வியாழன், 18 ஆகஸ்ட், 2022

நாவலுக்கான விசைமுகம்



முதல் விசை

தேனடையாய், பல உள் விரிவாக்கங்களால் புடைத்து விம்மிக் கொண்டிருக்கும் சமுகத்தில், இருண்ட பிரதேசங்கள் நிறையவே உண்டு. மாபியா, இலுமினாட்டி, பால் திரிபு கட்டமைப்புகள், கள்ளக்கடத்தல், தீவிரவாதம் என இந்த மாயா உலகங்களின் பட்டியல் காலதேச வர்த்தமானத்தின்படி நீண்டு கொண்டுதான் செல்கிறது. இந்த இருண்ட உலகங்களின் இருப்பு மண்ணில் மறைந்து துளிர் விடும் பச்சையாய், ஆழ சமுத்திரத்தின் பிரம்மாண்டமான ஆக்டோபஸ் கால்களின் நீட்சியாய், யதார்த்த உலகை மாய வலையில் சிக்கவைத்து, சமூக பிரக்ஞையில் வலுவாய் அமர்ந்துள்ளது. இந்த தனிப்பட்ட உலகங்கங்களில் இருந்து விலகி, சமூகத்தின் அக்கறைக்கு இலக்காகாத, இன்னும் தன் இருப்பை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாத ஓர் உலகமாய், ஒரு பிரிவு இருந்தும் இல்லாமலும், புரிந்தும் புரியாமாலும் இயங்கிக் கொண்டுதான் வருகிறது. பால்திரிபினர் என அறியப்படும் திருநம்பிகளின் உலகம். சிலுவையென பெண்ணுடலில் சிறைப்பட்ட ஆண்களின் ஆத்மாக்கள் ஆரோகணிக்கும் உலகம். ஆணாதிக்கம் மிகுந்த உலகத்தின் பிடியில் இயங்கும் சமுக ஏடுகளில், இன்னும் தெளிவாய் பதியப்படாத ஒர் இருண்ட உலகம். 

திருநம்பிகளைப் பற்றிய நமது அறிதலும் அறிவும் சொற்பமே. ஆணினால் அலைக்கழிக்கப்பட்ட அம்பையின் மறுபிறப்பில் இருந்தே நமக்கான திருநம்பிகளின் உலகம் துவக்கம் காணுகிறது. இங்குகூட பெண்ணாய் பிறந்த அம்பையின் மறுப்பிறப்பு, வஞ்சம் தீர்க்க வேண்டியே சிகண்டியாய் ஆணாய் உருவெடுக்கிறதே தவிர, ஓர் சக ஆணாய், இன்னொரு பெண்ணோடு இன்பம் சுகித்து வாழ அல்ல. திருநங்கைகளை அங்கிகரித்த இந்த நவீன யுகம், திருநம்பிகளின் மேல் பாரபட்சத்தைக் காட்டுவது ஏன்? மனரீதியாகவும், உணர்வின்பாலும் ஆணாய் இருக்கின்ற இவர்களின் பெண்ணுடலைக் காரணம் காட்டி, ஆணாதிக்க உலகம் முடக்குகிறதா?

நாவலுக்கான பொறி ஏதோ எமை மறந்த க்ஷணத்தில் தீயாய் பற்றிக் கொண்டு, அதற்கான களத்தை அதுவே தேர்ந்தும் கொண்டது. வாழ்ந்துப் பார்க்காத, வெறுமே எல்லைகளின் விளிம்பில் மேல்நுனியில் விரல் ஊன்றி எட்டிபார்த்த உலகத்தைக் கற்பனையில்பால் எழுதுவது ஏட்டுச் சுரைக்காயை சமைப்பது போன்றே, எற்றைக்கும் உதவா. நிரப்பபடாத பாத்திரமாய் இருக்கும் எனது சிந்தையுள் அதன் சாரத்தையும், விழுமியங்களையும், வாழ்க்கையும் ஏற்றிக் கொள்ளவே இந்த நாவலுக்கான விசைமுகம் களபயிற்சியாய் அமைகிறது. ஒரு குழந்தையை நேசிப்பது போல, வாசமுள்ள மலரை முகர்வது போல், ஒரு திருநங்கையை ஆதூரமாய் பார்ப்பது போல, இந்த திருநம்பிகளையும் கனிவோடும் பார்க்கும் பொருட்டே இந்த நாவல். தன்னை முழுதாக்கிக் கொள்ள அங்கம் நீக்கியவனின் வாழ்க்கையைப் பதிவுப் பண்ணவே. இங்கு சரிபிழைகளைப் பற்றி பேசபோவதில்லை, மீதமிருக்கும் வாழ்க்கையை மட்டுமே சகபயணியாய் கவனிக்க போகிறேன்.