறது. ஒரு குழந்தையை நேசிப்பது போல, வாசமுள்ள மலரை முகர்வது போல், ஒரு திருநங்கையை ஆதூரமாய் பார்ப்பது போல, இந்த திருநம்பிகளையும் கனிவோடும் பார்க்கும் பொருட்டே இந்த நாவல். தன்னை முழுதாக்கிக் கொள்ள அங்கம் நீக்கியவனின் வாழ்க்கையைப் பதிவுப் பண்ணவே. இங்கு சரிபிழைகளைப் பற்றி பேசபோவதில்லை, மீதமிருக்கும் வாழ்க்கையை மட்டுமே சகபயணியாய் கவனிக்க போகிறேன். 




ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நாகலீலைத் தோட்டம் (2)

அந்த நாட்களில் உடுத்த சரியான உடை கிடையாது, நாகரீகம் சற்று தூர நின்று எட்டி பார்க்கும் கால வெளியில், மனதின் குதூகலத்திற்கு அளவே கிடையாது. வெறும் கித்தா மர கொட்டைகளை வைத்து கோலி விளையாடிய போது முகிழ்ந்த முழுமையும் உள்ள களிப்பும் இப்போது ஸ்நோ போவ்லிங் உருட்டும் உவகையில் இல்லை. கண்ணாடிகுஞ்சு சிறுமீன்களைப் பிடிக்க மாட்டு அட்டைகள் நிறைந்த ஓடைகளில் உருண்டு பிரண்டதும், மீன்குஞ்சுகள் என எண்ணி தலைப்பிரட்டைகளைக் கொண்டு போய் ஏமாந்து நின்றது, இன்று சன்வே லகூனில் நீர் சறுக்கு பலகை எனக்கு தரவில்லை. நாகலீலைத் தோட்டத்தில் மிக முக்கியமாய் எல்லா சுற்று புற பொடுசுகளும் அறிந்தது 21ஆம் நம்பர் ஆறு. பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், 21ஆம் நம்பர் இரப்பர் நிறையின் (பகுதியில்) ஊடாக அந்த தெளிந்த ஆறு இருந்ததால் ஏற்பட்ட நாமகரணமே அது. ஸ்படிகமாய் ஓடும் அந்த நதியின் அடியில் புரளும் வெள்ளை மணல் சிறு மேடுகளைத் துல்லியமாய் காணலாம். பருவங்களுக்குத் தகுந்தபடி மாறும் அதன் உள்ளாழங்களும், வட்ட வட்ட நீர் சுழிப்பும், அடியாழத்தில் நிரடி கொண்டிருக்கும் காய்ந்த இரப்பர் மர இலைகளும், உச்சி வரை சில்லிடவைக்கும் தட்பமும் வேறு எங்கும் கிடைக்காது. அந்த நாளிலே, அந்த ஓடையில் குதித்து குளிப்பதெற்கென்றே மற்ற தோட்டங்களில் இருந்து குறிப்பாக புக்கிட் சிலாரோங் மற்றும் விக்டோரியா தோட்டத்தைச் சேர்ந்த நிறைய பொடுசுகளும், வாலிபர்களும் படையெடுப்பதுண்டு. சில சமயங்களிம் அதனால் மூளும் சண்டைகளும் நிறைய உண்டு. அதில் ஒன்றை உங்களுக்கு பிறகு விஸ்தாரமாக கூறுகிறேன். அந்த ஆற்றுக்கு அதன் வளம் மட்டுமே சிறப்பல்ல, வேறேன்றும் உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும், அதன் போக்கில் சற்று பயத்தோடும் திகிலோடும் கலந்து உள்வாங்கும் போதுதான், அதனை மீண்டும் மீண்டும் அனுபவிக்க தோன்றும் உன்மத்த நிலையை உண்டாக்குகிறது. இந்த ஆறு இருந்த இடம் ஒரு நடுக்கட்டான். நடுக்கட்டான் என்பது வேறு ஒன்றும் இல்லை, சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லும் போது, அந்த பிரேத்தின் தலைமாட்டை மாற்றி சுடுகாடு இருக்கும் வழியை நோக்கி மாற்றி வைப்பார்கள். ஆகவே, அந்த ஆற்றுக்கும், சுடுகாட்டிற்கும் ஐம்பதடி தூரம்தான் இடைவெளி இருக்கும். ஒர் எட்டு பத்து வயது பையனாக இருக்கும் அந்த பிராயத்தில், எனக்கெல்லாம் சுடுகாடு என்பது ஏதோ நெருங்க முடியாத மர்மதேசமாகதான் இருந்தது. எதையுமே பரீசோதித்து பார்க்கும் அந்த வயதில், எங்களது சுதந்திரம் சில எல்லைகளுக்கு உட்பட்டுதான் இருந்தது. அந்த எல்லைகளுக்கு அப்பால் மினுங்கும் சொர்க்கமாய், ஆதாமிம் ஆப்பிள் பழமாய், திறந்து பார்க்க துடிக்கும் பெண்டோரா பெட்டகமாய் இந்த சுடுகாடும், ஆறும் இருந்ததில் வியப்பில்லைதான். பேய்கள் உலாவும் நடுக்கட்டான் பிரேதேச ஓடையில் குளிப்பதற்கு என்னை போன்ற சிறுவர்களுக்கு என்ன ஒரு உச்சகட்ட ஆசை இருந்திருக்க வேண்டும்? என்னதான் மறைந்து, ஒளிந்து குதியாட்டம் போட்ட போதிலும், தண்ணீரில் நனைந்த வெளுத்த முகமும், சிகப்பேறிய கண்களும், உடலில் காட்டமாய் படிந்திருக்கும் சேற்று வாசனையும் வீட்டில் காட்டிக் கொடுத்து விடும். அதற்கான அடியும் உதையும் அப்பா அம்மாவில் அன்றைய மனநலத்தை பொருத்துதான்! இந்த உதைக்கும் அடிக்கு பயந்து வீட்டிற்குப் பதுங்கி பம்மி சென்றாலும் என்னோடு குதியாட்டம் போட்ட மற்ற பொடுசுகளோ அல்ல அவர்களை செம்மையாக உதைத்த அவர்களது பெற்றோர்களோ எனது வீட்டிலும் வைத்தி வைத்துவிடுவார்கள்.. என்னால் இனமும் கூட அந்த 21ஆம் நம்பர் ஆற்று வாசனை நினைவு கூர முடிகிறது. ஏதோ முகம் தெரியா வயதில் குடித்த தாய்ப்பாலின் மணத்தைப் போலவே அந்த மழுங்கிய சேற்று வாசனை என்னை ஆழ்மன சஞ்சாரத்திற்கு இட்டு செல்கிறது. தமிழில் ‘அய்யகோ’ என்ற ஒரு சொல்பதம் உண்டு. துக்கத்தை மிகவும் அரட்டிக் கொண்டு ஒப்பாரி வைப்பதைப் போன்ற பிம்பத்தை இந்த வார்த்தை நிச்சயம் நினைவுறுத்தும். அப்படி ஆயிரம் தடவை எனக்கு அய்யகோ என்று பிளறி அழ தோன்றுகிறது அந்த ஆற்றை இப்போது பார்க்கும் போதெல்லாம். மடி வற்றிய கிழபசுவை அடிமாட்டுக்கு அனுப்பும் கோலமாய்தான் அந்த ஆற்றின் நிலையும் காணப்படுகிறது. சுற்றுபுற இரப்பர் தோட்டங்களையெல்லாம் மட்டமாக்கி, தொழிற்சாலைகளை நிறுவியதன் மூலம், 21ஆம் நம்பர் ஆறு இன்று தொழிற்சாலை கழிவுகளைத் தேக்கி வைக்கும் குளமாய் ஆகிபோனதில், வளர்ந்து வரும் பொருளாதரத்திற்குதான் நன்றியைச் சொல்ல வேண்டும். தொடரும்..........

வெள்ளி, 2 மார்ச், 2012

என்றென்றும் அன்புடன்

கதையைப் பற்றி ஒரு கண்ணோட்டம்

நான் எழுத பழகிய காலகட்டங்களில் புனையப்பட்ட கதையிது. இதனுடைய இலக்கிய வளமை எப்படி இருக்கும் என தெரியாமல், அந்த பதிம வயதில், என்னை வெகுவாக பாதித்த விஷயங்களைக் கதைகளாக உருமாற்ற முனைந்திருக்கிறேன்,

இன்றைய துரித உலகில் இணையம், ஐ-போன் என்று மூழ்கிவிட்ட பிரகிதிகளுக்கு, 15-20 வருடங்களுக்கு முந்தைய தொலைதொடர்பு சாதனாமான கடித வரைதலும், அதற்கான காத்திருப்பும் புரியுமா என தெரியவில்லை. தோட்டபுற இறுக்கங்களிலிருந்து விடுபட்டு, சுயமாக தொழிற்பேட்டைகளில் வேலை செய்ய தொடங்கிய, ஓரளவு படித்த, இலக்கிய ஆர்வமுள்ள பெண்கள் அப்போது எதிர்நோக்கிய ஒரு பிரச்சனைதான் இதுவும். மாத சஞ்சிகைகளிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பேனா நட்பு பெண்களின் மனமுதிர்ச்சியை விரிவாக்கிய போதிலும், சமூகம் மற்றும் ஒழுக்க விதிகளில் அது உண்டுபண்ணியத் தாக்கங்கள்தான் இந்த கதையின் பொறி.

சினேகமுடன்
இராஜேஸ் இராமசாமி

---------------------------------------------------------------------------------


"இதோ பாருடி, நீ சொல்லறது கதைக்கும் காவியத்துக்கும்தான்
வக்கணையா இருக்கும். மனுசியா உலகத்துல பொறந்துட்டா நாலு பேருக்கும், ஊருக்கும் பயந்துதான் வாழனும். இன்னையோட அவனுக்கு முழுக்கு போட்டுட்டு, ஒழுங்கா லட்சணமா பொம்பளையா இரு.”

மங்களத்தின் குரல் சமையறையைத் தாண்டி, நடுகூடத்தில் ஆயாசத்துடன் அமர்ந்திருந்த ப்ரியாவின் செவிமடல்களைத் தாக்கியது. உள்ளே மூண்ட கனல், வேகமாய் தலைக்கு ஏறி, அழுகையும் ஆத்திரமும்மாய் வெளிப்பட்டது.

“அம்மாகாரி கரடியா கத்தறாலேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? என்ன நெஞ்சழுத்தமும் ஆகாத்தியமும் இருந்தா, இப்படி புடிச்சு வச்ச புள்ளையாரு கணக்கா உட்கார்ந்திருப்ப?”

கறிக்கரண்டியோடு இடுப்பில் இருகைகளை ஊன்றிக் கொண்டு மங்களம், ப்ரியாவை உறுத்து பார்த்தபோது, இலங்கா இராட்சசி சூர்பணகையின் முகம்தான் நினைவுக்கு
வருகிறது.

“இன்னும் என்ன தெரியனும்னு ஆசைபடறம்மா? எத்தனை வாட்டி திரும்ப திரும்ப சொன்னாலும் ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? என்னை நல்லா புரிஞ்ச நண்பருக்குக் கடிதம் எழுதறது தப்பா? பேனா நட்புங்கறது புனிதமானது. நீ நி¨னைகிற மாதிரி காதல் கத்திரிக்காயெல்லாம் இதுல கிடையாது.”

ப்ரியா, நூறாவது முறையாக தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு இப்படி சொல்கிறாள். காலையில் தபால்காரர் பட்டுவாடா செய்த இரகுவின் கடிதம், இத்துணை ஆர்பாட்டத்தை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“ஒரு ஆம்பிள்ள மாசந் தவறாம ஒரு கன்னி பொண்ணுக்குக் கடுதாசி போட்டா என்னடி
அர்த்தம்? உனக்கும் அவனுக்கும் ஆசையில்லாமலா இந்த அக்கிரமம் ரெண்டு வருஷமா நடக்குது?உனக்கென்னடி இந்த வயசுல ஆண் சினேகம் கேட்குது? ஏதோ நாலு எழுத்து படிக்க வைச்சா, பேனா நட்பு மண்ணாங்கட்டின்னு கொழுப்பெடுத்து அலையற. விஷயம் வெளிய தெரிஞ்சு, தோட்டம் பூராவும் சந்தி சிரிக்க வைக்கனும்னு கங்கணம்
கட்டிகிட்டு திரியறியா?”

இதற்கு மேல், எந்த ஒரு இழிவார்த்தைகளையும் கேட்கமாட்டது, ப்ரியா தனது இரு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டாள். கண்களில் இருந்து
தடையில்லாமல் கண்ணீர் மாலை மாலையாக சுரந்து கன்னமேட்டை நனைத்தது.

“நீ எவனையாவது இழுத்துகிட்டு ஓடாமல் இருக்க, மொதல்ல உனக்கு ஒரு கூனோ குருடோ பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாதான், எனக்கு மனசு ஆறும். என் மானத்தையும் உசிரையும் வாங்கிறத்துக்கின்னே, எழவெடுத்து பொறந்திருக்க.”

மங்களம் பேச ஆரம்பித்து விட்டால், லேசில் ஓயமாட்டாள். அகப்பட்டவரை உண்டு இல்லை என்று பார்த்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பாள். எலும்பில்லாத நாக்கு, காதில் நாரசம் பாய்வது போல் கேவலமான வார்த்தைகளைச் சரமாய் சரமாய் பாய்த்து கொண்டிருக்கும். மங்களத்தின் கருநாக்குக்கு அவள் புருஷனே அடங்கியிருக்கும் போது, அவள் பெற்ற பெண் எம்மாத்திரம்?

இத்துணை வார்த்தைகளையும் மௌனமாய் மனதுக்குள் வாங்கி கொண்டு கல்லாய் சமைந்திருந்தாள் ப்ரியா. எதிர்த்து பேச திராணியற்று, நாக்கு மேல் அண்ணத்தோடு ஓட்டிக் கொண்டது. வேலை முடிந்து வீடு திரும்பிய களைப்பும் பசியும் சேர்ந்துக் கொண்டு அசதியை உண்டு பண்ணியது. பத்து மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலையில் லொங்கு லொங்குவென்று ஓவர்டைம் செய்து, இரவு எட்டு மணிக்கு உடல் வலியோடு திரும்பும் போது. ‘இந்தா’ என்று ஒரு வாய் காப்பி கொடுக்க கூட நாதியில்லை. வந்தவுடன் ரெக்கை முளைத்த ரெட்டைவால் குருவி மாதிரி சண்டை பிடிக்க ஆரம்பிதுவிட்டாள் மங்களம்.

வார்த்தைகளை அனாவசியமாய் வீசி, எதிராளியை அடியோடு சாய்க்கும் மங்களத்தின் வல்லமை, ப்ரியாவிற்குத் தெரிந்ததுதான். இருந்தாலும், இத்தனை நாள் மரத்து போயிருந்த இதயம், இன்று சுக்கல் சுக்கலாய் கண்ணாடி தெறிப்பது போல் சிதறுண்டு சின்ன சின்ன பிம்பங்களாய் அழுந்தது. வாய் விட்டு அழகூட முடியாமல், விம்மிய கேவலை நெஞ்சு கூட்டுக்குள் போட்டு அடக்கம் செய்துவிட்டாள். இனி ஒரு தரம், மட்டரகமான வார்த்தைகளைக் கேட்க அவளுக்கு சக்தி இல்லை.

இரவு படுக்கும் பொழுது, ஜன்னலோர கட்டிலின் வழி, நான்காம் பிறை மெல்ல கண் சிமிட்டியது. இந்த குறை நிலவை பற்றி, எத்தனை முறை இரகு அவளுக்குக், கதை கதையாய் எழுதியிருப்பான். இரகுவிற்குதான் எத்துணை கற்பனை திறன். அவனது கடிதமே ஒரு கவிதை போல் பொறுக்கி எடுத்த வார்த்தைகளை, பேனா மையினால் கோர்த்து சித்திரமாய் விரியுமே. இப்படி பொத்தி வைத்த மல்லிகை மொட்டுக்களாய், இரகுவின் நினைப்பு மெல்ல அரும்பி, மனம் முழுவதும் வாசனையைப் பரப்பியது.

ப்ரியா, ஐந்தாம் படிவத்தோடு, படிப்பிற்கு முழுக்கு போட்டாலும், அவளது இலக்கிய உள்ளம், கவிதைகளையும் கதைகளையும் தேடி தேடி படிக்கும். இந்த இலக்கிய இரசனையும், படித்ததை மனதுக்குள் உள்வாங்கி அசைபோடும் குணமும்தான், இரகுவை அவளுக்கு அறிமுகப்படுத்தியது. ஒருமுறை கதிரவன் மாத இதழின், வாசகர் விழாவில் நடந்த திடீர் கவிதை போட்டியில் இரகுவும் அவளும் பரிசு பெற்ற போதுதான், இரகுவை முதன் முதலில் பார்த்தாள்.

“வாழ்த்துக்கள் மிஸ்டர் இரகு,உங்க கவிதை உண்மையிலேயே அருமை. இந்த பத்து
நிமிஷத்துல எப்படி ஆள அடிக்கிற மாதிரி உங்களால எழுத முடியுது?”
பாராட்டுக்குக் கர்வபடாமல், சற்று வெட்கி சிரித்த அவனைப், ப்ரியாவுக்கு நிரம்ப பிடித்திருந்தது. அதன் பிறகு, அவன் சொன்ன வார்த்தைகள், அவளது புருவத்தை உயர்த்தின.

“உங்க கவிதைதான், எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ப்ரியா?”

‘நதியோடும் போகாமல்
கரையோடும் நில்லாமல்
நீர்சுழிப்பில் நாணலாய் வளைகிறது
பெண்மனம்

நனவோடும் இல்லாமல்
கனவோடும் வாழாமல்
கண்ணீரில் கரைந்து
கானலாய் சிரிக்கின்றது
பெண்ணின் மனம்.’

“ரொம்ப உணர்ந்து எழுதியிருக்கீங்க. எப்படி பெண்களால, உள்ளே அழுதுக்கிட்டு, வெளியே சிரிக்க முடியுது?”

பழகிய குறுகிய நேரத்தில், மனதைப் படித்தவனாய், அவளை நோக்கி கேட்டபோது, ப்ரியாவுக்கு நா எழவில்லை. சின்ன முறுவலைப் பூத்துவிட்டு
“இதெல்லாம் சொல்லி விளங்காது இரகு. ஒரு சமயம் நீங்க பொண்ணா பொறந்திருந்தா இந்த மாதிரி கேட்டிருக்க மாட்டிங்களோ என்னவோ?. “

“ஐயோ, உங்க அளவுக்கு என்னால தத்துவம் எல்லாம் பேச
முடியாது. என்னால முடிஞ்சது எல்லாம் இதுதான். என்று நட்போடு அவனது வலது கையை
நீட்டினான். முதல் முதலில் எனக்காக,எனது மனதுக்காக ஒருவன் கை குலுக்கி
பாராட்டியபோது உள்ளுக்குள் மனம் பூ பூத்தது. அகலமாய் விரிந்த அவனது கண்களைப்
பார்த்தபோது, அதில் துளியும் கல்மிஷம் இல்லாது, சினேகிதமாய் சிரித்தது. அன்றைய பொழுதிலிருந்து, இருவரும் நட்பாக கடிதங்களை வரைய ஆரம்பித்தோம். சிடு சிடு
அம்மாவுக்கும், முசுடு அப்பாவுக்கும் ஒற்றை மகளாய் பிறந்து, மன வெம்மையை ஆற்றமாட்டாது தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, இரகுவின் கடிதம் வேனிற்கால இளம் வெயிலாய் மனதுக்கு இதம் அளித்தது. இத்தனைக்கும், எனக்கு நெருங்கிய தோழிகள் சிலர் இருந்தாலும், இரகுவிடம் தோன்றிய அன்னியோனியம் வேறு எவரிடமும் ஏற்படவில்லை
என்றுதான் சொல்ல வேண்டும். எனது தோழிகள், என்னையும் இரகுவையும்
இணைத்து கேலி செய்தபோதிலும்,என்னுள் உறங்கி கிடந்த இளமை சற்றும்
கிளர்ந்தெழவில்லை. சத்தியமாய் எனக்குக் காதல் உணர்வே ஏற்படவில்லை.

மிகவும் நெருக்கமான அந்தரங்க தோழியிடம் பேசுவது போல்தான் எனது கடிதங்கள் பெரும் பாலும் இருக்கும். ஒரு சமயம் ,வாஞ்சையும் பாசமும் கலந்து ஒரு சகோதரனுக்கு அன்பொழுக எழுதுவது போல் அவ்வளவு உருக்கமாக இருக்கும். இன்னொரு சமயம், மிகுந்த சினேகத்துடன் தனது நண்பனுக்கு உரிமையோடு வரையும் மடலாக அமையும். இந்த இரண்டு வருட கடித போக்குவரத்தில், தப்பி தவறியும் எங்களது கடிதத்தில் காதல் நெடி துளியும் அடித்ததில்லை. பெற்ற தாயும், சுற்றி உள்ள தோழிகளும், அந்த அப்பழுக்கற்ற அன்பிற்குக் காதல் முலாம் பூசின போதுதான், மனம் சோர்வடைந்து, அந்த ஒரு மாதம் இரகுவிற்கு எழுதுவதைத் தவிர்த்தேன். அந்த ஒரு மாத இடைவேளை மூன்று மாதங்களாக நீடித்தபோதுதான், திடீரென, ஒரு நாள் வீட்டில் அனைவரும் இருக்கும் சமயம்
பார்த்து உள்ளே நுழைந்தான் இரகு.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, அவனை பார்ப்பதில் மகிழ்சியும் நிம்மதியும் ஏற்ப்பட்டாலும், எனது அம்மாவைக் கண்டு மனம் பதைபதைத்தது. அம்மாவுக்குச் சாதாரண நாளிலே உடம்பெல்லாம் மூளை,இந்த மூன்று மாதமாய் எனது முகத்தில் வழக்கமான
செழிப்பு தொலைந்து போய், இன்று அதிசயமாய் பூத்த போது, வந்திருக்கும் விருந்தாளி இரகுதான் என்று சட்டென்று புரிந்து போனது. வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல், இத்தனை நாள் காய்ந்து போன நாக்கு, வசமாய் இரகுவைப் பிலு பிலுவென பிடித்துக் கொண்டது.

“ஏண்டாப்பா, நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிக்கூட பொறக்கல? வயசுக்கு வந்த பொண்ணுக்கு இப்படி கண்டவன் எல்லாம் கடிதாசு எழுதறேன்னு பேர்ல்ல அக்கிரமம் பண்ணா, கேட்க நாதியில்லைன்னு நினைச்சுக்கிட்டியா? மங்களம் ஆரம்பித்து விட்டாள். நான் ஏதுவும் செய்வதறியாது, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

தன்னை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல், விழிக்கும் இரகுவைப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது.

“இதோ பாருப்பா, நாங்கெல்லாம் மானம் ரோசம்னு நாலும் பார்த்து வாழற மனுஷங்க. உனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சினா, பெத்தவங்ககிட்ட சொல்லி நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கோ, அதை விட்டுட்டு என் மகள் வாழ்க்கையில வீணா குழப்பம் பண்ணாதே? நாளைக்கு இவளுக்கு ஒழுங்க கல்யாணம் காட்சின்னு நடந்தாதான், நாங்க தலை நிமிர்ந்து நடக்க முடியும்.” அம்மா சற்று ஓய்ந்தாள்.

இரகு சற்று விஷயம் புரிந்தவனாய் என்னை இரக்கதோடு பார்த்தான். என்னுடைய கவிதையின் வரி இப்பொழுதான் அவனுக்கு புரிகிறது போலும், நனவோடும் நில்லாமல் கனவோடும் வாழாமல் கண்ணீராய் கரைகிறது பெண்ணின் மனம்.

“ஆண்டி, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ளே எதுவும் கிடையாது. ப்ரியா எனக்கு பாசமான சினேகிதி, என்னோட நலன்லே அக்கறை உள்ள தோழி. புனிதமான புருஷன் பொண்டாட்டி உறவு மாதிரி, எங்களோட நட்பும் பவித்திரமானது. இதை இப்படி அனியாயமா கொச்சை படுத்தாதீங்க.”

“புனிதம், பவித்திரமெல்லாம் மேடைக் கட்டி பேசதான் நல்லா இருக்கும் தம்பி. நாளைக்கே
இவளுக்கு கல்யாணம்னு ஆகும்போது, இந்த கருமாந்திரமெல்லாம் தெரிஞ்சா, இவ வாழ்க்கை என்னத்துக்கு ஆவறது? எவனாவது இவளைக் கட்டிக்குவனா?”

“ஏன் இப்படி ஆண் பெண் நட்பை சந்தேக கண்ணோடு பார்க்கறீங்க? இப்ப உங்க பிரச்சனை, ப்ரியாவுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகனும், அவ்வளவுதானே?”
அம்மா, ஆமோதிப்பது போல் மறு பேச்சு பேசவில்லை.

“ஏன், நானே ப்ரியாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி தரக்கூடாது? என்னாலதானே இவ்வளவு பிரச்சினை?” என்று நிறுத்தி என்னையும் அம்மாவையும் மாறி மாறி
பார்த்தான்.

எனக்கு மனது திக்கென்றது. எங்கே என்னை திருமணம் செய்து கொள்ள முனைந்துவிடுவானோ என்ற அசட்டு அச்சம் விடு விடுவென மன மூலைமுடுக்கெல்லாம் பரவியது. அப்படி ஒன்று நடந்தால், இத்தனை நாட்கள் அம்மாவின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகிவிடுமே என்ற கிலேசம் மூர்ச்சையடைய செய்தது. இவற்றையெல்லம் விட, இரகுவின் மேல் வைத்திருந்த நம்ம்பிக்கையும், தூய நட்பும் என்னாவது? அனைத்தும் நட்பு என்ற வேஷம் பூண்ட பொய்மைகளா? என்றென்றும் அன்புடன் என அவன் கடிதங்கள் முடியும் போது, அந்த சின்ன வாக்கியத்துக்குள் இத்தனை கற்பிதங்களும் ஆசைகளும் புதைந்து உள்ளதா? இவ்வாறு நினைக்கும் போது, என்னையறியாமலே கண்களில் நீர் குபுக்கென ஊறியது. அவனது சொல்ல போகும் வார்த்தைகளில்தானே எங்களது நட்பின் உயிர்நாடியே உள்ளது.

“எங்க அண்ணன் பேங்குல நல்ல வேலையில கை நிறைய சம்பாதிக்கிறாரு. ப்ரியா எனக்கு எழுதற கடிதத்தையெல்லாம் நானும் அவரும்தான் படிப்போம். ப்ரியாவோட இரசனையும் மனசும் அவருக்கு ரொம்ப புடிச்சுருக்கு, அவளையே திருமணம் செஞ்சிக்க ஆசைபடறாரு. இதை நானே, காலம் கனிஞ்சி வர்றப்ப சொல்லலம்னு இருந்தேன். இன்னைக்கு
உங்க குழப்படியால, சொல்ல வேண்டியதா ஆயிடுச்சு.” என்று சொல்லி தனது அண்ணனின் புகைப்ப்டத்தை காட்டியபோது ப்ரியாவுக்கு எதுவுமே புரியவில்லை.

அம்மாவுக்கு உள்ளூர சந்தோஷமாகதான் இருந்தது, எந்த சிரமமும் இல்லாது மகளுக்கு வங்கி வேலையில் கண்ணுக்கு இலட்சணமாய் மாப்பிள்ளை கிடைக்கும் போது கசக்கவா செய்யும்.

“நாளைக்கே எங்க அம்மா அப்பா, அண்ணனைக் கூட்டிக்கட்டு பொண்ணு பார்க்க வரோம். சரி, இப்பவாவது எங்க அண்ணிகிட்டே பேசலாமா” என்று கேட்டபோது, எனக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. சத்தியமாய் இந்த அழுகையில் எந்த சந்தேகமும் துக்கமும் இன்றி, எனது அஞ்ஞானத்திற்காக நொந்துக் கொண்டேன்

“ப்ரியா, தம்பிக்கு குடிக்க காப்பிக் கொடும்மா”, என்று பாசம் ஒழுகும் அம்மாவின் குரலைக் கூட சட்டை செய்யாது, இரகுவின் கைகளை பற்றிக் கொண்டு குலுங்கி குலுங்கி
அழுகிறேன். அப்போதுதான் சில அழுகைகள் கூட ஆனந்தமாய் இருக்கும் என புரிகிறது. இவன் என்றைக்கும் ‘என்றென்றும் அன்புடன்’ இரகுதான்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

வீணையடி நீ எனக்கு

இவ்வளவு அருகில், அவரை இப்போதுதான் நிமிர்ந்து பார்க்கிறேன். ஓம குண்டத்திலிருந்து புகைந்து வரும் நெடி புகையின் வாயிலாக அவரை, அவர்தான் கோபியை, இன்னும் சில நொடி பொழுதுகளின் எனது பெண்மைக்கு ஒட்டுமொத்த உரிமையாளனாக போகும் எனது கணவனை, அந்த கணம்தான் அவ்வளவு அருகில் இருந்து பார்க்கிறேன். மணபெண் என்கிற கூச்சநாச்சமெல்லாம் கடந்து போன பருவத்தில், அவரை அப்படி பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட லஜ்ஜையோ நாணமோ இல்லை. இந்த முப்பத்தியாறு வயதில் என்னையொத்த பெண்களெல்லாம் நிறைந்த சுமங்கலியாய், இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் வளைய வரும் போது, இன்னும் நான் மட்டுமே புதுபெண்ணாய்! இருந்தபோதிலும், பெண்மைக்கான உணர்வுகளையெல்லாம் தொலைந்து அதிக நாளாயிற்று என எனது நாள்பட்ட மாதவிலக்கே சொல்லாமல் சொல்லியது. அது என்னவோ, என்னால் இந்த வயதிலும்கூட மிகைப்பட்ட உணர்வுகளோடு இணைந்திருக்க முடியவில்லை.

அம்மா மணவறையின் ஓரத்தில், யாருக்கும் புலப்படாமல் மறைந்து தனது அமங்கலி கோலம் தனது மகளின் மங்கல நாளை மாசுபடுத்த கூடாதென்று மருகி, கண்களில் நீரைச் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளது உதிரத்தில் உதித்த மற்ற பெண்கள், என்னை விடவும் வயதில் இளைய சகோதரிகள் மணவறை பக்கத்தில் பாந்தமாய் நின்று, புடவைத்தலைப்பால் இல்லாத வெப்பத்திற்கு வெறுமனே விசிறிக் கொண்டிருக்கிறார்கள். நெற்றி வகிட்டு குங்குமமும் சுண்டுவிரல் பருமன் தாலிக்கொடியும் இவர்களுக்கு தனி கர்வத்தைக் கொடுத்ததில் ஐயமில்லைதான். இவர்களுக்கு அமைந்தது போல், அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு வாழ்க்கை அமையவில்லையே. கல்யாண கனவுகள் எல்லாம் கலைந்து, பேரிளம் பெண்ணாய் நின்ற இத்தனை காலத்தில் எனக்கும் கல்யாணம்கார்த்தியெல்லாம் நடக்கும் என சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லைதான். இன்னமும் கூட என்னையே கிள்ளி பார்க்க தோன்றுகிறது. ஏதோ சின்ன பிள்ளைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடுவதைப் போலதான் எனக்கு இந்த வைபோகம் தெரிகிறது.

ஓம புகையின் கரிப்பில் பளபளக்கும் கண்களோடு அவரை மீண்டும் பார்க்கிறேன். எனது பார்வையின் ஊடுருவல் அவரை எதுவோ செய்திருக்க வேண்டும். மெதுவாக தலையசைத்து என்னை திரும்பி பார்க்கிறார். என்னைப் பார்க்கும் பாவனையில் ஒரு சினேகிதம், மின்னல் ஒளி கீற்றாய் பளீரிடுகிறது. இமைகளைத் தாழ்த்தி மீள்கையில், எனது அருகே வசந்தியும் சாந்தாவும் பட்டிலும் பவுனிலும் ஜொலித்து கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது. என்னையும் அறியாமல், எனது கண்கள் கழுத்தையும் கைகளையும் தடவி பார்க்கிறது.

இந்த க்ஷணம், எனது மேனியில் பொன்னாக பூட்டப்பட்டது எனது பழைய ஒற்றைக் கல் மூக்குத்தியும், அத்தை தனது கழுத்திலிருந்து கழற்றி போட்ட இரட்டைவட ஆரமும் மற்றும் கோபி பரிசத்தில் கொடுத்த சங்கிலியும் தவிர வேறெதுவும் இல்லை. தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை ஒப்பனை நகைகளைப் போட்டு நிரப்பிக்கொண்டுதான் அக்கினியின் முன்னே அமர்ந்திருக்கிறேன். இந்த போலி பூச்சுகளும் பித்தளையும் வேண்டாம் என்று எடுத்து சொன்ன போதிலும், அம்மாதான் கல்யாண பெண் நிறைக்கழுத்தாய் இருக்க வோண்டும் என சொல்லி இவைகளைப் பூட்டிவிட்டாள்.

இத்தனைக்கும் பக்கத்தில் நான் அருமையாக சீர் செய்து தாரை வார்த்த எனதருமை தங்கைகள் ஒன்றுக்கு இரண்டு பேர் இருந்தும், ஒருத்தி கூட ‘இந்தாக்கா’ என்று தனது கழுத்திலிருந்தோ அல்ல கையிலிருந்தோ ஒரு குந்துமணி தங்கத்தையும் கழற்றி தர முன் வரவில்லை. அப்படி கொடுத்தாலும் வாங்கி கொண்டு அழகு பார்க்கும் சராசரி பெண்ணாய் நானும் இல்லை. அப்படி ஒருத்தியாவது முன் வந்திருந்தால் எனக்குள் ஒரு சின்ன சந்தோஷ மலர் பூத்திருக்கும். இந்த மணவறையில், கோடானு கோடி தேவர்கள் முன்னிலையில் இம்மாதிரி மனதை போட்டு உழப்பி கொண்டிருக்க மாட்டேன்.

இவர்களாவது பரவாயில்லை, கல்யாணத்திற்காவது வந்திருக்கிறார்கள், எனது முதலாவது தங்கை நிர்மலா இன்னும் எட்டியே பார்க்கவில்லை. அம்மா அவளுக்காகதான் கோவிலின் வாசலுக்கும் மனவறைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறாள். அவள் வர மாட்டாள் என எனக்கு நிச்சயம் தெரியும். பாவம் அம்மாதான் இன்னும் மனதில் நப்பாசைகளோடு வளைய வருகிறாள். இத்தனைக்கும் இந்த நிர்மலாவுக்குதான் நிறைய சீர் செனத்தி செய்து திருமணம் செய்து வைத்தேன். இன்னும் அம்மாவுக்கே தெரியாது இவளது காதலை இரு வீட்டாருக்கும் தெரியாமல் எப்படியெல்லாம் பாடுபட்டு நிச்சயயிக்கப்பட்ட திருமணமாக செய்து காட்டினேன் என்று. அம்மா அந்தகால மனுஷி, அவளுக்கு காதலும் பஞ்சமா பாவங்களும் ஒன்றுதான். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவளது கட்டுபெட்டிதனங்களும், அதன் மேல் கொண்ட மூர்க்கமான பற்றுதலும் நிறைய ஆக்கிரமிக்க செய்தன.

அப்பா இறந்த இந்த பதினைந்து வருஷங்கள் எனக்குள் எவ்வளவோ மாறுதல்களையும் போதனைகளையும் நதி நீர் தடயங்களாய்ச் விட்டு சென்றுள்ளன. எனது இருபத்தி ஓராவது வயதில் எஸ்.டி.பி.எம் பரீட்ச்சையெல்லாம் முடிந்த ஒரு நாளில் அப்பா தனது சாப்பாட்டு கடையில் சற்று நேரம் கண் அசருகிறேன் என்று சொல்லி படுத்தவர்தான், அதற்கு பிறகு எழுந்திருக்கவேவில்லை. எனது நினைவு செல்களிருந்து இன்னமும் தொலைந்து போகாமல் இருக்கிறது அன்று அம்மா அழுத அழுகை. அம்மாவுக்கு அப்பா இறந்தது கூட அவ்வளவு வேதனை கிடையாது. வயதுக்கு வந்த நான்கு பெண்களையும் இப்படி நட்டாற்றில் தவிக்க விட்டு போய் விட்டாரே என்ற அதிர்ச்சியே அவளை நிலை குலைய வைத்து ஓப்பாரி பாட வைத்தது. அன்று அம்மா தனது கணவனுக்காக சிந்திய நீரை விட வளமான வாழ்க்கைக்கு காத்திருக்கும் தனது புதல்விகளை நினைத்து அழுததுதான் மிக அதிகமாய் இருந்தது.

அதனை நினைக்கும் போது, எனக்கு என்னை அறியாமலே மங்கல நாதம் முழங்கொண்டிருக்கும் இந்த சுப வேளையிலும் கண்ணீர் கண்களில் பாலம் கட்டுகிறது. இமைகளில் தேங்கிய நீரை சிதற விடாமால் இருக்க மூக்கை உறிஞ்சுகிறபோது அத்தையின் ஆதரவான வளைக்கரங்கள் எனது தோள்களைத் தொட்டு ஆசுவாசப் படுத்துகிறது. இது ஓமப் புகையால் எழுந்த கண்ணீரல்ல என அத்தைக்கு மட்டுதான் தெரியும். இந்த பதினைந்து வருட பாலைவன வாசத்தில் பாதங்கள் கொப்பளிக்க சுடு மணலில் நடந்து போகையில் இளைப்பாற நிழலாய் இருந்தவர்களில் இந்த அத்தை முதன்மையானவள். சொந்த இரத்த பந்தங்களே உதவ தயங்கும் இந்த காலத்தில், நெருங்கி பழகிய ஒரே தோஷத்திற்காக எனக்கும் எனது குடும்பத்திற்கு ஆதரவை அள்ளி வழங்கியவள். அன்பை அலகுகள் இன்றி எல்லோர் நெஞ்சிலும் ஊற்றியவள். முன்னெச்சரிப்புகள் இன்றி வலிய வரும் எத்தனையோ பிரச்சனைகளுக்குத் துணையாய் இருந்து தோள் கொடுத்தவள். இப்படிதான், நிர்மாலா தானாக தேடிக் கொண்ட காதல் வாழ்க்கைக்கு சிக்கெடுத்து வழியும் காட்டினாள். மனம் உறுதிபடாத இளம் வயதில் ஆளைச் சாய்க்கும் பிரச்சனைகளுக்குத் தலையைக் கொடுக்கும் போது, அதன் வடுவும் நிகழ்வும் அழியாமலேயே மூளைக்குள் தங்கி விடுகிறது. அதில் ஒன்றுதான் இந்த நிர்மலாவின் கல்யாணமும்.

திடுபென்று ஒரு நாள் நிர்மலா, ஒருவனை அத்தை வீட்டிற்கு அழைத்து வந்து மணந்தால் இவனைதான் மணப்பேன் என சண்டித் தனம் பண்ணியபோது அதிர்ச்சியில் உறைந்த என்னை மீள்நிலைக்குக் கொண்டு வந்தவளே இந்த அத்தைதான்.
“ஏண்டி அக்காகாரி குத்துகல்லா இருக்கறப்ப உனக்கென்னடி இவ்வளவு சீக்கிரம் புருஷன் கேட்குது. ஊமை மாதிரி இருந்துகிட்டு பண்ணிகிட்டு வந்திருக்கிற வேலைப் பாரு” அத்தை என்னைப் பார்க்க, நான் ‘என்னடி’ என்ற கதியில் அவளைப் பார்க்க, அவளோ அவனைப் பார்க்க...

‘இதோ பாருங்க, நானும் நிர்மலாவும் இரண்டு வருஷமாய் லவ் பண்றோம். எங்க வீட்டிலேயும் எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்கதான் எப்படியாவது கல்யாண தரகர்கிட்ட பேசி இதை பெரியவங்க பார்த்து வைச்ச கல்யாணமா நடத்திவைக்கணும். ஏன்னா எங்கம்மா காலத்து மனுஷி, அவங்களுக்கு இந்த காதல் கத்தரிகாயெல்லாம் கொஞ்சமும் ஆகாது’

“அட கிரகாச்சாரமே, செய்யறத செஞ்சுட்டு, இப்ப முடிச்சி வைக்க மட்டும் அக்கா வேணுமா? ஏண்டி அவர்தான் ஆம்பிளை, வேத்து மனுஷன். நீ அவ கூட பொறந்த பொறப்புதானே, உனக்காவது கொஞ்சம் அறிவு வேணாம். அக்காவுக்கு ஒரு நல்லது நடந்த பொறவு நீ எவனையாவது இழுத்துகிட்டு ஓடேன், யார் உன்னத் தடுத்தா”
அத்தைக்கு கோபம் கொந்தளித்திருக்க கூடும், வார்த்தைகளை அள்ளி வீசினாள்.
“அத்தை, அக்கா முதல்ல கல்யாணம் பண்ணிகிட்டா மத்த மூனு பொண்ணுகளை யார் கரையேத்தறது? ஏதோ என்னால முடிஞ்சவரை கஷ்டம் இல்லாம ஒரு நல்ல மாப்பிள்ளையா தேடிக் கொண்டு வந்திருக்கேன். முடிஞ்சா மாப்பிள்ளை வீட்டில மதிக்கிற மாதிரி கல்யாணம் செஞ்சு கொடுங்க இல்ல என்னை ஏதாவது ஒரு பாழுங்கிணத்துல தள்ளி விட்டிருங்க” என நிர்மலா மூக்கை உறிஞ்ச தொடங்க இப்படிதான் அவளது திருமணம் நடந்தேறியது.

அம்மாவிற்கு ஏதேதோ சமாதானங்கள் செய்து, மாப்பிள்ளை வீடு மெச்சுமாறு நகை, சீர்செனத்தி எல்லாம் செய்து ஓய்ந்தபோது, அம்மாவில் நகைகளில் பாதி தீர்ந்து அப்பாவின் சேமிப்பும் கரைந்திருந்தது. அம்மாவுக்கும் அத்தைக்கும் இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, நிர்மலா செய்து தொலைத்த காரியத்திற்கு ஈடாக இத்தனையும் செய்ய வேண்டியிருந்தது. நான் காதலைக் கொலைக்குற்றம் என்றோ ஈனச்செயல் என்றோ சொல்லவில்லை. காதல் புரிபவர்களுக்கு அந்த காதலை நிறைவேற்றும் மனவேகம் கொஞ்சமாவது இருக்கவேண்டும். இதுவே நிர்மலாவின் காதலன் அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொண்டு என் முன்னே நின்றிருந்தால்கூட மனமாற வாழ்த்தியிருப்பேன். அந்த காதலின் உறுதியை, அது தரும் வாழ்வு பற்றியதான நம்பிக்கையை மெச்சியிருப்பேன். ஆனால் இங்கு நடந்தது என்னவோ காதலின் பேரால் நடத்தப்பட்ட பகடையாட்டம். காதலைப் பிரகடன படுத்த துணிவும், அது கொடுக்கும் துன்பங்களை எதிர் நோக்கும் மனவலிமையும் வேண்டும், அது உண்மையான காதலாக இருக்கும் பட்சத்தில்.

எப்போது மூத்த தங்கையின் திருமணத்தைக் கன்னிபெண்ணாய் முன்நின்று நடத்தி வைத்தேனோ, அன்றைய தினத்திலிருந்து எனக்கு வந்து கொண்டிருந்த இரண்டு மூன்று வரன்களும் சுத்தமாய் நின்று போயிற்று. அது பற்றி எந்த பிரஞ்சையும் இன்றி, என்னுடைய பொழுது உணவகத்திலும், நித்திய கண்டம் பூர்ண ஆயுசுமாய் முளைத்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குமே சரியாய் இருந்தது.

எனக்குதான் படிப்பு என்பது பாதியிலேயே பின்னப்பட்டு போனாலும், தங்கைகளாவது தொடர்ந்து படிக்கட்டுமே என்று காசை செலவழித்தால், இந்த பாழாய்போன நிர்மலா கல்லூரியை முடிக்கும் முன்னரே தனது காதலை நிறைவு செய்து விட்டாள். நிர்மலாவாவது தட்டு தடுமாறி தொழிற்கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் கல்யாணமாகி புருஷன் வீடு சென்றாள். ஆனால் இந்த சாந்தாவின் பாடுதான் வெகு மோசம். சாந்தாவை எஸ்.பி.எம் பரிச்சை எழுத வைக்கவே பிரயத்தனப்பட வேண்டியதாய் விட்டது. அதன் பிறகு தனக்கு படிப்பு சுட்டு போட்டாலும் வராது என கடையிலேயே ஆணி அடித்தார் போல் உட்கார்ந்துவிட்டாள். கடையில் அவளது மிடுக்கும், எடுப்பும் கண்ட அவளது இன்றைய கணவன், தானே ஆசைப்பட்டு வீட்டிற்கு பெண் கேட்கவே வந்துவிட்டான். அம்மா என்னைதான் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என சந்தோஷ குதியலாய் ஓட, அவளைப் புரிய வைத்து வந்த சம்பந்தத்தைச் சாந்தாவுக்குப் பேசி முடித்ததில் எனது ஆவி பாதி கரைந்து போயிருந்தது.

மூத்த இரு தங்கைகளை ஒப்பேற்றி, கடைகுட்டி தங்கையைப் பல்கலைகழக அளவிற்கு படிக்க வைத்து நிமிர்கையில் எனது நெற்றியில் ஒரிரண்டு மயிர் இழைகள் நரைத்து பல்லைக் காட்டி கொண்டிருந்தன. பல்கலைகழக வாசம் கொடுத்த சுதந்திரமும் வாழ்க்கையைப் பற்றிய சீரிய பிரச்சனைகள் ஏதுமற்ற சூழ்நிலையில், அவளது மனம் காதலுக்கு வசப்பட்டது ஆச்சரியமில்லைதான். மாப்பிள்ளை வீட்டில் பிக்கல் பிடுங்கல் இல்லாவிட்டாலும், வசந்திக்கு அவளது திருமணம் தனது இரண்டாவது அக்கா நிர்மலாவின் திருமணத்தைப் போல் சீரோடும் சிறப்போடும் நடக்க வேண்டும் என வீம்பு நிறையவே இருந்தது. தனது கல்வி தகுதிக்கு ஏற்ற ஆடம்பரம் வேண்டும் என அடம் பிடித்தாள். அப்போதுதான் சாந்தாவின் கல்யாணத்தினால் ஏற்பட்ட கடனை ஒருவாறாக அடைத்து சிறிது ஆசுவாசபடுகையில் மறுபடியும் இடியென இன்னொரு கடனுக்கு ஓட நேர்ந்தது. அம்மா ஓரமாய் நின்று கண்ணீர் வடித்தாள். அவளால் முடிந்தது அவ்வளவுதான்.

வசந்தியின் கல்யாண செலவுக்காக நான் அல்லாடிய போதுதான், இந்த கோபி எனக்கு கடவுளென கை கொடுத்தார். அத்தையின் தூரத்து உறவினரான கோபி வங்கியொன்றின் வேலை செய்பவர். வசந்தியின் கல்யாணம் பொருட்டு, குடும்ப சொத்தான சாப்பாட்டு கடையை அடகு வைக்க சென்ற போதுதான் அவரைப் சந்தித்தேன். இன்னமும் கூட அவரது முகம் எனக்கு துல்லியமாக பதியவில்லை. இதையெல்லாம் விட, தனது குறை வளர்ச்சியடைந்த இடது பக்க காலைத் கையினால் தாங்கி விந்தியடி நடந்து என்னை அன்போடு வரவேற்கையில் ஒரு கணம் திகைத்துதான் போனேன். அந்த ஒரு சொற்ப வினாடிகள்தான் வாழ்க்கை, தனது முழு அர்த்ததையும் எனக்கு முழுவதாய் எடுத்து காட்டியது. இத்தனை நாள் எனது விடியா வாழ்வை எண்ணி அங்கலாயித்த மனதிற்கு, நம்மை விடவும் அதிஷ்டகட்டைகள் நிறைய உள்ளனர் என்பதைத் தெளிவாக்கியது.

இவைகள்கூட எனக்கு ஆச்சரியம் இல்லைதான். ஆனால் சூம்பிப் போன காலோடு துறு துறுவென எனக்கு வேண்டியதை எந்த ஒரு தடங்களும், முக சுழிப்பும் இன்றி, தனது உடற்குறை எந்த வடிவிலும் மற்றவரது பரிதாபத்தை ஈர்க்காவண்ணம் செயலாற்றியதுதான் எனது உச்ச கட்ட ஆச்சரியம். அதற்கு அத்தை சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு அவரிடத்தில் ஒரு மதிப்பையும், சற்றே பிரேமையையும் உண்டு பண்ணியது.

“உனக்கு குடும்பங்கிற விஷயத்துல ஊனம். வீட்டு நிலவரம் தெரியாத தங்கச்சிங்க. அப்பாவி அம்மா. பாதியிலே பரலோகம் போன அப்பா. இதெல்லாம் உன்னை சுத்தி இருக்கிற ஊனம். ஆனா அவனுக்கு தன்னோட அங்கமே ஊனபட்டு பழுதடைஞ்சி இருக்கு. ஆனா ஒரு விஷயத்துல நீங்க ரெண்டு பேருமே உசந்து இருக்கீங்க. உன்னோட குடும்ப பிரச்சனைகளை ஒண்டி பொம்பளையா நின்னு சமாளிச்சு, அந்த தங்கச்சிங்களுக்கு ஒரு வழியைக் காண்பிச்சிட்ட. அவனுக்குக் கால் ஊனமா இருந்ததாலும் கொஞ்சம் கூட தாழ்வு எண்ணமே இல்லாம படிச்சி இன்னைக்கு எல்லோர் மாதிரியும் தலை நிமிர்ந்து நிக்கிறான். உனக்கும் அவனுக்கும் என்ன ஒரு ஒற்றுமையினா, நீ கல்யாணமே வேணாமுனு தள்ளி நிக்கிற, ஆனா அவனை அவனோட ஊனத்தக் காரணம் காட்டி எந்த பொண்ணும் வேண்டாமுனு தள்ளி வைக்குதுங்க. அந்த வகையில நீ கொஞ்சம் கொடுத்து வைச்சவதான்டி”
அத்தையின் அந்த கடைசி வார்த்தைகள்தான் எனக்கு அவர் மீது ஒரு மரியாதை கலந்த ஒரு மையலை வளர்திருக்க வேண்டும்! அதன் பிறகு சினேகமாய் சின்னச் சின்ன புன்னகைகளைப் பரிமாறிக் கொள்ள தொடங்கினோம். அத்தையின் மூலம் எனது குடும்ப நிலையை அறிந்து, அவருக்கும் என் மீது ஏதோ ஒரு வாஞ்சை ஏற்பட்டிருக்க கூடும். அது அவ்வபோது திடீர் விஜயங்களாய் எனது உணவகத்திற்கு அவரை வரவழைத்திருக்க கூடும். எங்களுக்குள் பொதுவாய் அமைந்த சாம்பல் பூத்த துயர கங்குகள்தான் இந்த அன்புக்கு அடிதளமாய் இருந்தது. உனது சுமைகளுக்குத் தோளாய் நானிருக்கிறேன், எனது கால்களுக்கு வலுவாய் நீ இரு என்ற ஸ்திதியில்தான் எங்களின் பிரேமை உயிர்ப் பெற்றது. இது என்ன வடிவிலான உணர்வு என்று கூறு போட்டு ஆராய முற்படவில்லை. ஆனால் ஒன்று மட்டிலும் நிச்சமாய் புரிகிறது. இதில் நிர்மாலாவைப் போல தந்திரமிக்க உறவோ அல்ல வசந்தியை போல் தனது சுகமே பிரதானம் என்ற சுயநலமோ அல்ல சாந்தாவைப் போல் உடல் வசீகரமோ கடுகதன்னையும் இல்லை. ஒருவருக்கொருவர் ஆயுள் பரியந்தம் உதவியாய் இருப்போம் என்ற உணர்வே எங்களில் உறவில் மேலோங்கி நின்றது. கோபியை நினைக்கும் போதெல்லாம் அவரது முகமோ அல்ல பின்னப்பட்ட அவரது அங்கமோ எனது மனகண்களுக்குப் பிரசன்னம் ஆவதில்லை. மாறாக அவரது தன்னம்பிக்கையும், மற்றவர்களுக்கு உதவும் காரூண்யமும்தான் பிம்பங்களாய் உருமாறி அவரை, அவரின் அடையாளத்தை முன்நிறுத்துகின்றன. பெண்ணாய் பிறந்த இந்த இரண்டு வருட காலம்தான் எனக்கு மனசாந்தியையும், கூடவே ஆடைக்குள் குறுகுறுக்கும் கடற்கரை மணலாய், எனக்குள் கோபியின் மீது ஓர் உவப்பான அன்பை வெளிக் கொண்டு வந்தது. அட! இதுதான் காதலோ. இந்த பார்வை பரிமற்றங்கள் அத்தைக்கு எப்படியோ தெரிந்து, எங்கள் இருவர் உள்ளங்களையும் அறிந்து மணமேடைக்கு வித்திட்டார்.

இப்படி இரு மனங்கள் இணையும் வேளையில், எதிர்ப்புகள் எங்கிருந்தாவது வரத்தான் செய்கின்றன. எனக்கு எதிரிகள் என்றுமே வெளியில் இல்லை! எனது தங்கை நிர்மலாவுக்கு ஏனோ இந்த திருமணத்தில் அறவே இஷ்டமில்லை. ஒருவருடைய விருப்பங்களும் எண்ணங்களும் அவரவர் தனித்த விஷயங்கள். ஆனால், அதற்கு சொல்லிய காரணங்கள்தான் என்னுள் எரித்திராவகத்தை ஊற்றியது.

“உனக்கு கல்யாண ஆசை வந்திருந்தா, அதான் மூலைக்கொண்ணா தங்கச்சிங்க நாங்க இருக்கோமே எங்ககிட்ட சொல்ல கூடாதா? நீயா எங்கியோ ஒருத்தனைத் தேடி, அதுவும் ஒரு காலு விளங்காத மனுஷனா பார்த்துட்டு வந்திருக்கியே, உனக்கு எங்கேயாவது புத்தி இருக்கா. அந்த ஆளு என்ன குலமோ கோத்திரமோ. ஏண்டி உங்க அக்காவுக்கு போயும் போயும் ஒரு நொண்டியா கிடச்சான்னு என்னோட மாமியார்காரி குத்திக் காட்ட மாட்டா? உனக்கென்ன இந்த வயசுல இப்படி ஒரு காதல் வேண்டியிருக்கு..” அவள் சொல்லி முடிக்கவில்லை, எனக்குள் ரௌத்திரம் அடிப்பட்ட நாகமாய் படமெடுக்க...

“நிறுத்துடி! கொஞ்சமாவது மனசுல ஈரத்த வைச்சுகிட்டு பேசு. உனக்கென்னு வந்தா காதல் இனிக்கறது, அதையே நான் செஞ்சா, இருக்கமாட்டாம அலையறதுனு அர்த்தமா? இதோ பாரு, கூட பொறந்த தோஷத்துக்கு உன்ன என் கல்யாணத்துக்குக் கூப்பிடுறேன். உன்னோட வறட்டு பகிரும் உன்னோட மாமியார்காரியின் கௌரவம்தான் முக்கியா பட்டுச்சுனா எப்போதும் போல பொறந்த வீட்டு பக்கமே தலை வைச்சு படுக்காதே. ஆனா ஒன்னு சொல்லறேண்டி, இந்த நாதியத்தவ இல்லைன்னா அன்னினைக்கு நீ சந்தி சிரிச்சிருக்கணும்” கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் தடைகளற்று கன்னமேட்டை நனைத்தது.

‘ச்சீய், என்ன மானங்கெட்ட தனம் இது. நான் எதுக்கு அழனும்’. என்னதான் அடக்கினாலும், உணர்ச்சிகள் கொந்தளித்து கண்களில் நீராய் பெருகி தனது வெம்மையைச் சுயமாகவே ஆற்றிக் கொள்கிறது.
உடம்பு ஜடமாய் மணவறையில் சம்மணமிட்டிருந்தாலும் எனது சூட்சும மனது புறம் மறந்து எனக்குள் புதைந்து கிடக்கும் துன்ப நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருக்கிறது. எங்களது முன்னே திருமண பத்திரிக்கை படித்து, எனது குடும்ப சார்பாக அத்தையும் அவரது கணவரும் தாம்பாளம் மாற்றி கொள்கிறார்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் அவளது மணவறை அனுபவம் என்னை போல் இருந்திருக்கவே வேண்டாம். நாணத்தால் முகம் சிவந்து, அந்த சிவப்பில் மஞ்சள் பூசிய வதனம் இன்னும் சிவந்து, தலைக் குனிந்து ஓரகண்ணால் தனது வருங்கால கணவனை ஆசையோடும் நம்பிக்கையோடும் பார்க்கும் பாக்கியம் எனக்கு சிறிதும் அமையவில்லை. இந்த சுப முகூர்த்த வேளையில் என் மனதெல்லாம் எனது தங்கைகளே வியாபித்திருகின்றனர். நெஞ்சம் முழுக்க அவர்கள் விட்டு சென்ற ஆறாத ரணங்கள் அழுகி சீழ் வடிக்கிறது. எனது மங்கல நாளின் அதீதமான உணர்வுகளைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அத்தை கவனிக்காமல் இல்லை. ஐயர் அக்கினி வளர்த்து மந்திரம் ஜெபிக்கும் இடைவெளியில்,

“அடியே இந்த நேரத்துலதானா நீ பழசையெல்லா நினைச்சு அழனும். உன்ன புடிச்ச பீடை இன்னையோட உன்னையும் அவனையும் இணைக்கும் இந்த புனிதமான அக்கினியிலே தீஞ்சி போயிடுச்சுன்னு நெனைச்சுக்குடி என் கண்ணே” அத்தைக்கும் கண்களில் விளிப்பில் நீர் துளிர் விட்டிருந்தது.
அத்தை கிண்டியிலிருந்து நீரை ஊற்ற, அந்த பவித்திரமான நீர் எனது விரலிடுக்கில் வழிந்து கோபியின் கைகளில் வந்து இறங்கியது. இனி வாழ்நாள் முழுவதும் எனக்கு இவனே காவலாய் என்னைக் கோபிக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்கள். நல்ல முகூர்த்த வேளையில் மங்கல நாதஸ்வரம் முழங்க கெட்டி மேளம் கொட்ட, அரக்க பரக்க நிர்மலா திருமண மண்டத்தில் நுழைவது எனக்கு தொலைவில் நடந்தாலும் துல்லியமாக தெரிகிறது. அந்த க்ஷணத்தில், மஞ்சள் அட்சதை அனைத்து திசையிலிருந்து பறந்து வர, மனதில் ஒரு சந்தோஷ மொட்டு மலர எனக்கு மாங்கல்யதாரணம் கோபியால் செய்விக்கப் படுகிறது. எனது மலர்த்திய விழிகளைக் கொண்டு கோபியைப் பார்க்கிறேன். இவன்தானா இனி காலம் முழுக்க இவனோடுதானா எனது வாழ்வு? கூட்டிலிருந்து உலகை காண வெளி வரும் பட்டாம் பூச்சியாய் வெட்கம் என்னை முதன் முறையாய் நாணச் செய்கிறது. எனது மஞ்சளும் இவ்வேளையில் சிவக்கிறது

“அப்பாடி இப்பதான் இவ முகத்துல கல்யாண களையே வந்திருக்கு” என அத்தை நிர்மலாவிடம் கேலியாய் சொல்வது எனது காதுகளுக்கு கேட்கிறது. அக்னியை வலம் வரும் சமயம், கோபி தனது கால்களை ஊன்ற தடுமாறும் போது சட்டென அவரது கையைப் பிடித்துக் கொள்கிறேன். “இனி வாழ்நாள் முழுவதும் உன்னைத் தாங்குவேன் மணவாளா” என சந்தோஷ கூவல் மனதில் குதியல் போடுகிறது. அவரை பற்றிய எனது கைப்பிடி மேலும் இறுகுகிறது.

புதன், 27 பிப்ரவரி, 2008

நாகலீலை தோட்டம் (Nagalilit or Nagalelai Estate)

நாகலீலை தோட்டம் (Nagalilit Estate or Nagalelai Estate)

இதுவும் என்னுடைய சுய பிரஸ்தாபம்தான். ஆனால் இங்கு பிரதாபிக்க போவது என்னை பற்றியல்ல. என்னுள் சலனமற்ற நதியாய் ஒடிக்கொண்டிருக்கும் எனது தோட்டபுற வாழ்வின் நினைவுகளைப் படமாய் வரைய முனைகிறேன். தோட்டகாடுகள் மடிந்து, அங்கு புதுபுது வீடமைப்பு திட்டங்கள் முளைப்பது, தொழிற்சாலைகள் உருவாகுவது ஒரு சாதாரண விஷயம்தான். நலிந்துபோன தோட்ட வாழ்க்கையிலிருந்து மீள முடியாத ஜென்மங்களும், வெகு தூரம் பிரிந்து போயினும் தோட்ட வாழ்க்கையின் தாக்கத்தை மறக்காத மனிதர்களின் மன துயரங்கள் வெகு சுலபமாய், சர்வ சாதாரணமாய் ஜீரணிக்கபடுவதில்லை. அந்த துயரகங்கின் ஒரு பொறிதான் என்னை இங்கு எழுத வைத்திருக்கிறது.

எத்தனையோ வருடங்கள், இந்திய பால்மர குடியேறிகளுக்குச் சொர்க்க பூமியாய் இருந்த இந்த புண்ணிய பூமி, காலத்தின் மாற்றத்தால் உருவிழந்து போன கதையைதான் இங்கு பேச போகிறேன். பேசப்படும் கதை ஒன்றாக இருந்த போதிலும், இதனுள் பேசாத, அறியாத கதைகளும் நிறைய நிறையவே உள்ளன. அவற்றையெல்லாம் எழுத ஒரு சகாப்தம் போதாது. ஏதோ எனது சொற்ப அறிவிற்கு எட்டியதை, பேசக் கேட்டு அறிந்ததை, பட்டு புரிந்ததை உங்களுக்கும் கொஞ்சம் தருகிறேன். பிறந்தது முதல் முப்பது வருடங்கள் தோட்டப் பட்டிகாட்டில் திரிந்து வளர்ந்த அந்த எளிய வாழ்க்கையை மீண்டும் நினைவு கூறுகிறேன். இரப்பர் மரமே அடியோடு பூண்டொழிந்த எனது தோட்டத்தின் கதையை இங்கு ஆவணப்படுத்துகிறேன்.

அன்னவயலுக்கு பேர்போன கெடா மாநில கூலிம் வட்டாரத்தில், பாடாங் செராய் என்னும் சின்ன நகரத்திற்குச் சில மைல் தூரத்தில் பச்சென்று ஒரு சின்ன தோட்டம். நகரத்திற்கு அருகில் இருப்பதால் என்னவோ போக்குவரத்து பிரச்சனைகளும், அத்தியாவசிய தேவைகளுக்கும் என்றுமே சுணக்கம் இல்லாத ஒரு சின்ன கிராமம். செல்லமாய் கட்டையன் தோட்டம் என அழைக்கப்படும் ஒரு இரப்பர் எஸ்டேட்தான் அது.

ஊரில் மூலைக்கு மூன்று கோவில்கள். ஊர் எல்லையில், பிரதான நுழைவாயிலில் அரிவாளோடு சிதிலமடைந்த ஒரு மதுரைவீரன் கோயில். கோவில் என்று சொல்வதை விட அதை கூடு என்றே சொல்ல வேண்டும். இன்றைய தேதியில், மதுரைவீரன் நிறைய பட்டினிகளைப் பார்த்திருக்க வேண்டும். சுருங்கி கொண்டிருக்கும் தோட்ட ஜனங்களால், மதுரை வீரன் கோழியையும் ஆட்டையும் பார்த்து வெகு நாட்களாயிருக்கும்.
அந்த காவல் தெய்வத்தைத் தாண்டி செல்லும் பாதையில்தான் தோட்டத்தின் ஜீவகளையே அடங்கியிருக்கும். அந்த பிரதான சாலையில் இருமருங்கிலும் வரிசையாய் கட்டபட்ட தோட்டத்து வீடுகள். இன்னும் சாலை ஓரங்களின் தலையை ஒய்யாரமாய் ஆட்டும் குறு மரங்களினால் தயவால் தோட்டபுற காட்சி மூளியாகாமால் பேரிளங்கன்னியாய் தளர்ந்து இருக்கிறது. நெடிதுயர்ந்த புன்னை மரங்கள் புடை சூழ இருந்த காலங்கள் போய், அவைகள் இருந்த இடத்தில் காலியாய், அடிதூறுமாய் மரதுண்டங்கள்தான் எஞ்சி இருக்கின்றன. என்னுடைய இளம் பிராயத்தில், மார்கழி முடிந்து, பொங்கல் உண்ட எச்சில் கையோடு மஞ்சள் பூ விரித்த புன்னை மர நிழலின் கோலி விளையாடியது இன்று போல் பசுமையாகதான் இருக்கிறது.
தொடரும்............

வியாழன், 13 டிசம்பர், 2007

ஞாபகங்கள்

சில கதைகள் எழுதபடுகின்றன. ஒரு சில கதைகள் தாமாகவே தங்களை எழுதிக் கொள்கின்றன. இந்த இரண்டாம் இரகத்தைச் சேர்ந்ததுதான் இக்கதை. ஆகையால் இந்த கதைக்கு எப்படி முன்னுரை எழுதுவது என எனக்கு புரியவில்லை. இருந்த போதிலும் ஒரு சில வார்த்தைகள்.....

என்னுடைய‌ ம‌ருத்துவ‌ க‌ல்லூரியின் கால‌த்தில் போது உருவான‌ க‌தை இது. பெண்மையும் தாய்மையும் ஆண்களுக்குச் சுயமாக அமையாவிட்டாலும்கூட‌, அதனை உணரும் வல்லமை நிச்சயம் அவர்களுக்கு உண்டு. அந்த உந்துதலின் பேரில், என்னை மீறி எழுதிய‌ க‌தைக‌ளில் இதுவும் ஒன்று.

இந்த கதைக்கான பொறி ஒரு கருகலைப்பு சம்பவம். ஆனால் அதன் நிகழ்வும் தாக்கமும் எனது கற்பனையும் கற்பிதங்களையும் தாண்டி, தன்னை ஒரு படிவமாக ஸ்தாபித்து கொண்டன.

மாறி வ‌ரும் ச‌மூதாய‌த்தில் க‌ற்புநெறி கோட்பாடுக‌ள் தள‌ர்ந்தும் மாற்ற‌ப்ப‌ட்டும் வ‌ருகின்ற‌ன‌. த‌னிம‌னித‌ அள‌வில் அத‌ன் மாற்ற‌ங்க‌ள் ம‌னித‌ குணாதிச‌ய‌ங்க‌ளை எவ்வாறு பீடிக்கிற‌து என‌ப‌தை கோடிக் காட்டும் நிக‌ழ்வுதான் இக்க‌தை. இவ்வாறு மாறி வ‌ரும் ச‌முக‌த்தின் மாறா பொருளாக‌ தாய்மை விள‌ங்குவதை ம‌றுத‌லிக்க‌ இய‌லாது. அந்த மாறாபொருளைத் தன‌து துன்பவியல் தடயத்தில் பேசுகிறது இக்கதை.

பின்குறிப்பு: இக்க‌தை 2002 ஆம் ஆண்டு த‌மிழ்நேச‌னில் சிறுகதைகளுக்கான த‌ங்க ப‌த‌க்க‌த்தை வென்ற‌து.

நன்றி

சினேகமுடன்

ஆர்.இராஜேஸ்

----------------------------------------------------------------------------------------

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவனை, அவன்தான் ‘முகுந்தனைப்’ பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லைதான். நினைவு செல்களின் ஏதோ மூலையில் மக்கி மறந்து போய், தூசு படிந்த பிம்பமாய் உருமாறியவனை, அவ்வளவு கிட்டத்தில் பார்க்கும் போது விதி வலியது என எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. யாருடைய உறவு, இனி ஜென்மாந்திரத்துக்கு வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளினேனோ, அவனே முன்னே வந்து, “ ஹாய் லலிதா எப்படி நலமா?” என்று கையை நீட்டுகையில், மானங்கெட்ட வலது கை அன்னிச்சையாக அவன் முன்னே நீளுகிறது. இருந்தபோதிலும், சொர சொரப்பான அவனது கைத் தடங்கள் என்னுள் ஒரு கம்பளி பூச்சியின் ஊர்தலை உண்டு பண்ணியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, இதே கைகளை எத்தனை நாட்கள், எனது கைகளோடு கோர்த்து கொண்டு திரிந்திருப்பேன். அப்போதெல்லாம் மெத்து மெத்தென்று ஒத்தடமாய் இனித்த ஸ்பரிசம், ‘அந்த’ நிகழ்வுகளுக்கு பிறகு எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை என்பது சர்வ நிச்சயம். எப்படி இவனால் மனம் கூசாமல் ‘நலமா’ என்று கேட்க முடிகிறது. மலர துடிக்கும் அரும்பின், ஒவ்வொரு இதழ்களையும் கிள்ளி எறிந்துவிட்டு, மிச்சமாய் நிற்கும் காம்பினைப் பார்த்து நலமா? என்று கேட்பது போல் இருந்தது அவனது செய்கை. வாய் பேசாத காம்பாய்தான் நான் நின்றிருந்தேன். இனம் தெரியாத உணர்வு குழம்புகள் உள்ளுக்குள்ளே கொதித்த போதிலும், வாய் மட்டிலும் இதழ்களை இழுத்து வைத்து, வலுக்கட்டாயமாய் ஒரு புன்னகையை ஒட்டவைத்து மெலிதாய் சிரித்துவைத்தது. இந்த பத்து வருட ஆரண்ய வாசத்தில், நானும் நடிக்க கற்றுக் கொண்டேன், இப்போது சிரித்ததைப் போன்று.

நெற்றி கறுப்பு பொட்டும், வெற்று கழுத்தும் அவனது புருவங்களை ஏற இறங்க வைத்திருக்கும். நான் இன்னும் கன்னி கழியாத, தவறு ‘கன்னி கழிந்த’ முப்பத்தைந்து வயது முதிர்கன்னி என்று அவனுக்குத் தெரிந்திருக்கும். இதே வேறொரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்திருந்தால், அவனிடமிருந்து ஏளன சிரிப்பும், செறுக்கும் வெளிபட்டிருக்குமோ என்னவோ, ஆனால் இன்று சூழ்நிலையின் கைதியாய், எனது உதவிவை நாடி, வெகு பிரபலமான குழந்தைகளுக்கான இரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் லலிதா சுப்ரமணியத்ததைத் தேடி வரும் போது, அவனது கண்களில் தயக்கமும் குற்ற உணர்வும் கலவையாய் மின்னின. எனது கண்களை பார்த்து பேச தைரியம் இல்லாது ஸ்திரமற்ற வெற்று பார்வையை சுவற்றின் மேல் அளைய விட்டான். என்னுடைய இருப்பையும், பதவியையும் அங்கீகாரத்தையும் மௌனமாய் கிரகித்தது போல், “என் மகள் ஷாமளியைப் பத்தி கொஞ்சம் பேசனும் லலிதா, ஸாரி டாக்டர் லலிதா. நேத்துதான் கூலிம் ஆஸ்பிட்டலிருந்து இங்கே லூக்கிமியா வார்ட்டுக்கு மாத்தியிருக்காங்க.” முகுந்தனின் கண்கள் தானகவே, தாழ்ந்துக் கொண்டது.அவன் சொல்லாமலே பல விஷயங்கள் அப்போதுதான் எனக்கு பட்டென்று புரியலாயிற்று.

நேற்றைய வார்ட் ரவுண்டின் போது, புதிதாக அட்மிட் ஆன ஐந்தாம் நம்பர் பெட் குழந்தை ஷாமளி, முகுந்தனின் மகள் என்பது நெற்றியில் அடித்தாற் போல் இப்போது புலப்படுகிறது. சம்பந்தப் பட்ட குழந்தையின் பெற்றோரை என்னை காண வரும்படி, தாதியிடம் தகவல் சொன்னது லேசாய் மண்டைக்கு உறைக்கின்றது.மனதில் மூண்டிருந்த வன்மம் சட்டென்று மறைந்து, ஒரு வித பரிதாபம்தான் எஞ்சி நிற்கிறது. பழைய லலிதாவை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, டாக்டர் லலிதாவாய் அவனைப் பார்த்தேன்.“மிஸ்டர் முகுந்தன், நீங்களும் ஒரு டாக்டர் என்பதால், ஷாமளியைப் பற்றின நிலைமை ஒரளவுக்காவது புரிஞ்சிருக்கனும்னு நினைக்கிறேன்.”ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.“கூலிம் ஆஸ்பிட்டல் டாக்டர் தந்த ரிப்போர்ட்டின்படி பார்த்தா, உங்க குழந்தைக்கு, அனேகமா ‘அக்கியூட் லுக்கிமியா’ இருக்கலாம்னு நினைக்கிறேன்.......சட்டென்று, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேசையில் சாய்ந்துக் கொண்டான். எந்தவொரு சப்தங்களும் கண்ணீரும் இன்றி அவனது துக்கமும் கேவலும் அப்பட்டமாய் தெரிந்தது.“கொஞ்சம் பொறுங்க மிஸ்டர் முகுந்தன், இது என்னுடைய யூகமே தவிர இன்னும் சரியா நிருபணம் ஆகல. இதுவரை கிடைச்ச இரத்த பரிசோதனையில, ஷாமளி இரத்தத்துல அளவுக்கு அதிகமான வெள்ளை அனுக்கள் இருக்கு, அதோட ரெட் ப்ளாட் செல்லும் பேலெட்லட்டும் ரொம்ப கம்மியா இருக்கு. இந்த லேப் ரிப்போட்டும், உங்கள் மகளோட உடம்பில தென்படுகிற அறிகுறிகள் அனைத்தையும் பார்க்கிறப்ப, லுக்கிமியாவாக இருக்குகூடிய வாய்ப்புக்களை அதிகப் படுத்தது.”“இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பண்ணிட்டா, என்ன வியாதின்னு துல்லியமா கண்டுபிடிச்சுரலாம். பேஷன்னுக்கு நாளைக்கு ‘போன் மேரோவ் அஸ்பிரேஷன்’ (Bone Marrow Aspiration) பண்ணி, எலும்பிலேர்ந்து மஜ்ஜை திசுக்களை எடுத்து பரிசோதனை பண்ணனும். அதன் பிறகுதான் என்னால உறுதியான முடிவு சொல்ல முடியும். நாளைக்கு பண்ணபோற பரிசோதனை கொஞ்சம் ரிஸ்க்கானதாலே, உங்களோட சம்மதமும், கையெழுத்தும் வேணும். அதுக்காகதான் உங்கள கூப்பிட்டேன்.”கண்களில் திரண்டிருந்த துளிகளை, எனக்கு தெரியாமல் மறைக்க எத்துணை பிரயத்தனம் பட்டாலும், மடை திறந்த வெள்ளமாய் அவனது கன்னமேட்டை நனைத்தது. வெகு சோர்வாக, தளர்ந்த உடலுடன் அவன் எனது அறையை விட்டு வெளியேறுகையில், எனது மனம் பதைபதைத்தது.என்னுள், வழக்கமாய் நிறைந்திருக்கும் உத்வேகமும், சுறு சுறுப்பும் சட்டென வடிந்து, மனம் கனமாகி போனதாய் உணர்ந்தேன்.

குஷன் இருக்கையில் என்னை சாய்த்துக் கொண்டேன். பட்டு போன மரத்தில் பால் வடிவது போல், என்னுள் பஸ்பமான பழைய நினைவுகள் , காற்றசைவில் மிதக்கும் காற்றாடியைப் போல் மெல்ல தவழ்ந்து நிகழ் காலத்தை மறைத்தது. இதே கோலாலம்பூரிலுள்ள அரசாங்க மருத்துவ கல்லூரியில்தான், நானும் முகுந்தனும் எங்களது மருத்துவ படிப்பைத் தொடங்கினோம். முகுந்தவன் என்னைவிட இரண்டு வருட சீனியர். நான் முதலாம் ஆண்டு மருத்துவ கல்வியில் கால் வைத்தபோது, ரேகிங்கில் என்ற பெயரில் என்னையே வட்டமிட்டு எனது கவனத்தை ஈர்த்தான். அதுவரையில் கன்னி மாடத்தில் வாசம் புரிந்த எனது பெண்மைக்கு என்னையே சுற்றி வந்த அவனது மென்மையான ஆண்மை புதியதாகவும் உவகையாகவும் பட்டது. உணர்ச்சிகள் அரும்பி வெடிக்கும் பதிம வயதில் இந்த பரஸ்பர எதிர் பால் ஈர்ப்பு மிக சுலபமாய் என்னை அவனிடத்தில் கட்டிப் போட்டதில் வியப்பில்லை.

காதலோடு பல நாட்கள், ஊடலோடு சில நாட்கள் என நாட்கள் ஓடி போனதில் எனது ஐந்து வருட மருத்துவ படிப்பும் முடிந்து, கோலாலம்பூர் மருத்துவமனையிலே முகுந்தனோடு பயிற்சி மருத்துவராக நியமனமும் கிடைத்தது.முதலில் வார்த்தைகளோடு விளையாடிய காதல், சின்ன சின்ன தீண்டல்களாய், ஸ்பரிசங்களாய் மலர்ந்து, பிறகு தொடுதலே காதலாகி போனது. மருத்துவமனையிலும், ஆய்வு கூடங்களிலும் உடலையும், அதன் அனைத்து அவயங்களையும் பார்த்து பார்த்து, உடம்பைப் பற்றிய பிரக்ஞையே என்னை விட்டு சென்றது. கற்பென்பது வெறும் உடலை சம்பந்தபடுத்திய சாமாச்சாரமாக தோன்றியது. ஆகையால் அதை மீறுவது அத்துனை முக்கியமானது இல்லை என்று எனக்குள் முடிவு பண்ணிக் கொண்டேன். அந்த கணத்தில் புரட்ச்சிகரமாக தோன்றிய எண்ண விழுது, படித்த செறுக்கினால் உருவாகிய வக்கிர விதை, பின்னாளில் எத்துணை பெரிய விளைவுகளை என்னுள் நிகழ்த்தும் என்பது அப்போது தெரியவில்லை. எனது சுயத்தை இழந்து, அவனுள் முழ்கினேன், அவன் என்னுள் கரைந்து போனான். முகுந்தனோடு சுமார் மூன்று மாதங்கள் மனைவியாகவே வாழ்ந்தேன் என்று சொல்லவதில் வெட்கபடவில்லை. அந்த மூன்று மாதங்கள் முன்பனி காலமாய், காதலின் வசந்தத்தைப் பறைச் சாற்றும் கட்டியமாகதான் அப்போது எனக்கு தோன்றியது. வசந்தத்தின் விளைவால், வழக்கமான மாதபோக்கு தள்ளிபோனபோதுதான், எனக்குள் பூத்ததை அறிந்தேன்.
“ஹேய் முகுந், ‘யூரின் பெரக்னென்ஸி டெஸ்ட்’ பொஸட்டிவ் காட்டுது”
“என்னது?”
“நான் கர்பமா இருக்கேன். இப்பவாவது புரியுதா?“
“ஏய்,நீ என்ன விளையாடறியா?”
“நீ விளையாடிட்டு, இப்ப என்னை குற்றம் சொல்லறியா? முதல்ல உங்க வீட்டுல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க? இன்னும் அதிக நாள் ஆயிட்ட விஷயம் அம்பலம் ஆயிடும்.”
வேறு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவனில் முக ஓட்டத்தைக் கண்டு எனது பேச்சு தடைப் பட்டது.
“என்ன யோசனை முகுந்?”
“என்ன டாக்டர் நீ? கொஞ்சம் கவனமா இருந்திருந்தா பிரச்சனையே இல்லாம இருந்திருக்கும். உனக்குதான் என்ன பண்ணனும்னு தெரியுமே? இது ரொம்ப ஆரம்ப கட்டம்தான், அதனால கர்ப்பபையில கரு இன்னும் ஒழுங்க வளர்திருக்காது. ஏதாவது மருந்து சாப்பிட்டு அபார்ஷன் பண்ணிக்க வேண்டியதுதானே?”
அவனது அபத்தனமான பேச்சினாலும் அல்பமான புத்தியாலும், எனது முகம் கோபத்தினால் சிவந்தது.இத்தனை நாள் மனதுக்குள் ஊடோடியிருந்த அன்னியோனியம் பட்டென்று அறுந்தது போல் இருந்தது, அவனது கொடுரமான வார்த்தைகளை கேட்டபோது. சற்று ஆசுவாசம் அடைந்தவனாய், எனது அருகே வந்து எனது தலை கோதிவிட்ட படியே, பெரிய பாரங்கல்லை எனது தலையில் போடுவான் என்று எதிர்பார்க்கவே வில்லை
“இதோ பாரு லலிதா, நானும் நீயும் கல்யாணம் செஞ்சி ஒன்னும் ஆகபோறது இல்லை. நீயும் நானும் இதே கவர்மென் ஆஸ்பிட்டல்ல வேலை செஞ்சி முன்னேற முடியுங்கிறதெல்லாம் நடக்காத காரியம்.”
எனக்கு மூச்சு பேச்சு இன்றி நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக் கொண்டது.
“அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்னோட மாமா கூலிம்ல சொந்தமா கிளினிக் வச்சி ரொம்ப சிறப்ப இருக்காரு. அவரோட மகளை, எனக்கு திருமணம் பண்ணி வைக்க விரும்பறாரு. நல்லா யோசனை பண்ணதுல, இதுதான் எனக்கும் நல்லதுன்னு தோனுது. அதனாலே நான் அங்கேயே போறாத இருக்கேன். நீயும் யாராவது பெரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டாரோ இல்ல பணக்காரனோ பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. உன் அழகுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்.” அவன் கூறி முடித்த கணத்தில், எனது மொத்த உயிரும் போயிருக்க கூடாதா எனத் தோன்றியது.

உண்டு முடித்தவுடன் கைகளைத் துடைத்துக் கொள்வது போல், எப்படி அவனால் என்னை நிராகரிக்க முடிந்தது என்ற துக்கமே எனது எத்தனையோ இரவு தூக்கங்களைக் தொலைத்திருந்தது. அவன் தின்று முடித்த எனது இளமைகளின் எச்சத்தைக் காணும் போதெல்லாம் என் மனது தாங்கவென அசூசையும் அறுவருப்பும் கொள்ளும். உடம்பு என்பது உள்ளத்தோடு கூடிய அபூர்வ சேர்க்கையென்று அப்பொழுதுதான் உணர முடிந்தது. கற்பு நெறி பண்பெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல என புரிய தொடங்கியது. அன்று மனதில் விழுந்த ஆழமான காயங்கள்தான், என்னை இன்னும் கன்னியாகுமாரியாக நிற்க வைத்திருகிறது. அந்த நினைவுளை இன்று அசை போடும் போது, எத்துணை முட்டாள்தனமாக, உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனமும் உடலும் சிதைந்து போன அவலம் மனதில் நிழலாய் படருகிறது.

“டாக்டர், நீங்க கேட்ட ஷாமளியோட ப்ளாட் ரிசால்ட் ரெடியா இருக்குது.”நர்ஸின் குரல், எனது ஆழ்ந்த மோனத்தை உடைத்து, இயல்புக்குக் கொண்டு வந்தது. அந்த பரிசோதனை முடிவுகளை ஒரு முறை நோட்டம் விட்டபோது, உள்ளே ஒரு பட்சி சோகமாக கூவியது.மறுநாள் காலை, எலும்பு மஜ்ஜைகளை எடுக்க வேண்டி, அந்த குழந்தையைக் பரிசோதிக்கையில், எனது மனதில் அமிழ்ந்து கிடந்த தாய்மை சுனையாய் ஊறியது. இந்நேரம், எனக்கும் முகுந்தனுக்கும் திருமணம் ஆகியிருந்தால், இந்த ஷாமளி எனது மணிவயிற்றில் பிறந்து, எனது முலைக்காம்புகளில் பால் உறிஞ்சி, என் நெஞ்சோடு உறவாட வேண்டியவள். இன்று விதியின் கோலத்தால், அவளே என் கைகளில் பிஞ்சு நோயாளியாக......

தேவையில்லாத எண்ணங்களின் தாக்குதலினால், சற்று நேரம் ஸ்தம்பித்து போனேன். மனதை சுருட்டி, ஓர் ஓரத்தில் கடாசிவிட்டு, எனது பணிகளைத் தொடர்ந்தேன்.எலும்பு கூடாய் இருந்த குழந்தையைக் குப்புற போட்டு. இடுப்பின் அடிபகுதியில், துளையிட வேண்டிய இடத்தை “அல்கோஹலினால்” சுத்தம் செய்தேன். இடுப்பு பகுதியை மரத்து போக வைத்து, ஓர் ஊசியை, மெல்ல எலும்பினுள் சொருகி திருகினேன். மீண்டும் இன்னொரு ஊசியை அதனுள் சொருகி, எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜை திதுசுக்களை ஒரு வாறாக உறிஞ்சி எடுத்தேன். குழந்தையின் கைகளையும் கால்களையும் நர்ஸ் பிடித்துக் கொண்டாலும், தீனமான குரலில் அழும் சத்தம் என்னுள் கசிவை உண்டு பண்ணியது. வலியினால் முனகும், ஷாமளியை வாரிக் கொண்டு முகுந்தன் அழுத போது, அன்று நான் வடித்த கண்ணீர்துளிகளை நினைத்து பார்க்கிறேன். நம்பியவனிடம் மோசம் போய், அங்கீகாரமற்ற கருவைத் தாங்கி கொண்டு நின்ற வேதனையை சொல்லி மாளாது. ஊர் உலகத்துக்கு பயந்து, என் உயிரில் பூத்த முதல் பூவைக் கசக்கியபோது, எனது பெண்மையும் தாய்மையும் அன்றோடு அழிந்து போனது. முகங் காணாத எனது மூன்று மாத கரு, எனது காதலின் சின்னம், சதைபிண்டமாய் இரத்தக் கட்டிகளாய் வெளியே விழுந்தபோது என்னுள் எழுந்த ஒப்பாரி இன்னும் எனது ஒலித்து கொண்டே இருக்கின்றது. இன்று விதியின் கோலத்தை காணும்போது, சிரிப்புதான் வருகிறது. அன்றும் இப்படிதானே உலகத்தைக் காண துடித்த எனது சிசுவுக்காக அழுதிருப்பேன். இதைதான் விதி கை கொட்டி சிரிக்கின்றது என்று சொல்வார்களோ?

அழுது கொண்டிருந்தவன், எனது கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு“எப்படியாவது என் ஷமளியை காப்பாத்திடு லலிதா” என்று கேவும் போது“நீ என்னுடைய கருவை கொன்ன மாதிரி, நிச்சயமா நான் அப்படி செய்யமாட்டேன். இது என்னோட தொழில், என் தர்மம், இந்த கைகளுக்குக் காப்பாற்றதான் முடியுமே தவிர, அழிக்கறதுக்கு என்னைக்கு முன் வராது. ஒரு முறை அழிச்சதே இந்த ஜென்மத்துக்கும் போதும்.”மனதுக்குள் சொல்லிக் கொண்டேனே ஒழிய, எதுவும் கூறாது முகுந்தனின் கைகளை லேசாக வருடி விட்டு சென்றேன்.நான் நினைத்தது போலவே, எலும்பு மஜ்ஜையின் பரிசோதனை முடிவு, ஷாமளிக்குப் பாதகமாகவே வந்திருந்தது. மனதில் சஞ்சல அலைகள் புரள, திரண்ட கரு மேகங்கள் கண்களைக் கவ்வின.

என்னுடைய சுய இயல்பினை இழந்து, எதற்காக ஷாமளியை நினத்து கலங்க வேண்டும்? இந்த குழந்தையைப் போன்று எத்தனையோ சிசுக்குகளுக்குச் சிகிச்சை அளித்தபோது ஏற்படாத அவஸ்தை, இன்று அதிசயமாக பெருக்கெடுப்பது எதனால்? ஷாமளியின்பால் கொண்ட தாய் பாசமா? அல்ல தன்னை ஒரு காலத்தில் காதலித்தவன் துன்படுகையில் மூளுகிற பரிதவிப்பா? இதில் எதுவென்று புரியாமல் தடுமாறுகையில், கதவை தட்டி உள்ளே நுழைந்தான் முகுந்தன்.அவனை காண திராணியற்று கண்கள் தாழ்கையில், எனது பணியும் அதன் தர்மமும் முன்னே வந்து பழைய லலிதாவை தள்ளி வைத்து, டாக்டர் லலிதாவாய் நிமிர்ந்தேன். ஸ்திரமற்று அலைந்துகொண்டிருந்த அவனது கண்களை காணும் போது, நெஞ்சு கனத்தது.“வெல், மிஸ்டர் முகுந்தன், ஆக கடைசியா பன்ணின பரிசோதனையில உங்க மகளுக்கு ‘அக்கியூட் லிம்போ•பளாஸ்டிக் லுக்கிமியா டைப் எல் 1’ன்னு (Acute Lymphoblastic Leukemia type L1) கன்போ•ம் ஆயிருக்கு. வியாதியோட கண்டிஷனைப் பார்க்குபோது, இன்னும் காப்பாத்தகூடிய வாய்ப்பு நிறைய இருக்கு. மேலும் காலத்தைக் கடத்தாமல், நாளைக்கே கிமோதெரபி ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க வீணா மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம், இந்த கேஸ்ல, பிழைக்ககூடிய வாய்ப்பு அதிக பட்சமா இருக்கு. இது மாதிரி பிள்ளைங்க, இங்கேர்ந்து நல்லப்டியா தேறி போயிருக்காங்க.”பிரக்ஞையற்று அமர்ந்திருந்த முகுந்தனின், வறண்ட முகத்தில் நம்பிக்கை மின்னல் கண நேரத்தில் வெட்டியது.“புற்றுநோய்யுங்கிறது குணபடுத்த முடியாதது இல்லை முகுந்தன். வெளியில இந்த நோயைப் பற்றி தப்பான பிம்பம் இருந்தாலும், ஒழுங்கான கண்காணிப்பும் சுத்தி உள்ளவங்களோட இடைவிடாத ஆதரவும் ஊக்கமும் இருந்தா குணமாவது நிச்சயம். ஒரு டாக்டரான உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை.”

அன்றைய பொழுதிலிருந்து, ஷாமளிக்குக் கிமோதெரபி வழங்கி, இரத்ததை உற்பத்தி செய்யும் அணுக்களை நுணுக்கமாக பரிசோதித்து, நல்ல அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி விட்டேன். இடைபட்ட ஒருமாத காலத்தில், தோல் போர்த்திய எலும்பு கூடாய் இருந்தவள், எனது பிரத்தியோக கண்காணிப்பால் உடல் தேறி, கன்னங்குழியெல்லாம் சதை பற்று உண்டானது. ஷாமளியைப் பூரணமாக குணமாக்கி ஒப்படைக்கும் போது, எனது உள்ளம் கொண்ட உவகையும் மகிழ்சியும் சொல்லிக் கட்டாது. என்றோ ஒரு நாள், எனது மூலஸ்தானத்தில் தங்கிய கருவை உயிருடன் பெற்று எடுத்த நிம்மதியைக் கொடுத்தது.ஷாமளியோடு முகுந்தன் வீடு திரும்பும் போது,“என்னை மன்னிச்சிடு லலிதா” இமைகளின் ஓரத்தில் அரும்பிய கண்ணீர், விழிக் குளத்தில் அலம்பியது. “நன்றி சொல்ல வேண்டிய நேரத்துல, மன்னிப்பு எதுக்கு முகுந்?” பழைய அன்னியோனியம் எனது குரலில் தெரிந்தது. இதில் சத்தியமாக காதலனை அழைக்கும் உருக்கம் இல்லை. தவறு செய்து திருந்தி வந்த நண்பனை எதிர்கொள்ளும் பாவமே மிகுந்திருந்தது.

“நீ ரொம்ப பெரிய மனுஷி... இதுக்கு மேலே என்னால சொல்லமுடியல.” சப்தங்கள் தொண்டைக்குழியின் நாலபக்கமும் சிதற, வெறும் திணறல்தான் வெளிப்பட்டது.“மன்னிக்க தெரிஞ்சவன்தான் மனுஷன் முகுந். நான் மனுஷனாகவே இருக்க ஆசைபடறேன். நல்லபடியா போய் வா.”அவன் சென்ற தடங்களையே பார்த்துக் கொண்டிருகிறேன். மனம் மட்டிலும் எதற்கு ஓட்டாததது போல் அன்னிச்சையாக முனகியது.“நீ பண்ண தப்பை எப்பவோ ஞாபகத்திலேர்ந்து கழற்றி வைச்சுட்டேன் முகுந். நான் பண்ணின பெரிய தப்பை, என் மடியில ஜனித்த முதல் அரும்பைக் கலச்சதுதான் இன்னும் மறக்கமுடியல. உன்னை மன்னிச்ச மாதிரி, என்னால என்னை மன்னிக்கமுடியலையே முகுந். இந்த குற்றவுணர்ச்சி மனசுல இருக்கிற வரைக்கும், எங்கிட்ட வர்ற எல்லா குழந்தைகளையும் உயிரக் கொடுத்து காப்பாத்துவேன். அப்பதான் என்னையே சுத்திக்கிட்டு இருக்கிற அந்த சின்ன ஆத்மா என்னை மன்னிக்கும்.” மனதுக்குள் வைராக்கியமாய் உணர்வுகள் மேலீட்டன.“டாக்டர், ஐந்தாம் நம்பர் பெட்டுக்கு புதுசா இன்னொரு கேஸ¤ வந்திருக்கு. மீண்டும் டாக்டர் லலிதாவாய் என் குழந்தைக்கு செய்யும் கைங்காரியமாய், ஐந்தாம் நம்பர் பெட் குழந்தையை நோக்கி நடக்க தொடங்கினேன்.

புதன், 5 டிசம்பர், 2007

தொடுவானம்

என்னுடைய நான்காண்டுகால லண்டன் வாசத்தில், ஏதாவது தமிழில் எழுத வேண்டும் என எண்ணி, வலிய வரைந்த கதை இது. இந்த கதை பெண்ணியத்தைப் பற்றி பேசினாலும், பெண்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகளின் ஆதாரம் ஆண்களின் ஆதிக்க மனபாண்மை என்பதை மறுக்க முடியாது.

பெண்கள் பெண்களுக்காக எழுதுவது ஆச்சரியம் இல்லைதான். அது இயல்பு. அதுவே ஆணாக இருக்கும் பட்சத்தில், ஆண்கள் பெண்ணியத்தைத் தொடும்போது, பரிவும், பதைபதைப்பும், சற்று கூடுதலான அக்கறையும் இருக்கும் என நம்புகிறேன். ஏன்னா இன்னைக்கு இருக்கும் Gynaecologist ‍list- இல் (பெண்மை பிணியியல் மற்றும் மகப் பேறு நிபுணர்கள்) பெரும்பான்மை ஆண்களே வகிக்கிறார்கள். இது ஆண்கள், பெண்களின்பால் வைத்திருக்கும் இயற்கையான பற்றுதலையும் பரிவையும் புரிய வைக்கிறது.

ஒர் ஆண்ணென்ற‌ அறிதலின் பேரில் பெண்க‌ளைப் ப‌ற்றி புரிந்துக் கொள்ள‌ நான் எடுத்துக் கொண்ட‌ முத‌ல் முய‌ற்சி.

பின்குறிப்பு: இந்த கதை 2003-ஆம் ஆண்டு மக்கள் ஓசையில் வெளியீடு கண்டது

ந‌ன்றி

சினேக‌முட‌ன்

ஆர்.இராஜேஸ்
-------------------------------------------------------------------------------



லண்டன் ஹீத்தூரோ விமான நிலையத்தில், தனது முதல் காலடியை, அந்நிய மண்ணில் ஊன்றிய பொழுது- நிவேதாவின் அடி வயிறு கலங்கி ஏதோ இனம் காணாத மருட்சி கண்களில் அடைக்கலமாகியது. யாருமற்ற தனிமையில், வரவேற்க ஏவருமில்லாத ஸ்திதியில், தனது உடைமைகளைப் பெற்றுக் கொண்டு, டாக்சிக்குக் காத்திருக்கும் தருணம் கொடுமையானது. வெள்ளைக்கார டாக்சியோட்டிக்குத், தான் செல்ல வேண்டிய இடத்தினை விளக்குவதற்குள், நிவேதாவிற்கு மூச்சு முட்டியது. இளங்காலை வேளையில், சூரியன் இன்னும் பனிபடலங்களின் இருந்து முழுவதும் விடுப்படாத நிலையில், குளிர்காற்று மேனி முழுவதையும் ஊசியாய் துளைத்தது. தோளில் மாட்டியிருந்த, தோல்பையை நெஞ்சோடு இறுக அணைத்து, தனக்கு தானே வெம்மையை ஏற்படுத்துக் கொண்டாள். இலையில்லா மொட்டை மரங்கள், பின்னோக்கி ஓடுவதையும், காற்றில் நூல் பிரிய பறக்கும் தனது முடிக் கற்றைகளை ஒதுக்கி கொண்டும், தனது வெற்று பார்வையை வெளியே சிதறவிட்டாள்.
எத்துணை பிரயத்தனப்பட்டு மனதை அடக்கினாலும், நெருக்கிய பிடியிலிருந்து நழுவி ஓடும் சின்னக் குழந்தையாய் அது அவளை விட்டு வெகுதூரம் விலகி சென்றது. இலை உதிர்ந்து, வெறும் குச்சிக் கூடுகளாய் காட்சியளிக்கும் மரங்களைத் தாண்டும் போதெல்லாம், மனது மளுக்கென்று உடைந்து, சரக்கென்று நீர்த் திவலைகள் தெறிப்பதைத் த‌விர்க்கமுடியவில்லை. அம்மாவை நினைக்கும் போதெல்லாம், நெஞ்சுக்குழி ஏறியிறங்கி, துக்கம் பந்தாய் தொண்டையை அடைக்கிறது. இந்த தள்ளாத வயதில், அவளை நிராதரவாய் அண்ணனிடம் ஒரு வேலைக்காரியாய் ஒப்படைத்து வருகையில், இருதயமே ஈரக்குலையிருந்து அறுந்து கீழே விழுந்தது. தனக்கு இருந்த ஒற்றை ஆதரவும், தனியே பிரிந்து, கடல் தாண்டி போகையில், சற்றும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போய் வா என்று சொன்ன அம்மாவின் கண்களில் படிந்திருந்த சோகமும் பிரிவுத் துயரும், நிவேதாவின் கண்ணீர் சுரபிகளைத் துரிதமாக்கியது. தாயைப் பிரிந்து, தாய் மண்ணைப் பிரிந்து, எங்கோ வெகுதூரம் செல்ல வேண்டிய நிர்பந்தம்தான் என்ன? அதை நிவேதாவிடமே கேட்டு விடுவோமே....
நிவேதா....எனக்குன்னு அழகா அமைஞ்சது இந்த பேரு மட்டும்தான். மத்தவங்கெல்லாம் என்னை அழகின்னு சொன்னபோது, கர்வப்பட்டது எவ்வளவு அபத்தம்ன்னு இப்ப அழறபோது தெரியுது. எனக்கு நினைவு தெரிஞ்சி, என் குடும்பத்துல மூனே பேர்தான், நான், அம்மா அப்புறம் அண்ணன். எல்லோரையும் போலத்தான் என்னோட சின்ன வயசும் துள்ளலோடும், குதியலோடும், கஷ்டங்கள் என்னவென்று தெரியாத விளையாட்டு பருவத்துல கழிஞ்சது. இங்க, நான் முக்கியமா சொல்ல வேண்டியது, எங்க அண்ணன் குணாவைப் பத்திதான். என்னதான், நான் அவனுக்கு ஒரே தங்கச்சியாய் என்றபோதிலும், அதுவென்னவோ என்மேல அவனுக்கு அப்படியாப்பட்ட வெறுப்பு. நான் எங்க அம்மாவைப் போல, நல்லா கலரா இருப்பேன். கோதுமை நிறத்துல வெண்ணையை கலந்தாப்பல அப்படி ஒரு நிறம். இதற்கு நேர்மாறா குணா, நிறத்துல அப்பாவை போலவாம், கொஞ்சம் கறுப்பா (ரொம்பவே) அசமஞ்சமா இருப்பான். இந்த நிற வேற்றுமைதான் எங்களிடையே ஒரு பிரிவை உண்டு பண்ணியிருக்கனும். அதோட மட்டுமல்லாமல், படிப்புல நான் முதலாவதுன்னா, குணா கடைசிக்கு முதலாவதா இருப்பான். சின்ன வயசிலேர்ந்து, எனக்கும் அவனுக்கும் என்னைக்கும் ஏழாம் பொருத்தம்தான். முதல்ல பெரிசா தெரியாத இந்த வேற்றுமை, நாங்க வளர வளர எங்களுக்குள்ளே ஒரு தடுப்பு சுவரை உண்டு பண்ணியது என்னவோ சர்வ நிச்சயம்.ஒற்றை பெண்பிள்ளையென்று, அம்மா என்னைக் கொஞ்சி வளர்த்தது அவனுக்கு பொறுக்கவில்லை போலும். அம்மா என்னை மட்டிலும் உயர்வாய் பாசமாய் செல்லமாய் கவனிப்பது போன்ற பிரம்மையை அவனுக்குள் உருவாக்கியதில் வியப்பில்லை. போததிற்க்கு, வீட்டுக்கு முதல் ஆண்பிள்ளை பொறுப்புக்களைச் சுமப்பதில் அவனுக்கு ஏகப்பட்ட கரிச்சல். எங்கேயாவது, கல்யாண சுபநிகழ்சிகளுக்குக் குடும்பத்தோடு சேர்ந்து போகும் போது, மற்றவர்கள் எழுப்பி விடுகின்ற விமர்சனங்கள், குணாவை இன்னும் உசுப்பி விட்டதில் தப்பில்லை.
“அட இது உங்க மகனா? என்று யாராவது மாமி கேட்டு, அம்மா தலையாட்டினால் விஷயம் அதோடு முடிந்திருக்கும். பிறகு கூடவே,
“நீங்க நல்ல தக்காளி நிறமா, மூக்கும் முழியுமா இருக்கீங்க, உங்க மகளும் அச்சு அசலா உங்க ஜாடை, அதான் கேட்டேன்.” கல்யாணத்திற்கு வந்திருக்கும் மாமி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவாள்.“இல்ல, அவன் அவங்க அப்பா மாதிரி”.
என்று அம்மா சிரித்து வைத்த போதிலும், நடுவில் இருக்கும் குணாவிற்கு முகமெல்லாம் சிவந்து கோபமும் அவமானமும் புருபுருவென நடு மண்டைக்கு ஏறும்.புகைமூட்டங்களுக்கு இடையே தெரியும் பிம்பங்களைப் போலதான் எங்களது உறவும் இருந்தது. ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தோம் என்று சொல்வதை விட, தனி தனி தீவாய் ஒதுங்கி இருந்தோம் என்று சொல்வதே மெத்த பொருத்தம்.
இந்த விலகல் படலம் எனக்கு புரியவில்லை என்று சொல்வதைவிட நான் அதை இலட்சியபடுத்தவில்லை என்பேதே உண்மை. அந்த இருபத்து நான்கு வயதின் இளமைமையும், தாதிமை தொழிலும் எனக்கு வீட்டில் நடக்கும் பனிப்போரைப் புலப்படுத்தவில்லை.அண்ணனைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு, என்னைப் பற்றி, அந்த இருபத்துநான்கு வயது அழகு நிலா-நிவேதாவைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் போனால் எப்படி? எனது இளமைக் காலங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வது சற்று கூச்சமாகவும், அதே சமயம் மீண்டும் அந்த வயதில் திளைத்த ஆனந்தத்தையும் எனக்கு தருகிறது. எதை ஆனந்தம், சந்தோஷம் சொர்கம் என்று முதலில் நினைக்கிறோமோ, அதுவே பின்னாளில் துன்பமாய், அதன் நினைவே நரக வேதனையாய் சில பேர்களுக்கு வாய்த்து விடுகிறது. அப்படியாப்பட்ட துரதிஷ்டசாலிகளில் நானும் ஒருத்தி!!!!!உடலில் பூத்திருக்கும் இளமை, எனது லாவண்யத்தை மெருகேற்றி புடம்போட்டிருந்த பருவமது. முதன் முறையாக தாதிமை பயிற்சியை முடித்து, தனியார் மருத்தவமனையில் தாதியாய் வேலையில் அமர்ந்த சமயம். மனதில் சந்தோஷங்களே நிரம்பி, கைநிறைய வருமானமும், முகம் வழிய சிரிப்பும் கும்மாளமுமாய் கழிந்த இளவேனில் காலம்.
அந்த காலகட்டத்தில், சராசரியாய் ஒரு பொண்ணுக்கு என்ன நடந்திருக்கும் என்று யாராலும் சுலபமாய் ஊகிக்க முடியும்.எனது சந்தோஷங்களைத், தோஷங்களாக்கி, என்னை மூலையில் முடக்கி போட்டது காதல் என்னும் மாயப் பிசாசு. நான் வேலை செய்யும் மருத்துவமனையில், டாக்டராக பணிப்புரியும் சிவாதான் எனது இளமை பிணிக்கு மருந்தாய் இருந்தவர். இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது, எதனை அடிப்படையாக கொண்டு சிவாவின் மீது எனக்கு காதல், தப்பு காதல் என்று சொல்வதை விட ஈர்ப்பு வந்தது? என்று விடை காண முடியவில்லை. கொப்பளித்து ததும்பி வழியும் இளமைக்கு வடிகாலாய்தான் சிவா அமைந்தாரா என்ற வினா இன்னும் எனது மண்டையைக் குடைகிறது.சிவாவின் கல்யாண குணங்களை நன்கு அறியாமல். அவரின் ஒவ்வொரு செய்கைக்கும் நடுவில் ஒளிந்திருக்கும் சூட்சுமங்களைச் சரியாக புரிந்துக் கொள்ளாமல், அவருக்கு கழுத்தை நீட்டியது எவ்வளவு தப்பு என்று பட்ட பின்பு புரிகிறது.
காதலிக்கும் போது, நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நினைவு கூறுகிறேன். ஏதோ ஒரு மருத்தவமனையைச் சார்ந்த விழாவில், என் சக தாதி தோழியின் கணவரிடம் குலுங்கி சிரித்து பழகியது, சிவாவின் முகத்தை அந்த அளவுக்கு கோரமாக்கும் என நப்பவில்லை. விழா நடக்கும் போதே, எனது கையை பிடித்து தர தரவென இழுத்து காருக்கு கொண்டு போய், பளாரென கன்னம் பழுக்க அறைந்தது, இன்னும் நினைவில் இருக்கின்றது. நான் பிரமைப் பிடித்து நிற்கையில்,எனது கையை இறுக அணைத்துக் கொண்டு,
“ஸாரி நிவேதா.....நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீ மத்தவங்ககிட்ட சிரிச்சி பேசறதை கூட என்னால பொறுத்துக்க முடியாது. நீ எனக்கு வேணும். எனக்கு மட்டும்தான் வேண்டும் ....ஐ லவ் யூ வெரி மச்...” என்று பிணாத்திய போது,ரோஷம் பொங்க, குறைந்தபட்சம் ஏசியாவது இருக்க வேண்டும். ஆனால் காதல் மயக்கம் என்பார்களே, அது அப்படியே என்னை முயக்கி,‘என் மேல என்னவொரு வெறித்தனமான அன்பிருந்தா, நான் மத்தவங்க கிட்ட சிரிச்சி பேசறதுகூட சிவாவால தாங்கிக்க முடியல. என் மேல அவ்வளவு காதலா?’ என்ற கோணத்தில்தான் எனது சிந்தனைகள் சென்றன. பிறகென்ன, ஒரு நல்ல முகூர்த்த நாளில், இரு தரப்பு சம்மதங்களோடு எங்கள் கல்யாணம் நடந்தேறியது. ஏற்கனவே என்னை எட்டிக் காயாய் நினைக்கும் குணா, இப்போது கண் நிறைந்த டாக்டரை கணவராக கொண்டதில் இன்னும் துவேஷம் கூடி போய், அடியோடு விலகி விட்டான்.எல்லா புதுமண பெண்களை போன்றுதான், என்னுடைய இல்லற வாழ்க்கையும் மிக இனிமையாக ஆரம்பித்தது. என்னையே சதா காலமும் சுற்றி வரும் அன்பு கணவன் என்று மிகவும் பூரித்து போனேன். ஆனால், யாருக்குதான் இன்பம் தொடர்கதையாய் இருந்ததாக வரலாறு உள்ளது?
எனது வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் சமாதியாக்க குழி தோண்டப்படுவது பிறகுதான் உறைத்தது. மொத்தமாய் எனது உடலை, உள்ளத்தை, ஆசைகளை குத்தகைக்கு எடுத்ததுபோல் அவர் நடந்துக் கொள்ளும் போதுதான், இல்லற வாழ்க்கையின் மறுப்பக்கம் எனக்கு மெல்ல புரிந்தது. சிவாவின் ஒட்டு மொத்த ஆளுமை, ‘பொஸஸிவ்னஸ்’ வெளிச்சத்திற்கு வந்த போது, அடி மேல் அடியாய் அமைந்த சம்பவங்கள் என்னை நிலை குலைத்தன. எந்த நேரமும் அவரை, அவரை மட்டிலும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குறியாய் இருந்தார்.அதற்கு தடையாய் எனது தாதிமை உத்தியோகம் இருப்பது அவரது கண்ணை உறுத்தியது போலும். சிவா என்னிடம் வேலையிலிருந்து விலகுமாறு சொன்னபோதுதான், எங்களிடையே முதற்சண்டை வலுத்தது.“இப்ப வேலையை விட்டு நிக்கற அளவுக்கு என்ன அவசியம் சிவா.”“முதல்ல கட்டின புருஷன, பெயரைச் சொல்லி கூப்பிடறத நிறுத்து. புருஷன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டாம். சிவாவின் மற்றும் ஒரு புதிய முகம் எனக்கு லேசாய் பிரசன்னமாயிற்று.
“கல்யாணத்துக்கு முந்தி நீ எப்படி வேணுமாலும் இருந்திருக்கலாம், இப்ப நீ ஒரு டாக்டரோட பொண்டாட்டி. கண்ட கண்ட ஆம்பிள்ளைங்க கூட இழிச்சி சிரிச்சி பேசிறது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல.”“நான் ஒரு நர்ஸ்,அவங்க என்னோட பேஷண்ட், ஒரு டாக்டரா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி புரியாம பேசலாமா?“உனக்குதான் மனைவிங்கற அந்தஸ்து புரியல. முதல்ல நீ எனக்கு பொண்டாட்டி, அப்புறம்தான் நர்ஸ், அதை புரிஞ்சிக்கோ. புருஷன் என்ன சொல்லறான்னோ அதைதான் பொண்டாட்டி கேட்கணும். உங்க வீட்டுல அதெல்லாம் சொல்லி தரலியா? “என்று ஏளன பார்வை பார்த்தபோது, எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஒரு நீண்ட சண்டைக்குப் பிறகு, நான் எனது வேலை இராஜினாமா செய்து விட்டு, வீட்டோடு இருந்துவிட்டேன்.தமிழில் ஒரு பழமொழி உண்டு. இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காதாம். சிவாவை பார்ப்பதற்கு வருகை புரியும் அவரது சினேகிதர்களுடன் சற்று சிரித்து கல கலவென உரையாடிவிட்டால், அவரது முகம் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி ஆகிவிடும்.
“நீ இப்படி குழைஞ்சி பேசி சிரிக்கிறதால தான், அவனுங்க அடிக்கடி என்னைப் பார்க்க வர்ற சாக்குல உன்னை டாவடிகிறானுங்க” என்று சொந்த நண்பர்கள் மீதே சந்தேகம் கொள்வார்.அதன் பிறகு,“வீட்டுல உள்ள பொம்பளைங்க அடக்கமா இருந்தா, வெளியே இருந்து வர்றவன் கையெடுத்து கும்பிடுவான். உனக்கும் அடக்கத்துக்கும்தான் நூறு மைல் தூரமாச்சே. சிகப்பு தோலும், மூக்கும் முழியுமா இருந்தா மட்டும் போதாது, அச்சம் நாணம் மடம் பயிர்ப்புன்னு மத்த குணங்களும் வேணும். எங்கம்மால்லாம் வெத்து ஆம்பிள்ளைங்க முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கமாட்டங்க. இதெல்லாம் பரம்பரையிலே வரணும்.”“பாவம் உங்கம்மா .” முதல் முதலாக எனது எதிர்பைக் காட்டினேன்.
“கிண்டலா. உனக்குதான், என்னைதவிர மத்த எல்லா ஆம்பிள்ளைங்களைக் கண்டாலே இனிக்குமே.” அந்த வார்த்தைகளின் அபத்தமும் வெம்மையும் சட்டென உறைக்க, எனது பொறுமை ஒரு கணத்தில் எல்லையைத் மீறியது, ஆக்ரோஷம் கொப்பளிக்க
“ஆமாம், நான் அப்படிதான், இப்ப அதுக்கு என்ன?”
என்று சொன்னதுதான் ஞாபகம் இருந்தது. சற்று நேரம் என்ன நடக்கிறது என சுதாரித்து பார்க்கையில், முதுகு, கன்னம், காது முகமெல்லாம் வீங்கி, உதட்டோரம் சிறு கோடாய் இரத்தம் வழிந்திருந்தது. இதையெல்லாம் விட, ஆக கொடுமை என்னவென்றால், கிழிந்த நாறாய் இரத்த விளாரல்களோடு நான் முனகுகையில், ஒரு கணவராக கூட வேண்டாம், குறைந்த பட்சம் டாக்டராக இருந்து எனக்கு உதவியிருக்கவேண்டும். ஆனால், அவர் உதிர்த்து சென்ற வார்த்தைகள், அன்றோடு எனது மூன்று வருடகால இல்லற பந்தத்தை முற்றாக அறுத்துப் போட்டது.‘புருஷனக்கு அடங்காத பொண்டாட்டி, அடிப்பட்டுதான் சாகணும்.’பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும். எவ்வளவு உண்மையான கூற்று இது. எனது வேதனைகளைக் கண்டு குணா இரக்கபடாவிட்டாலும் கூட, எனது இரணத்தை இன்னும் பெரிதாக்காமல் இருக்கலாம். என்னுடைய நிலையைக் கண்டு பூரிப்பு அடைந்தானோ என்னவோ,
“நாந்தான் இரதின்னு மனசுல நினைச்சுக்கிட்டு மத்த ஆம்பிள்ளைங்ககிட்ட கொஞ்சி குலாவினா, எந்த புருஷங்காரந்தான் சும்மா இருப்பான். பொண்ணுன்னா அடக்கம் வேணும், உன்ன மாதிரி அடங்காபிடாரியெல்லாம் இப்படிதான் வாழவெட்டியா நிக்கணும். குணாவின் எகத்தாள பேச்சு, எனது மனபுண்ணில் அமிலத்தை ஊற்றியது.அம்மாவால், என்னோடு சேர்ந்துக் கொண்டு அழதான் முடிந்தது. கங்கையில் மூழ்கினாலும், சனிஸ்வரன் விட்டபாடில்லை எனக்கு.
அதுவரையின் நாலு சுவருக்குள் மூடி இருந்த எனது விவகாரம், சிவாவின் அநாகரிக செய்கையால், ஊரெல்லாம் பரவி வெளி வாசலில் தலைக் காட்ட கூட முடியாமல் செய்து விட்டது. வீட்டின் முன்னே வந்து, வாய்க்கு வந்ததையெல்லாம் யோசிக்காமல் அள்ளி தெறித்து, எனது மானம் வெட்ட வெளியில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், ஊரில் என்ன பேச்சு தெரியுமா?‘ஒரு படிச்ச டாக்டரே இப்படி மனசொடைஞ்சி பேசறாருனா, இவ என்ன அக்கிரமம் பன்ணியிருக்கனும்.’ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம். இத்தனை அடிகளும் போதாதென்று, குணா தலையில் ஒரேடியாய் ஒங்கி பெரிய இடியை இறக்கினான்.
“உன்னால என்னோட மானமரியாதையெல்லாம் கப்பல் ஏறுது. நீ இப்படி வாழவெட்டியாய், தண்டசோறு தின்னுகிட்டு இருந்தா, எனக்கு எந்த மடையன் பொண்ணு தருவான். உங்கூட இருந்தா, எனக்கு வர்ற பொண்டாட்டிக்கும் உன் குணம் ஒட்டிக்கும்......”
அவன் முடிக்கவில்லை, அதற்குள் அம்மா தாங்கா மாட்டாது வெடித்தே விட்டாள்.“டேய், மூடுறா வாயை. நீயெல்லாம் ஒரு அண்ணனுன்னு சொல்லிக்க வெட்கமா இல்ல? என் பொண்ணு சொக்க தங்கம்னு எனக்கு தெரியும். பொண்ணுங்க பொறுமையில பூமாதேவிடா, என்ன கஷ்டம், அவபேரு வந்தாலும் தாங்கிக்குவாங்கா. ஆனா, உங்களா மாதிரி ஆம்பிள்ளைங்களுக்கு, பொண்ணுங்க பொறுமையா போனா, ரொம்பதான் துளுத்து போகுது.”என்னைப் பார்த்து,
“நீ ஏண்டி கவலை படற. இந்த புருஷனும் அண்ணனும் உனக்கு ஆயுள் மட்டும் துணைக்கு வர்ற மாட்டானுங்க. உன் கையில தொழில் இருக்கு, மனசுல திடம் இருக்கு. இவனுங்க மூஞ்சியிலே முழிக்காம எங்கையாவது கண் காணாத இடத்துக்கு பொழைக்க போடியம்மா.”அன்றோடு, எல்லா நிகழ்வுகளையும் மனதிலிருந்து சுத்தமாய் துடைத்தெறிந்துவிட்டு, என்னையே நிதானமாக சரி செய்துக் கொண்டேன். லண்டனில் உள்ள மருத்துவமனையில், தாதியாக வேலை செய்து கொண்டே மேற்படிப்பு படிக்க இடமும் சன்மானமும் கிடைத்தது.அம்மாவை விட்டு பிரியும் போது மனம் நெகிழ்தது.
“என்னை பத்தி கவலை படாதடி செல்லம். உங்கண்ணனுக்கும், அவனுக்கு வர்ற போற பொண்டாட்டிக்கும் எப்படியும் வீட்டு வேலைகளை செய்யறத்துக்கு வேலைக்காரி தேவைப்படும், அது நானாக இருந்துட்டு போறேன். நீ தளர்ந்திடாதே, இவனுகளுக்கு முன்னே நீ தலை நிமிர்ந்து நிக்கனும். நல்லபடியா போய்ட்டு வாடி என் கண்ணு.” இவ்வளவுதான் என்னோட பழைய கதை. இந்த எல்லா அமர்களமும் ஓய்ஞ்ச பிறகு கூட, என்னால இன்னும் சில கேள்விகளுக்கு விடை காண முடியல. என் கணவரோட அதிகப்பட்ச ஆளுமையை, நல்ல படிச்ச என்னால, ஏன் ஆரம்பகட்டதிலே எதிர்க்கமுடியல? கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு சொல்லி வளர்த்த, வாழ்க்கை முறை என் அறிவை பிசக்கி அடிமையாய் வாழ நிர்பந்த படுத்தியதா?ஆனால், காரணம் எதுவா இருந்தா என்ன? இனியொரு முறை எனது அறிவை அடகு வைக்ககூடதுன்னு மனசுக்குள்ள வைராக்கியம் மூளுது. துன்பங்களும் சோதனைகளும் தொடுவானம் மாதிரி, முடிவது போல தோற்றம் அளிச்சாலும் நீண்டு கொண்டேதான் போகும். அதுக்காக தேங்கி நின்னற கூடாது, தொடுவானத்தை துரத்துற பட்சியா ஒடிக்கிட்டே இருக்கனும். நான், இப்பதான் ஓடவே ஆரம்பிச்சிருக்கேன், நீங்க.....?