செவ்வாய், 22 ஏப்ரல், 2008

வீணையடி நீ எனக்கு

இவ்வளவு அருகில், அவரை இப்போதுதான் நிமிர்ந்து பார்க்கிறேன். ஓம குண்டத்திலிருந்து புகைந்து வரும் நெடி புகையின் வாயிலாக அவரை, அவர்தான் கோபியை, இன்னும் சில நொடி பொழுதுகளின் எனது பெண்மைக்கு ஒட்டுமொத்த உரிமையாளனாக போகும் எனது கணவனை, அந்த கணம்தான் அவ்வளவு அருகில் இருந்து பார்க்கிறேன். மணபெண் என்கிற கூச்சநாச்சமெல்லாம் கடந்து போன பருவத்தில், அவரை அப்படி பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட லஜ்ஜையோ நாணமோ இல்லை. இந்த முப்பத்தியாறு வயதில் என்னையொத்த பெண்களெல்லாம் நிறைந்த சுமங்கலியாய், இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் வளைய வரும் போது, இன்னும் நான் மட்டுமே புதுபெண்ணாய்! இருந்தபோதிலும், பெண்மைக்கான உணர்வுகளையெல்லாம் தொலைந்து அதிக நாளாயிற்று என எனது நாள்பட்ட மாதவிலக்கே சொல்லாமல் சொல்லியது. அது என்னவோ, என்னால் இந்த வயதிலும்கூட மிகைப்பட்ட உணர்வுகளோடு இணைந்திருக்க முடியவில்லை.

அம்மா மணவறையின் ஓரத்தில், யாருக்கும் புலப்படாமல் மறைந்து தனது அமங்கலி கோலம் தனது மகளின் மங்கல நாளை மாசுபடுத்த கூடாதென்று மருகி, கண்களில் நீரைச் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளது உதிரத்தில் உதித்த மற்ற பெண்கள், என்னை விடவும் வயதில் இளைய சகோதரிகள் மணவறை பக்கத்தில் பாந்தமாய் நின்று, புடவைத்தலைப்பால் இல்லாத வெப்பத்திற்கு வெறுமனே விசிறிக் கொண்டிருக்கிறார்கள். நெற்றி வகிட்டு குங்குமமும் சுண்டுவிரல் பருமன் தாலிக்கொடியும் இவர்களுக்கு தனி கர்வத்தைக் கொடுத்ததில் ஐயமில்லைதான். இவர்களுக்கு அமைந்தது போல், அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு வாழ்க்கை அமையவில்லையே. கல்யாண கனவுகள் எல்லாம் கலைந்து, பேரிளம் பெண்ணாய் நின்ற இத்தனை காலத்தில் எனக்கும் கல்யாணம்கார்த்தியெல்லாம் நடக்கும் என சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லைதான். இன்னமும் கூட என்னையே கிள்ளி பார்க்க தோன்றுகிறது. ஏதோ சின்ன பிள்ளைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடுவதைப் போலதான் எனக்கு இந்த வைபோகம் தெரிகிறது.

ஓம புகையின் கரிப்பில் பளபளக்கும் கண்களோடு அவரை மீண்டும் பார்க்கிறேன். எனது பார்வையின் ஊடுருவல் அவரை எதுவோ செய்திருக்க வேண்டும். மெதுவாக தலையசைத்து என்னை திரும்பி பார்க்கிறார். என்னைப் பார்க்கும் பாவனையில் ஒரு சினேகிதம், மின்னல் ஒளி கீற்றாய் பளீரிடுகிறது. இமைகளைத் தாழ்த்தி மீள்கையில், எனது அருகே வசந்தியும் சாந்தாவும் பட்டிலும் பவுனிலும் ஜொலித்து கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது. என்னையும் அறியாமல், எனது கண்கள் கழுத்தையும் கைகளையும் தடவி பார்க்கிறது.

இந்த க்ஷணம், எனது மேனியில் பொன்னாக பூட்டப்பட்டது எனது பழைய ஒற்றைக் கல் மூக்குத்தியும், அத்தை தனது கழுத்திலிருந்து கழற்றி போட்ட இரட்டைவட ஆரமும் மற்றும் கோபி பரிசத்தில் கொடுத்த சங்கிலியும் தவிர வேறெதுவும் இல்லை. தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை ஒப்பனை நகைகளைப் போட்டு நிரப்பிக்கொண்டுதான் அக்கினியின் முன்னே அமர்ந்திருக்கிறேன். இந்த போலி பூச்சுகளும் பித்தளையும் வேண்டாம் என்று எடுத்து சொன்ன போதிலும், அம்மாதான் கல்யாண பெண் நிறைக்கழுத்தாய் இருக்க வோண்டும் என சொல்லி இவைகளைப் பூட்டிவிட்டாள்.

இத்தனைக்கும் பக்கத்தில் நான் அருமையாக சீர் செய்து தாரை வார்த்த எனதருமை தங்கைகள் ஒன்றுக்கு இரண்டு பேர் இருந்தும், ஒருத்தி கூட ‘இந்தாக்கா’ என்று தனது கழுத்திலிருந்தோ அல்ல கையிலிருந்தோ ஒரு குந்துமணி தங்கத்தையும் கழற்றி தர முன் வரவில்லை. அப்படி கொடுத்தாலும் வாங்கி கொண்டு அழகு பார்க்கும் சராசரி பெண்ணாய் நானும் இல்லை. அப்படி ஒருத்தியாவது முன் வந்திருந்தால் எனக்குள் ஒரு சின்ன சந்தோஷ மலர் பூத்திருக்கும். இந்த மணவறையில், கோடானு கோடி தேவர்கள் முன்னிலையில் இம்மாதிரி மனதை போட்டு உழப்பி கொண்டிருக்க மாட்டேன்.

இவர்களாவது பரவாயில்லை, கல்யாணத்திற்காவது வந்திருக்கிறார்கள், எனது முதலாவது தங்கை நிர்மலா இன்னும் எட்டியே பார்க்கவில்லை. அம்மா அவளுக்காகதான் கோவிலின் வாசலுக்கும் மனவறைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறாள். அவள் வர மாட்டாள் என எனக்கு நிச்சயம் தெரியும். பாவம் அம்மாதான் இன்னும் மனதில் நப்பாசைகளோடு வளைய வருகிறாள். இத்தனைக்கும் இந்த நிர்மலாவுக்குதான் நிறைய சீர் செனத்தி செய்து திருமணம் செய்து வைத்தேன். இன்னும் அம்மாவுக்கே தெரியாது இவளது காதலை இரு வீட்டாருக்கும் தெரியாமல் எப்படியெல்லாம் பாடுபட்டு நிச்சயயிக்கப்பட்ட திருமணமாக செய்து காட்டினேன் என்று. அம்மா அந்தகால மனுஷி, அவளுக்கு காதலும் பஞ்சமா பாவங்களும் ஒன்றுதான். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவளது கட்டுபெட்டிதனங்களும், அதன் மேல் கொண்ட மூர்க்கமான பற்றுதலும் நிறைய ஆக்கிரமிக்க செய்தன.

அப்பா இறந்த இந்த பதினைந்து வருஷங்கள் எனக்குள் எவ்வளவோ மாறுதல்களையும் போதனைகளையும் நதி நீர் தடயங்களாய்ச் விட்டு சென்றுள்ளன. எனது இருபத்தி ஓராவது வயதில் எஸ்.டி.பி.எம் பரீட்ச்சையெல்லாம் முடிந்த ஒரு நாளில் அப்பா தனது சாப்பாட்டு கடையில் சற்று நேரம் கண் அசருகிறேன் என்று சொல்லி படுத்தவர்தான், அதற்கு பிறகு எழுந்திருக்கவேவில்லை. எனது நினைவு செல்களிருந்து இன்னமும் தொலைந்து போகாமல் இருக்கிறது அன்று அம்மா அழுத அழுகை. அம்மாவுக்கு அப்பா இறந்தது கூட அவ்வளவு வேதனை கிடையாது. வயதுக்கு வந்த நான்கு பெண்களையும் இப்படி நட்டாற்றில் தவிக்க விட்டு போய் விட்டாரே என்ற அதிர்ச்சியே அவளை நிலை குலைய வைத்து ஓப்பாரி பாட வைத்தது. அன்று அம்மா தனது கணவனுக்காக சிந்திய நீரை விட வளமான வாழ்க்கைக்கு காத்திருக்கும் தனது புதல்விகளை நினைத்து அழுததுதான் மிக அதிகமாய் இருந்தது.

அதனை நினைக்கும் போது, எனக்கு என்னை அறியாமலே மங்கல நாதம் முழங்கொண்டிருக்கும் இந்த சுப வேளையிலும் கண்ணீர் கண்களில் பாலம் கட்டுகிறது. இமைகளில் தேங்கிய நீரை சிதற விடாமால் இருக்க மூக்கை உறிஞ்சுகிறபோது அத்தையின் ஆதரவான வளைக்கரங்கள் எனது தோள்களைத் தொட்டு ஆசுவாசப் படுத்துகிறது. இது ஓமப் புகையால் எழுந்த கண்ணீரல்ல என அத்தைக்கு மட்டுதான் தெரியும். இந்த பதினைந்து வருட பாலைவன வாசத்தில் பாதங்கள் கொப்பளிக்க சுடு மணலில் நடந்து போகையில் இளைப்பாற நிழலாய் இருந்தவர்களில் இந்த அத்தை முதன்மையானவள். சொந்த இரத்த பந்தங்களே உதவ தயங்கும் இந்த காலத்தில், நெருங்கி பழகிய ஒரே தோஷத்திற்காக எனக்கும் எனது குடும்பத்திற்கு ஆதரவை அள்ளி வழங்கியவள். அன்பை அலகுகள் இன்றி எல்லோர் நெஞ்சிலும் ஊற்றியவள். முன்னெச்சரிப்புகள் இன்றி வலிய வரும் எத்தனையோ பிரச்சனைகளுக்குத் துணையாய் இருந்து தோள் கொடுத்தவள். இப்படிதான், நிர்மாலா தானாக தேடிக் கொண்ட காதல் வாழ்க்கைக்கு சிக்கெடுத்து வழியும் காட்டினாள். மனம் உறுதிபடாத இளம் வயதில் ஆளைச் சாய்க்கும் பிரச்சனைகளுக்குத் தலையைக் கொடுக்கும் போது, அதன் வடுவும் நிகழ்வும் அழியாமலேயே மூளைக்குள் தங்கி விடுகிறது. அதில் ஒன்றுதான் இந்த நிர்மலாவின் கல்யாணமும்.

திடுபென்று ஒரு நாள் நிர்மலா, ஒருவனை அத்தை வீட்டிற்கு அழைத்து வந்து மணந்தால் இவனைதான் மணப்பேன் என சண்டித் தனம் பண்ணியபோது அதிர்ச்சியில் உறைந்த என்னை மீள்நிலைக்குக் கொண்டு வந்தவளே இந்த அத்தைதான்.
“ஏண்டி அக்காகாரி குத்துகல்லா இருக்கறப்ப உனக்கென்னடி இவ்வளவு சீக்கிரம் புருஷன் கேட்குது. ஊமை மாதிரி இருந்துகிட்டு பண்ணிகிட்டு வந்திருக்கிற வேலைப் பாரு” அத்தை என்னைப் பார்க்க, நான் ‘என்னடி’ என்ற கதியில் அவளைப் பார்க்க, அவளோ அவனைப் பார்க்க...

‘இதோ பாருங்க, நானும் நிர்மலாவும் இரண்டு வருஷமாய் லவ் பண்றோம். எங்க வீட்டிலேயும் எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்கதான் எப்படியாவது கல்யாண தரகர்கிட்ட பேசி இதை பெரியவங்க பார்த்து வைச்ச கல்யாணமா நடத்திவைக்கணும். ஏன்னா எங்கம்மா காலத்து மனுஷி, அவங்களுக்கு இந்த காதல் கத்தரிகாயெல்லாம் கொஞ்சமும் ஆகாது’

“அட கிரகாச்சாரமே, செய்யறத செஞ்சுட்டு, இப்ப முடிச்சி வைக்க மட்டும் அக்கா வேணுமா? ஏண்டி அவர்தான் ஆம்பிளை, வேத்து மனுஷன். நீ அவ கூட பொறந்த பொறப்புதானே, உனக்காவது கொஞ்சம் அறிவு வேணாம். அக்காவுக்கு ஒரு நல்லது நடந்த பொறவு நீ எவனையாவது இழுத்துகிட்டு ஓடேன், யார் உன்னத் தடுத்தா”
அத்தைக்கு கோபம் கொந்தளித்திருக்க கூடும், வார்த்தைகளை அள்ளி வீசினாள்.
“அத்தை, அக்கா முதல்ல கல்யாணம் பண்ணிகிட்டா மத்த மூனு பொண்ணுகளை யார் கரையேத்தறது? ஏதோ என்னால முடிஞ்சவரை கஷ்டம் இல்லாம ஒரு நல்ல மாப்பிள்ளையா தேடிக் கொண்டு வந்திருக்கேன். முடிஞ்சா மாப்பிள்ளை வீட்டில மதிக்கிற மாதிரி கல்யாணம் செஞ்சு கொடுங்க இல்ல என்னை ஏதாவது ஒரு பாழுங்கிணத்துல தள்ளி விட்டிருங்க” என நிர்மலா மூக்கை உறிஞ்ச தொடங்க இப்படிதான் அவளது திருமணம் நடந்தேறியது.

அம்மாவிற்கு ஏதேதோ சமாதானங்கள் செய்து, மாப்பிள்ளை வீடு மெச்சுமாறு நகை, சீர்செனத்தி எல்லாம் செய்து ஓய்ந்தபோது, அம்மாவில் நகைகளில் பாதி தீர்ந்து அப்பாவின் சேமிப்பும் கரைந்திருந்தது. அம்மாவுக்கும் அத்தைக்கும் இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, நிர்மலா செய்து தொலைத்த காரியத்திற்கு ஈடாக இத்தனையும் செய்ய வேண்டியிருந்தது. நான் காதலைக் கொலைக்குற்றம் என்றோ ஈனச்செயல் என்றோ சொல்லவில்லை. காதல் புரிபவர்களுக்கு அந்த காதலை நிறைவேற்றும் மனவேகம் கொஞ்சமாவது இருக்கவேண்டும். இதுவே நிர்மலாவின் காதலன் அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொண்டு என் முன்னே நின்றிருந்தால்கூட மனமாற வாழ்த்தியிருப்பேன். அந்த காதலின் உறுதியை, அது தரும் வாழ்வு பற்றியதான நம்பிக்கையை மெச்சியிருப்பேன். ஆனால் இங்கு நடந்தது என்னவோ காதலின் பேரால் நடத்தப்பட்ட பகடையாட்டம். காதலைப் பிரகடன படுத்த துணிவும், அது கொடுக்கும் துன்பங்களை எதிர் நோக்கும் மனவலிமையும் வேண்டும், அது உண்மையான காதலாக இருக்கும் பட்சத்தில்.

எப்போது மூத்த தங்கையின் திருமணத்தைக் கன்னிபெண்ணாய் முன்நின்று நடத்தி வைத்தேனோ, அன்றைய தினத்திலிருந்து எனக்கு வந்து கொண்டிருந்த இரண்டு மூன்று வரன்களும் சுத்தமாய் நின்று போயிற்று. அது பற்றி எந்த பிரஞ்சையும் இன்றி, என்னுடைய பொழுது உணவகத்திலும், நித்திய கண்டம் பூர்ண ஆயுசுமாய் முளைத்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குமே சரியாய் இருந்தது.

எனக்குதான் படிப்பு என்பது பாதியிலேயே பின்னப்பட்டு போனாலும், தங்கைகளாவது தொடர்ந்து படிக்கட்டுமே என்று காசை செலவழித்தால், இந்த பாழாய்போன நிர்மலா கல்லூரியை முடிக்கும் முன்னரே தனது காதலை நிறைவு செய்து விட்டாள். நிர்மலாவாவது தட்டு தடுமாறி தொழிற்கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் கல்யாணமாகி புருஷன் வீடு சென்றாள். ஆனால் இந்த சாந்தாவின் பாடுதான் வெகு மோசம். சாந்தாவை எஸ்.பி.எம் பரிச்சை எழுத வைக்கவே பிரயத்தனப்பட வேண்டியதாய் விட்டது. அதன் பிறகு தனக்கு படிப்பு சுட்டு போட்டாலும் வராது என கடையிலேயே ஆணி அடித்தார் போல் உட்கார்ந்துவிட்டாள். கடையில் அவளது மிடுக்கும், எடுப்பும் கண்ட அவளது இன்றைய கணவன், தானே ஆசைப்பட்டு வீட்டிற்கு பெண் கேட்கவே வந்துவிட்டான். அம்மா என்னைதான் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என சந்தோஷ குதியலாய் ஓட, அவளைப் புரிய வைத்து வந்த சம்பந்தத்தைச் சாந்தாவுக்குப் பேசி முடித்ததில் எனது ஆவி பாதி கரைந்து போயிருந்தது.

மூத்த இரு தங்கைகளை ஒப்பேற்றி, கடைகுட்டி தங்கையைப் பல்கலைகழக அளவிற்கு படிக்க வைத்து நிமிர்கையில் எனது நெற்றியில் ஒரிரண்டு மயிர் இழைகள் நரைத்து பல்லைக் காட்டி கொண்டிருந்தன. பல்கலைகழக வாசம் கொடுத்த சுதந்திரமும் வாழ்க்கையைப் பற்றிய சீரிய பிரச்சனைகள் ஏதுமற்ற சூழ்நிலையில், அவளது மனம் காதலுக்கு வசப்பட்டது ஆச்சரியமில்லைதான். மாப்பிள்ளை வீட்டில் பிக்கல் பிடுங்கல் இல்லாவிட்டாலும், வசந்திக்கு அவளது திருமணம் தனது இரண்டாவது அக்கா நிர்மலாவின் திருமணத்தைப் போல் சீரோடும் சிறப்போடும் நடக்க வேண்டும் என வீம்பு நிறையவே இருந்தது. தனது கல்வி தகுதிக்கு ஏற்ற ஆடம்பரம் வேண்டும் என அடம் பிடித்தாள். அப்போதுதான் சாந்தாவின் கல்யாணத்தினால் ஏற்பட்ட கடனை ஒருவாறாக அடைத்து சிறிது ஆசுவாசபடுகையில் மறுபடியும் இடியென இன்னொரு கடனுக்கு ஓட நேர்ந்தது. அம்மா ஓரமாய் நின்று கண்ணீர் வடித்தாள். அவளால் முடிந்தது அவ்வளவுதான்.

வசந்தியின் கல்யாண செலவுக்காக நான் அல்லாடிய போதுதான், இந்த கோபி எனக்கு கடவுளென கை கொடுத்தார். அத்தையின் தூரத்து உறவினரான கோபி வங்கியொன்றின் வேலை செய்பவர். வசந்தியின் கல்யாணம் பொருட்டு, குடும்ப சொத்தான சாப்பாட்டு கடையை அடகு வைக்க சென்ற போதுதான் அவரைப் சந்தித்தேன். இன்னமும் கூட அவரது முகம் எனக்கு துல்லியமாக பதியவில்லை. இதையெல்லாம் விட, தனது குறை வளர்ச்சியடைந்த இடது பக்க காலைத் கையினால் தாங்கி விந்தியடி நடந்து என்னை அன்போடு வரவேற்கையில் ஒரு கணம் திகைத்துதான் போனேன். அந்த ஒரு சொற்ப வினாடிகள்தான் வாழ்க்கை, தனது முழு அர்த்ததையும் எனக்கு முழுவதாய் எடுத்து காட்டியது. இத்தனை நாள் எனது விடியா வாழ்வை எண்ணி அங்கலாயித்த மனதிற்கு, நம்மை விடவும் அதிஷ்டகட்டைகள் நிறைய உள்ளனர் என்பதைத் தெளிவாக்கியது.

இவைகள்கூட எனக்கு ஆச்சரியம் இல்லைதான். ஆனால் சூம்பிப் போன காலோடு துறு துறுவென எனக்கு வேண்டியதை எந்த ஒரு தடங்களும், முக சுழிப்பும் இன்றி, தனது உடற்குறை எந்த வடிவிலும் மற்றவரது பரிதாபத்தை ஈர்க்காவண்ணம் செயலாற்றியதுதான் எனது உச்ச கட்ட ஆச்சரியம். அதற்கு அத்தை சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு அவரிடத்தில் ஒரு மதிப்பையும், சற்றே பிரேமையையும் உண்டு பண்ணியது.

“உனக்கு குடும்பங்கிற விஷயத்துல ஊனம். வீட்டு நிலவரம் தெரியாத தங்கச்சிங்க. அப்பாவி அம்மா. பாதியிலே பரலோகம் போன அப்பா. இதெல்லாம் உன்னை சுத்தி இருக்கிற ஊனம். ஆனா அவனுக்கு தன்னோட அங்கமே ஊனபட்டு பழுதடைஞ்சி இருக்கு. ஆனா ஒரு விஷயத்துல நீங்க ரெண்டு பேருமே உசந்து இருக்கீங்க. உன்னோட குடும்ப பிரச்சனைகளை ஒண்டி பொம்பளையா நின்னு சமாளிச்சு, அந்த தங்கச்சிங்களுக்கு ஒரு வழியைக் காண்பிச்சிட்ட. அவனுக்குக் கால் ஊனமா இருந்ததாலும் கொஞ்சம் கூட தாழ்வு எண்ணமே இல்லாம படிச்சி இன்னைக்கு எல்லோர் மாதிரியும் தலை நிமிர்ந்து நிக்கிறான். உனக்கும் அவனுக்கும் என்ன ஒரு ஒற்றுமையினா, நீ கல்யாணமே வேணாமுனு தள்ளி நிக்கிற, ஆனா அவனை அவனோட ஊனத்தக் காரணம் காட்டி எந்த பொண்ணும் வேண்டாமுனு தள்ளி வைக்குதுங்க. அந்த வகையில நீ கொஞ்சம் கொடுத்து வைச்சவதான்டி”
அத்தையின் அந்த கடைசி வார்த்தைகள்தான் எனக்கு அவர் மீது ஒரு மரியாதை கலந்த ஒரு மையலை வளர்திருக்க வேண்டும்! அதன் பிறகு சினேகமாய் சின்னச் சின்ன புன்னகைகளைப் பரிமாறிக் கொள்ள தொடங்கினோம். அத்தையின் மூலம் எனது குடும்ப நிலையை அறிந்து, அவருக்கும் என் மீது ஏதோ ஒரு வாஞ்சை ஏற்பட்டிருக்க கூடும். அது அவ்வபோது திடீர் விஜயங்களாய் எனது உணவகத்திற்கு அவரை வரவழைத்திருக்க கூடும். எங்களுக்குள் பொதுவாய் அமைந்த சாம்பல் பூத்த துயர கங்குகள்தான் இந்த அன்புக்கு அடிதளமாய் இருந்தது. உனது சுமைகளுக்குத் தோளாய் நானிருக்கிறேன், எனது கால்களுக்கு வலுவாய் நீ இரு என்ற ஸ்திதியில்தான் எங்களின் பிரேமை உயிர்ப் பெற்றது. இது என்ன வடிவிலான உணர்வு என்று கூறு போட்டு ஆராய முற்படவில்லை. ஆனால் ஒன்று மட்டிலும் நிச்சமாய் புரிகிறது. இதில் நிர்மாலாவைப் போல தந்திரமிக்க உறவோ அல்ல வசந்தியை போல் தனது சுகமே பிரதானம் என்ற சுயநலமோ அல்ல சாந்தாவைப் போல் உடல் வசீகரமோ கடுகதன்னையும் இல்லை. ஒருவருக்கொருவர் ஆயுள் பரியந்தம் உதவியாய் இருப்போம் என்ற உணர்வே எங்களில் உறவில் மேலோங்கி நின்றது. கோபியை நினைக்கும் போதெல்லாம் அவரது முகமோ அல்ல பின்னப்பட்ட அவரது அங்கமோ எனது மனகண்களுக்குப் பிரசன்னம் ஆவதில்லை. மாறாக அவரது தன்னம்பிக்கையும், மற்றவர்களுக்கு உதவும் காரூண்யமும்தான் பிம்பங்களாய் உருமாறி அவரை, அவரின் அடையாளத்தை முன்நிறுத்துகின்றன. பெண்ணாய் பிறந்த இந்த இரண்டு வருட காலம்தான் எனக்கு மனசாந்தியையும், கூடவே ஆடைக்குள் குறுகுறுக்கும் கடற்கரை மணலாய், எனக்குள் கோபியின் மீது ஓர் உவப்பான அன்பை வெளிக் கொண்டு வந்தது. அட! இதுதான் காதலோ. இந்த பார்வை பரிமற்றங்கள் அத்தைக்கு எப்படியோ தெரிந்து, எங்கள் இருவர் உள்ளங்களையும் அறிந்து மணமேடைக்கு வித்திட்டார்.

இப்படி இரு மனங்கள் இணையும் வேளையில், எதிர்ப்புகள் எங்கிருந்தாவது வரத்தான் செய்கின்றன. எனக்கு எதிரிகள் என்றுமே வெளியில் இல்லை! எனது தங்கை நிர்மலாவுக்கு ஏனோ இந்த திருமணத்தில் அறவே இஷ்டமில்லை. ஒருவருடைய விருப்பங்களும் எண்ணங்களும் அவரவர் தனித்த விஷயங்கள். ஆனால், அதற்கு சொல்லிய காரணங்கள்தான் என்னுள் எரித்திராவகத்தை ஊற்றியது.

“உனக்கு கல்யாண ஆசை வந்திருந்தா, அதான் மூலைக்கொண்ணா தங்கச்சிங்க நாங்க இருக்கோமே எங்ககிட்ட சொல்ல கூடாதா? நீயா எங்கியோ ஒருத்தனைத் தேடி, அதுவும் ஒரு காலு விளங்காத மனுஷனா பார்த்துட்டு வந்திருக்கியே, உனக்கு எங்கேயாவது புத்தி இருக்கா. அந்த ஆளு என்ன குலமோ கோத்திரமோ. ஏண்டி உங்க அக்காவுக்கு போயும் போயும் ஒரு நொண்டியா கிடச்சான்னு என்னோட மாமியார்காரி குத்திக் காட்ட மாட்டா? உனக்கென்ன இந்த வயசுல இப்படி ஒரு காதல் வேண்டியிருக்கு..” அவள் சொல்லி முடிக்கவில்லை, எனக்குள் ரௌத்திரம் அடிப்பட்ட நாகமாய் படமெடுக்க...

“நிறுத்துடி! கொஞ்சமாவது மனசுல ஈரத்த வைச்சுகிட்டு பேசு. உனக்கென்னு வந்தா காதல் இனிக்கறது, அதையே நான் செஞ்சா, இருக்கமாட்டாம அலையறதுனு அர்த்தமா? இதோ பாரு, கூட பொறந்த தோஷத்துக்கு உன்ன என் கல்யாணத்துக்குக் கூப்பிடுறேன். உன்னோட வறட்டு பகிரும் உன்னோட மாமியார்காரியின் கௌரவம்தான் முக்கியா பட்டுச்சுனா எப்போதும் போல பொறந்த வீட்டு பக்கமே தலை வைச்சு படுக்காதே. ஆனா ஒன்னு சொல்லறேண்டி, இந்த நாதியத்தவ இல்லைன்னா அன்னினைக்கு நீ சந்தி சிரிச்சிருக்கணும்” கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் தடைகளற்று கன்னமேட்டை நனைத்தது.

‘ச்சீய், என்ன மானங்கெட்ட தனம் இது. நான் எதுக்கு அழனும்’. என்னதான் அடக்கினாலும், உணர்ச்சிகள் கொந்தளித்து கண்களில் நீராய் பெருகி தனது வெம்மையைச் சுயமாகவே ஆற்றிக் கொள்கிறது.
உடம்பு ஜடமாய் மணவறையில் சம்மணமிட்டிருந்தாலும் எனது சூட்சும மனது புறம் மறந்து எனக்குள் புதைந்து கிடக்கும் துன்ப நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருக்கிறது. எங்களது முன்னே திருமண பத்திரிக்கை படித்து, எனது குடும்ப சார்பாக அத்தையும் அவரது கணவரும் தாம்பாளம் மாற்றி கொள்கிறார்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் அவளது மணவறை அனுபவம் என்னை போல் இருந்திருக்கவே வேண்டாம். நாணத்தால் முகம் சிவந்து, அந்த சிவப்பில் மஞ்சள் பூசிய வதனம் இன்னும் சிவந்து, தலைக் குனிந்து ஓரகண்ணால் தனது வருங்கால கணவனை ஆசையோடும் நம்பிக்கையோடும் பார்க்கும் பாக்கியம் எனக்கு சிறிதும் அமையவில்லை. இந்த சுப முகூர்த்த வேளையில் என் மனதெல்லாம் எனது தங்கைகளே வியாபித்திருகின்றனர். நெஞ்சம் முழுக்க அவர்கள் விட்டு சென்ற ஆறாத ரணங்கள் அழுகி சீழ் வடிக்கிறது. எனது மங்கல நாளின் அதீதமான உணர்வுகளைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அத்தை கவனிக்காமல் இல்லை. ஐயர் அக்கினி வளர்த்து மந்திரம் ஜெபிக்கும் இடைவெளியில்,

“அடியே இந்த நேரத்துலதானா நீ பழசையெல்லா நினைச்சு அழனும். உன்ன புடிச்ச பீடை இன்னையோட உன்னையும் அவனையும் இணைக்கும் இந்த புனிதமான அக்கினியிலே தீஞ்சி போயிடுச்சுன்னு நெனைச்சுக்குடி என் கண்ணே” அத்தைக்கும் கண்களில் விளிப்பில் நீர் துளிர் விட்டிருந்தது.
அத்தை கிண்டியிலிருந்து நீரை ஊற்ற, அந்த பவித்திரமான நீர் எனது விரலிடுக்கில் வழிந்து கோபியின் கைகளில் வந்து இறங்கியது. இனி வாழ்நாள் முழுவதும் எனக்கு இவனே காவலாய் என்னைக் கோபிக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்கள். நல்ல முகூர்த்த வேளையில் மங்கல நாதஸ்வரம் முழங்க கெட்டி மேளம் கொட்ட, அரக்க பரக்க நிர்மலா திருமண மண்டத்தில் நுழைவது எனக்கு தொலைவில் நடந்தாலும் துல்லியமாக தெரிகிறது. அந்த க்ஷணத்தில், மஞ்சள் அட்சதை அனைத்து திசையிலிருந்து பறந்து வர, மனதில் ஒரு சந்தோஷ மொட்டு மலர எனக்கு மாங்கல்யதாரணம் கோபியால் செய்விக்கப் படுகிறது. எனது மலர்த்திய விழிகளைக் கொண்டு கோபியைப் பார்க்கிறேன். இவன்தானா இனி காலம் முழுக்க இவனோடுதானா எனது வாழ்வு? கூட்டிலிருந்து உலகை காண வெளி வரும் பட்டாம் பூச்சியாய் வெட்கம் என்னை முதன் முறையாய் நாணச் செய்கிறது. எனது மஞ்சளும் இவ்வேளையில் சிவக்கிறது

“அப்பாடி இப்பதான் இவ முகத்துல கல்யாண களையே வந்திருக்கு” என அத்தை நிர்மலாவிடம் கேலியாய் சொல்வது எனது காதுகளுக்கு கேட்கிறது. அக்னியை வலம் வரும் சமயம், கோபி தனது கால்களை ஊன்ற தடுமாறும் போது சட்டென அவரது கையைப் பிடித்துக் கொள்கிறேன். “இனி வாழ்நாள் முழுவதும் உன்னைத் தாங்குவேன் மணவாளா” என சந்தோஷ கூவல் மனதில் குதியல் போடுகிறது. அவரை பற்றிய எனது கைப்பிடி மேலும் இறுகுகிறது.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Rajesh,
This is a good story. I like your writing styles.
Mukunthan

பெயரில்லா சொன்னது…

அருமையான எழுத்து. பெண்ணியத்தை ஆன்களாலும் அழகாக தொட முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறீர்கள்.

sabee சொன்னது…

"காதல் புரிபவர்களுக்கு அந்த காதலை நிறைவேற்றும் மனவேகம் கொஞ்சமாவது இருக்கவேண்டும்".I like this quote....