திங்கள், 3 டிசம்பர், 2007

கலையாத கனவுகள்

என்னுடைய பதிம வயதில் எழுதிய கதை இது. நிஜம் முக்காலும் கற்பனை காலும் சேர்ந்த கலவை. தோட்டபுற வாழ்வியலில், உயர்வைக் காண விழையும் ஒரு சிறுவனின் அவஸ்தையும், அவனது பெற்றோர்களின் ஆவலாதியும்தான் இந்த கதையின் சாராம்சம்.
எட்டு வருடங்களுக்கு பிறகு, இந்த கதையை நானே ஒப்பிட்டு பார்க்கிறபோது, இது வெகு சாதாரண கதையாகவும் சம்பவங்களின் தொகுப்பாக இருந்தபோதிலும், இதில் ஆவணப்படுத்தபடும் தோட்ட மக்களின் சிக்கல் மிகுந்த அன்றாட நிலையைச் சுட்டிக் காட்டவே இதனை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
இது வெறும் கதை மட்டிலும் அல்ல, ஒரு தோட்ட பாட்டாளி மகனின் நிதர்சன வாழ்க்கையும் கூட‌.
பின் குறிப்பு:‍‍‍ 1999 ஆண்டின் மலேசிய தேசிய ப‌ல்கலைகழக (UKM) தமிழ் சிறுகதை போட்டியில், இந்த கதை முதல் பரிசை வென்றுள்ளது.
நன்றி

சினேகமுடன்
ஆர்.இராஜேஸ்

-----------------------------------------------------------------------------------------

இதயத்தின் லப் டப் ஓசை வினாடிக்கு ஒரு தரம் அதிகரித்துக் கொண்டே போனது. உடலெங்கும் ஒரு மின்சார அலை ஊர்வது போன்று உதறத் தொடங்கியது. நேற்றைய இரவு, எட்டு மணி செய்தியை வானோலியில் கேட்டதில் இருந்து, மனது ஒர் இடத்தில் நிலைக் கொள்ளவில்லை. உள்ளே இருக்கும் அர்த்தம் தெரியாத அவஸ்த்தையை அடக்கவும் தெரியாமல், வெளியே துப்பவும் முடியாமல் மண்டை கிறு கிறுத்தது.“அட யாருடா இவன், குட்டி போட்ட பூனை கணக்கா நடை பழகறவன். நாளைக்குதானே எஸ்.பி.எம் பரீட்ச்சை ரிசால்ட்டு வெளியே வருதுன்னு ரேடியாவுல சொன்னான். அதுக்கு ஏன் இன்னைக்கே கிடந்து தவிக்கிற? பரீட்சையை ஒழுங்கா எழுதினவன் எதுக்கு அல்லாடுனும்”. சமையலுக்குக் கீரையை ஆய்ந்துக் கொண்டிருந்த செல்வத்தின் அம்மா தனலட்சுமி, அவனது நிலையை அறியாது குரல் கொடுத்தாள்.“கொஞ்ச நேரம் சும்மா இரேம்மா. நீ நாளைய கறிக்கு இன்னைக்கே கீரையை சுத்தம் பண்ணி வைக்கிலையா? அது மாதிரிதான் இதுவும். சும்மா தொண தொணன்னு பேசி தொந்தரவு பண்ணாதே”. செல்வத்தின் குரலில் எரிச்சல் வழிந்தது.அன்றைய பொழுது, நத்தையாய் மெல்ல நகர்ந்து கண் உறங்கா இரவாய் விடிந்தது. செல்வம் வசிக்கும் தோட்டத்தில் அவனையும் தவிர்த்து, இன்னும் மூன்று நான்கு அவனையத்த மாணவர்கள், எஸ்.பி.எம் பரீட்ச்சையை எழுதியிருந்தனர். அவர்களுக்குப் பரீட்ச்சையை எழுதும் போதே, அதன் முடிவு தெரிந்து விட்டது போலும், ஆளுக்கு ஒரு வேலையை தேடிக் கொண்டு மூலைக்கு ஒருவராய் நகர்ந்து விட்டனர். படிப்பின் மீது அரைகுறை அக்கறை கொண்டவர்கள் கூட, காசைக் கண்டதும், மீதி இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையையும் மூழ்கடித்து விட்டனர். பிள்ளைகள், இப்பொழுதே, சம்பாதித்து கொடுப்பது அவர்களது பெற்றோர்களுக்கும் உவப்பாய்தான் இருந்தது. வருங்காலத்தின் உண்மையான நிதர்சனத்தைப் புரிந்துக் கொள்ளாமல், நாளை என்ற பொழுதை மறந்து , உடனுக்குடன் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் மட்டுமே பெரிதாய் பட்டதுஇத்தனைக்கும் மத்தியில், செல்வம் நம்பிக்கையுடன்தான் இருந்தான். பி.எம்.ஆர் தேர்வில் பள்ளியிலே முதலாவதாய் தேறியவனுக்கு, எஸ்.பி.எம் சோதனையில் எப்படியும் வென்று விடலாம் என்ற அசைக்க முடியாத எண்ணம் அடி மனது வரை இருந்தது. மேலும் மெருகேற்றி படித்த பாடங்கள், தன்னைக் கைவிடாது என்று முழுக்க நம்பினான். இதற்கு சான்றாக, ஒவ்வொரு முறையும் பள்ளி தவணை பரீட்ச்சைகளில் அவனுக்கு கணிசமான புள்ளிகளே கிடைத்து, அவனை முதலாம் இடத்தில் உட்கார வைத்தன. அதுமட்டுமல்லாது, தமிழ் மொழியிலும் உயிரியல்(பயோலோஜி) பாடத்திலும் செல்வத்தை தவிர அதிகமான புள்ளிகளை மற்றவர் யாரும் பெற்றதில்லை. அந்த அளவிற்கு அவனது பெயர் அவ்விரு பாடங்களிலும் பிரசித்தம். அவனது நெஞ்சம் முழுவதும் வியாபித்திருந்த எதிர்கால ஆசைகளே அவனை பேய் மாதிரி படிக்க வைத்தது. தோட்ட புறத்திலிருந்து தலை தூக்கி, எப்படியாவது முன்னிலைக்கு வர வேண்டும் என்ற வெறியும் கூட இருந்தது. அதற்கேற்றாற்போல் சிறு பிராயத்திலிருந்தே, மருத்துவராக வேண்டும் எனும் ஆசை மனதில் முளையிட்டு , இன்று கொப்பும் குலையும்மாய் கிளை விட்டு விருட்சமாய் பரவியிருந்தது. இதயெல்லாம் விட, சாமானிய தோட்ட தொழிலாளிகளான அவனது பெற்றோர்களும், அவனுக்கு மிகவும் அனுசரனையாக இருந்ததுதான் அதிசயம். மற்ற பிள்ளைகளைப் போன்று, செல்வத்தை இரப்பர் நிறைக்கு உதவியாய் கூப்பிடாமல், அவனுக்குப் படிப்பதற்குத் தேவையான நேரத்தையும் வசதியையும் செய்துக் கொடுத்தனர். இந்த சிறப்பு சலுகைகளுக்காகவே செல்வத்தின் தம்பிகள், அம்மா தனலட்சுமியோடு மல்லுக்கு நிற்பார்கள். “இனிமேல், எங்கலால மரம் வெட்ட ஒண்டியா வரமுடியாது. நாங்கள் கஷ்டப்பட்டு மரம்சீவி, கிளாஸ் துடைச்சி, பால் எடுகிறப்ப, அண்ணன் மட்டும் சொகுசா காலை ஆட்டிகிட்டு வீட்டுல இருக்கான். அவனும் மரத்துக்கு வரட்டும்”. என்று மற்ற தம்பிகள் சண்டித்தனம் செய்வார்கள். அம்மா தனலட்சுமி இப்படி சமாதனம் செய்வாள்.“ஏண்டா அண்ணங்கிட்ட மல்லுக்கு நிக்கறிங்க. அவனுக்கு இந்த வருஷம் எஸ்.பி.எம் பரீட்ச்சை, அதுக்கு நிறையா படிக்கணும்மேடா. அண்ணன் ஒழுங்கா படிச்சி பரீட்ச்சையில பாஸ் பண்ணாதானே உங்கள எல்லாம் நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும்”.இப்படி அம்மா தனலட்சுமி தேனாய் பேசியபோதும், தம்பிகள் செல்வத்தை வில்லனைப் பார்ப்பது போல்தான் முறைத்துவிட்டு போவார்கள். அம்மா ஒரு புறம் அவன் படிப்பிற்குச் சாமரம் வீசினால், அப்பா இராமசாமியோ மறுபக்கம் அவனுக்கு வேண்டியதையெல்லாம் செய்துகொண்டே போவார். கல்வி என்று வரும்போது, அவர் கொஞ்சம் கூட கஞ்சதனம் காட்டவில்லை. செல்வத்தின் படிப்பு செலவிற்கோ அல்லது புத்தகத்திற்கோ இல்லை என்று சொல்லாமல், எங்கேயாவது கடன் வாங்கியோ அல்லது நகையை அடமானம் வைத்தோ அவனது தேவைகளைத் தீர்த்து வைத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்.செல்வத்தின் எஸ்.பி.எம் சோதனை கட்டணம் கூட, அவனது அம்மாவின் தங்க சங்கிலியைப் பாசாக் கடையில் அடகு வைத்த பணத்தில்தான் கட்டப்பட்டது. என்ன செய்வது? தோட்ட பாட்டாளிகளுக்குச், சம்பள நாளிலிருந்து முதல் ஐந்து நாட்களுக்குதான் கையில் காசு புழங்குகிறது. பாடுபட்டு ஈட்டி வரும் பணம் உணவுக்கு, மளிகை கடை கடனை அடைக்கவும் மீந்தது பாசக்கடையில் மீளாதுயிலில் இருக்கும் நகைகளை மீட்கவும்தான் சரியாக இருக்கிறது. பிறகு மாத நடுவிலோ அல்லது கடைசியிலோ பணமுடை நேரும்போது, ஆபத்பாந்தவனாக விளங்கும் பாசாக்கடையில் மீண்டும் நகையை அடகுவைத்து மிச்ச நாட்களையும் கழிக்க நேரிடுகிறது. இதெல்லாம் இங்கு மிகவும் பழக்கபட்ட வழக்கங்கள்தான். இதையெல்லாம் விட கொடுமை, பத்து வட்டிக்கும், பதினைந்து வட்டிக்கும் கடன் வாங்குவதுதான். இந்த கடனையெல்லாம் இவர்களால் சம்பாதித்து அடைக்கமுடியாது, ஆயுசு முழுவதும் வட்டிக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஏதோ அதிர்ஷ்டவசமாக லாட்டரியில் பரிசு விழுந்தால்தான் அசலையே கட்டமுடியும். இவ்வாறு இருக்கும் தோட்ட சூழ்நிலையின் மத்தியில், ஆடம்பர செலவு செய்யாது, சம்பளத்தில் ஒரு பகுதியில் கூட்டு கட்டி, நகைமணிகளை சேர்க்காமல், கல்விக்காக தயங்காமல் செலவிடும் இவர்கள் சற்று வித்தியாசமனவர்கள்தான். இத்துணை சிரமப் பட்டு உழைத்து, குருவி மாதிரி ஒழ்வொரு காசாய் சேர்த்து, தனது படிப்பிற்காக அத்தனையும் அர்பணிக்கும் பெற்றோர்களுக்குத் தான் என்ன கைங்காரியம் செய்தாலும் தீராது என்று செல்வத்திற்குத் தெரியும். தனக்காக படிக்காவிட்டலும் கூட, இவர்களுக்காக தான் படிக்க வேண்டுமே என்ற பிரக்ஞையே அவனை பல சமயங்களில் அலைக் கழிக்கும். இவர்களது அப்பழுக்கற்ற தியாகத்திற்காவது, தான் சிறந்த முறையில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற உத்வேகம் மிக தீவிரமாய் பரவும்.அந்த நினைவிலேயே தன்னை நிறுத்தி, இரண்டு வருட பாடங்களைக் கரைத்து குடித்து, அத்தனையும் இரண்டே மணி நேரத்தில் கொட்டிய அழகு இன்று தெரிய போகிறது. என்னதான், மனதுக்குள் திடமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடந்தாலும், ஏதோ ஸ்திரமற்ற பயம் அடிவயிற்றைப் பிசைய செய்தது.காலையிலே குளித்து முடித்து, இரப்பர் நிறைக்குச் சென்ற தாயும் தந்தையும் வரும்வரை காத்திருந்தான். பரீட்ச்சை முடிவுகளைக் காண்பதற்கு முன் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு முனைந்திருந்தான்.இரப்பர் நிறையில், மரம் சீவிக்கொண்டிருந்த தனலட்சுமிக்கு, மனது ஒரு நிலையில் நிற்கவில்லை. நேற்றைய பொழுதில் இருந்து, மகன் செல்வம் படும் வேதனையப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். வீட்டிலே வளைய வளைய வரும் பிள்ளை, சதா நேரமும் தன்னிடம் வம்புக்கு நிற்கும் வளர்ந்துவிட்ட குழந்தையான செல்வத்தின் அவஸ்த்தையைக் கண்டு பெற்ற மனம் பாடாய் பட்டது. அவருக்கும் ஒருவித திகில் இல்லாமல் இல்லை. போததிற்குப் பக்கத்து வீட்டு துளசியக்கா கூறியது மனதில் நின்று கிலேசத்தை உண்டு பண்ணியது. நேற்றைய சம்பாஷனை மீண்டும் மனதுக்குள் சாயாங்கால நிழலாய் வளர்ந்தது,“துளசியக்கா, தேங்காய் ஓன்னு இருந்தா கொடுங்களேன். நா¨ளைக்கு அப்பதுக்குத் துவையல் அரைக்கணும். காலங்கார்த்தால நம்ம செல்வம் ஸ்கூலுக்கு போகணும், அதுக்குதான்”.“ஆமாண்டியம்மா, நாளைக்கு என்னமோ ரீசால்ட்டு வருதுன்னு, ரேடியாவுல இளமைக்கும் இனிமைக்கும் இடையில சொன்னாங்களே, அதுவா தனம்?”“அட ஆமாக்கா, இந்த வருஷம் என் மூத்தமவன் எஸ்.பி.எம் பரீட்ச்சை எழுதியிருக்கான்லே, அதோட முடிவு நாளைக்குக் காலையில வருதாம். அதுக்கோசரம், இவன் பித்து புடிச்சி போய், இராத்திரிக்கு ஒன்னுமே சாப்பிடாம முடங்கி கிடக்கிறான். நாளைக்குக் காலையிலயாவது, நாலு தோசையைச் சாப்புட்டு தெம்பா ஸ்கூலுக்கு போகட்டும்”“ம்ம்....., நீங்களும் கடன உடன வாங்கி புள்ளைகள படிக்க வைக்கரீங்க, பாஸ் பண்ணா சரி. ஏன் சொல்லறேன்னா, நம்ம பிள்ளைங்க என்னாதான் கஷ்டப்பட்டு படிச்சாலும், மலாயில கவுந்துறங்கலாம். போன வருஷம், நம்ம ஜைத்தோன் பையன் இஸ்மாயில் கூட, மலாயிலதான் பெயிலாயிட்டானாம். மலாய்க்கார பிள்ளைங்களே அவங்க பாடத்துல தவறபோது, நம்ம பிள்ளைங்க எம்மாத்திரம்? ஏதோ கடவுள் உன் பிள்ளை விஷயத்துல கண்ண தொறந்தா சரி”.ஒழுங்காக இருந்த மனதை துளசியக்கா குழப்பியதிலிருந்து, தனத்திற்கு தலையில் நண்டு பிறாண்டியது. என்னதான் வெளியே மகனுக்குத் தைரியம் சொன்னாலும், அவளுக்குள் அந்த விஷயம் உறுத்தாமல் இல்லை. செல்வத்திற்கு இருந்த அவஸ்தைகள் அத்தனையும் தனத்திற்கு ஒட்டிக்கொண்டு, அவளை மந்தப்படுத்தியது. சேற்று குட்டையாய் கலங்கிய மனது, உற்சாகத்தைக் குறைத்து வேலையில் சுணக்கத்தை ஏற்படுத்தியது.“ஏய் தனம் என்னாச்சு உனக்கு, ஒத்த மரத்த ஒம்போது மணி நேரமா சீவிக்கிட்டு இருக்க, மரத்துக்கு வலிச்சிடப் போகுது. நிறையை வெள்ளன முடிச்சாதானே, வீட்டுக்கு போயி ஒரு வாய் சோறு சாப்பிட முடியும்”. அவளது சுணக்கத்தைக் கண்டு கணவர் இராமசாமி நையாண்டி செய்தது அவளுக்கு இரசிக்கவில்லை போலும். “ஆமாய்யா, நீ தின்னறதுலே இரு. எனக்கு ஒரு பருக்கை சோறு உள்ள இறங்கலை. இன்னைக்கு நம்ம செல்வத்தோட ரிசால்டு வருதுன்னு, நம்மள வீட்டு சுருக்கா வர சொல்லியிருக்கான். என்ன ஆகுமோ, எது ஆகுமோன்னு நான் வயித்துக்குள்ளே நெருப்ப கட்டிகிட்டு அவதி படறேன், உனக்கு நையாண்டியா இருக்கா?“அடிப் போடி அறிவு கெட்டவளே, பரீட்ச்சை முடிவு வருதுன்னா, கொஞ்சம் அப்படி இப்படி பயமாதான் இருக்கும் குழந்தைக்கு. நாமதான் நாலு நல்ல வார்த்தைங்கள சொல்லி அதுகள தேத்தனும், அதவுட்டுபுட்டு நீயே புள்ளைக்கு பயம் காட்டறியே”.“அதுக்கில்லைங்க, ஒரு பேச்சுக்கு சொல்லறேன்- பரீட்ச்சை முடிவுல ஏதாவது விபரீதம் ஆயிடுச்சுனா, நம்ம பையன் கதி என்னதுக்கு ஆவறது? அத நினைச்சாதான் நெஞ்சுக்குள்ள கப்புன்னு அடைக்குது”. தனதிற்கு சற்று நேரத்தில் கண்கள் பட்டென கலங்கிவிட்டது.“ஏண்டி உனக்கு மட்டும் ஏன் புத்தி இப்படியெல்லாம் யோசனைப் பண்ணுது. நம்மளே, நம்ம குழந்தைகள குறைச்சி எடை போடலாமா? செல்வம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண் முழிச்சி இராத்திரியும் பகலுமா படிச்சிருக்கான்னு உனக்கே தெரியுமல்ல?“சரி, அப்படியே ஏதாவது ஏடாகூடமா நடந்தா மட்டும் தலையா போயிடபோகுது. இன்னோரு வாட்டி பரீட்ச்சை எழுதி பாஸ் பண்ண முடியாதா என்ன? அப்பங்காரன் நான் மலைமாதிரி இருக்கறவரைக்கும் எம்மவன படிக்க வைப்பேண்டி. என்னைதான் எங்கப்பன் வசதியில்லையின்னு படிக்கவைக்காம கித்தா மரத்து கூட்டியாந்துட்டாரு. எம்மவனுக்கு என்னடி குறை, அவன ராஜா மாதிரி படிக்கவைக்கறேன்னா பாரு”.இப்படி பேசிக்கொண்டே, முழு இரப்பர் நிறையையும் சீவி முடித்து விட்டனர். பிள்ளை வீட்டில் காத்திருக்கிறான் என்ற எண்ணமே அவர்களை இன்னும் துரிதப்படுத்தியது.“இதோ பாரு தனம், வீட்டுக்கு போயி செல்வத்துக்கிட்டே நல்ல வார்த்தையா பார்த்து பேசு. நாம உழைச்ச உழைப்புக்கும், கேட்டப்பல்லாம் நகையை கழட்டி கொடுத்த உன் மகராசி குணத்துக்கும், கண்டிபா நம்ம மவன் பரீட்ச்சையில பாஸ் பண்ணுவான். நம்ம தோட்டத்து அம்மன் என்னைக்கும் நம்மள கைவிடமாட்டா”.செல்வத்துக்கு, தனது பெற்றோர்களைக் கண்டதும், மனம் இன்னும் நெகிழ்ந்து போனது. தனம் விறு விறுவென கையும் காலையும் கழுவிக் கொண்டு தோசைகளை சுட சுட வார்த்து போட்டாள். செல்வத்தைக் கூப்பிட்டு ஆதரவாய் அமர்த்தி பசியாறவைத்தாள். செல்வத்திற்கு நாபியிலிருந்து மெல்லிய உணர்வு நெஞ்சமெங்கும் விரவி தொண்டைக்குழியை அடைத்தது.“பகவானே, இவங்களுக்காவது என்ன நல்ல படியா தேர்ச்சியடைய வை” என்று மனது உள்ளுக்குள் ஓலமிட்டது. இத்தனை நாள், தான் விழுந்து எழுந்து படித்த கர்வமெல்லாம் நொறுங்கி போய், தன்னம்பிக்கை தகர்ந்து போய், தேவையற்ற பயம் அவனது புத்தியை மழுங்கடித்தது. அறிவு நிலைக் கொள்ளாது அலையும்போதுதான், சின்ன சின்ன பயங்களும், கிலேசங்களும் புத்தியை ஆக்கிரமித்து அல்ப விஷயங்களை கூட விஸ்வரூபம் தரிக்க செய்து, மனிதனை அலைகழிக்கின்றன. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையின் கெடுபிடிக்குள், செல்வம் வலுக்கட்டாயமாய் தள்ளப்பட்டான்.சைக்கிளை மிதித்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பும் போது,“அண்ண, ஓல் த பெஸ்ட்”. இத்தனை நாள் முறைத்துக் கொண்டுந்த தம்பிகூட வாழ்த்திவழியனுப்பினான்.சோதனை முடிவுகளை வெளியிடும் அறையை எட்டியதும், கால்கள் இரண்டும் கனமாகி ,கைகள் செயலிழந்து போயின. சிரித்துக் கொண்டு மலர்ச்சியாய் சிலரும், தோய்ந்த முகத்தோடு பலரும், ஒரு சில மாணவிகள் அழுதுக் கொண்டும் அறையிலிருந்து வெளியேறினர். இத்தனை நிகழ்வுகளைப் பார்த்ததில், பள்ளியின் தலைமையாசிரியர் அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்ததுகூட அவனுக்கு தெரியவில்லை. அவனது தோளைத் தட்டி, தலையையாசிரியர், சோதனை முடிவு சீட்டைக் கொடுத்ததும், கண்களை இறுக மூடிக் கொண்டான். இறுதயமே வெளியே வந்து விழுவதைப் போல், அதிவேகமாய் துடித்தது.ஒரு கணம் அவனை நிதானித்து பார்த்த பள்ளி தலைமையாசிரியர்,“வாழ்த்துக்கள் செல்வம். மாவட்டத்திலே நீதான் மிகச் சிறந்த மாணவனாய் தேர்ச்சியடைஞ்சிருக்க”. தலைமையாசிரியார் அவனது கைகளைப் பற்றி குலுக்கினார். “எல்லா பாடத்திலும் ஏ எடுத்திருக்க, நம்ம பள்ளியில இதுமாதிரி யாரும் இதுவரைக்கும் எடுத்தது கிடையாது. காங்கிராட்ஸ்”. இன்னொரு ஆசியர் அவனை பாரட்டினார். விஷயம் அதற்க்குள் பரவி அனைத்து ஆசிரியர்களும், நண்பர்களும் திரண்டு விட்டனர். செல்வத்திற்கு அழுகை கண்களை முட்டிக் கொண்டு, கண்ணாடியாய் பளபளத்தது. இறுகிய பாறையாய் அல்லாடிய மனது, இலவம் பஞ்சு கணக்காய் மிதக்க தொடங்கியது. தன்னை சூழ்ந்திருந்த அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாது, தனது சைக்கிளை நோக்கி ஓடத்தொடங்கினான். அத்தனை பேர்களின் புருவங்களும் அவனது செய்கையைக் கண்டு மேலேறின. என்ன ஆயிடுச்சு இவனுக்கு?இவர்களுக்கு எங்கே புரிய போகிறது? தன் வீட்டு வாசலில் நெஞ்சு நிறைய நம்பிக்கைகளை புதைத்துக் கொண்டு அவஸ்தையோடு காத்திருக்கும் அன்பு உள்ளங்களை நோக்கிதான் ஓடுகிறான் என்று.

2 கருத்துகள்:

mag சொன்னது…

பொஹுட் அஷி ஹை ரஜெஷ்!

இராஜேஷ் இராமசாமி | Rajesh Ramasamy சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.