புனர்ஜென்மம்
இன்றைக்கு என்னவென்றே தெரியவில்லை, மூளைக்குள் ஒருவித மாசி படிந்த தூக்கமும், கண்களில் சொல்லதெரியாத வெறுமையும் குடிக் கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது. நடக்கும் நடையில் ஒர் ஒழுங்கில்லை, மனதுக்குள் சதா ஓடிக்கொண்டிருக்கும் உருதெரியாத பிம்பங்களாய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இரவு எட்டு மணிக்கு என்னைப் பார்ப்பதற்கு வருதாக சொன்ன டேனியலில் முகம், சமய சந்தர்ப்பம் தெரியாமல் என் நினைவுக்கு வருகிறது. அவனைப் பற்றிய எந்த ஒரு உருவகமும் எனது மனதில் இல்லாவிட்டாலும் கூட, ஏதோ ஒரு வகையில் அவனது அருகாமை எனக்கு சற்று இதத்தைத் தருக்கிறது, காயும் பாலை நிலத்தில் குளிர் காற்று லேசாய் தீண்டுவது போல்.
ஆனால், எல்லா உறவுகளூம் தென்றலாய், இளங்குளிராய் இருப்பதில்லையே. ஏனோ இந்நேரத்தில் எனக்கு வாசுவின் முகம் தானாக நினைவிற்கு வருகிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அந்த முகத்தை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. முகம் என்று சொல்வதை விட அவனது ஸ்பரிச பிரயோகங்கள்தான் எனது உடலைச் சிலிர்க்கவைக்கின்றன. மனிதர்களை முகங்களாய் அடையாளப்படுத்தும் காலத்தைக் கடந்து, அவர்கள் விட்டு சென்ற நினைவுகளும் எச்சங்களும்தான் அவர்களை எனக்கு ஸ்திரப்படுத்திறது. அப்படி பார்க்கும் போது வாசுவின் தொடுகைகள்தான் அவனை எனக்கு அடையாளம் காட்டுகிறது. மறக்க நினைத்தாலும் பாறைக்குள் ஊறும் ஊற்றாய் ஒரு சின்ன கிளுகிளுப்பு மனதிற்குள் எழாமால் இல்லை. நிணநீர்களின் ஊறலால் உந்தப்பட்ட பருவத்தில், ஓர் ஆணின் அந்தரங்க அறிமுகம் வாசுவால் கிடைக்கப்பெற்றது. அது காதல் என்று சொல்லியெல்லாம் என்னையே ஏமாற்றிகொள்ள விரும்பவில்லை. எங்கள் இருபாலரின் உடல் மற்றும் உள்ள தேடல்களுக்கு வடிகால்களாக இருந்தோமே தவிர, தேடலின் முடிவில் எதை தொலைத்தேன் எதை அடைந்தேன் என தெரியாமல் சினேகிதமாய் கையசைத்து பிரிந்து சென்றோம்.
அதன் பிறகு, எனது இளங்கலை பட்டத்தை முடித்து, முனைவர் ஆராய்ச்சியைத் தொடர லண்டன் நகரத்தில் கால் வைத்தபோது, எனது முழு மொத்த தோற்றமும் வகைதொகைகளும் மாறிதான் போனது.
மாலை மணி நான்கு. குளிர்க்கால சூரியன் லண்டன் நகருக்குச் சற்று முன்பாகவே வணக்கம் செலுத்திவிட்டு, நகர்ந்துக் கொண்டது. இந்த குளிர் காலத்தில், ஊசியாய் ஊதற் காற்று குத்தும் போது, எப்போதாவது மேகத் திரள்களில் இருந்து தலையை நீட்டும் சூரியனில் இளம் வெம்மை மயிர் கால்களை நெட்டுக்குத்தில் நிற்கவைக்கிறது. ஹெம்மர் ஸ்மித் மருத்துவமனையில் முன்புறத்தில், எதற்கோ காத்திருக்கையில், பானு என்னைப் பார்த்து விட்டு கைகளைக் ஆட்டியபடியே என்னை நோக்கி வருவது தெரிகிறது. சிரித்த முகத்தில், ஒரு பொலிவும், கரவற்ற வெள்ளை விழிகளுமாய், பானுவைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு ஆச்சரியம்தான் மூளூம். இவள் முகத்தில் எங்காவது நாகரீக உலகின் சாயலும், அதன் விளைவாய் ஏற்பாடும் வடுகளும் தெரிகிறதா என ஆராய்து பார்த்து அலுத்துதான் போவேன். இயந்திரகதியாகிவிட்ட வாழ்வில், இவள் மட்டும் எப்படி இன்னும் உயிர்ப்புள்ள மானுடத்தியாய் வளைய வருகிறாள்?, இவள் மட்டும் இன்னமும் அன்று பிறந்த குழந்தையாய், மாறத புன்னைகையுமாய், அதன் வெளிபாடில் இதமாய் பரவும் வாஞ்சையும்மாய் வலம் வருகிறாள்.
அப்படியே அவளை வாரி அணைத்துக் கொள்ளலாம் போல இருக்கிறது. உச்சி மோந்து முத்தம் தரலாமா எனக்கூட தெரிகிறது. அருகில் வந்தவளை, அப்படியே நிறுத்து, கைகளை எனக்குள் இருத்திக் கொண்டென். இங்கு நான், மிகவும் அன்னியோன்யமாய் பழகும் ஒரு ஜீவன் உண்டு என்றால், அது இவளாகத் தான் இருக்க முடியும். கண்களில் பெருகிய அதே கனிவோடு, எனது கைதடங்களை மெல்ல நிரவியபடியே பானு தனது சீரான பார்வையை நேர்கோடாக என்னுள் இறக்கினாள். நேற்றைய பொழுதில் இதே நேரத்தில் டேனியலோடு முயங்கியதும், அவனது வெள்ளைத் தோல் வெற்று மார்ப்பில் படர்த்திருந்த முடி கற்றைகளோடு அளைந்ததும் மின்னலாய் கண் சிமிட்ட, எனக்கு வெட்கம் சிறிதாய் தலை தூக்கியது. திடீரேன அவளது மாசு மருவற்ற பார்வையை என்னால் எதிர் நோக்க முயவில்லை. அவளது பரிசுத்த திருஷ்டி என்னை ஏதோ செய்ய, வெறும் புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு நகர்ந்தேன்.
மருத்துவ ஆய்வு கூடத்தில், சாரா உறிஞ்சு குழல் மூலம் எதனையோ உறிஞ்சிக் கொண்டிருந்தாள். வெள்ளிக் கிழமையின் அவசரம் அவளது முகத்தில் அப்பட்டமய் தெரிந்தது. வெள்ளை அங்கியை அணிந்துக் கொண்டு, வாஷ் பேஷனில் கையைக் கழுவும்போது,
“ஷாம் எனக்கு ஒரு சின்ன உபகாரம் செய்ய முடியுமா?”
சாராவின் குரல் சன்னமாய் எனது காதில் விழுந்தது.
“உனக்கு எந்த ஒரு சிரமமும் இல்லையினா, என்னோட ஸ்டெம் செல்லோட மீடியத்தை மாத்திற முடியுமா? சரியா ஐஞ்சு மணிக்கு என்னோட பாய்ப்ரெண்ட் எனக்காக பப்பில் காத்திருப்பான். அவன் சரியான சிடுமூஞ்சி, கொஞ்சம் லேட் ஆனாலும் டென்ஷனா ஆயிடுவான். ப்ளீஸ்....”
சாராவிற்கு எனது சம்மதத்தை வெறும் தலையாட்டல் வழியே தெரிவித்து விட்டு, கைகளுக்கு இரப்பர் உறைகளை அணிய முற்பட்டேன்.
வெள்ளிக் கிழமை ஜூரம் சாராவை ஆட்டியத்தில் ஆச்சரியம் இல்லை. வெள்ளிக் கிழமைகளில் இரவு களியாட்டம், சனிக்கிழமை
பூரண ஓய்வு மற்றும் ஞாயிற்றுக் கிழமை குடும்பத்தோடும்
நண்பர்களோடும் அமைதியாய் கழிப்பதுதான் இந்த இலண்டன் மெட்ரோபொலிட்டனின்
எழுதபடாத சட்டம். வாரத்தில் ஐந்துநாட்கள் பேயாய் உழைப்பவர்கள்
தங்களை இளைப்பாறிக் கொள்ள இந்த வெள்ளிக் கிழமை இரவு மிக மிக அவசியம்.
பக்கத்து மேஜையில் செல்களை எண்ணிக் கொண்டிருந்த சக ஆராய்ச்சி மாணவன் சைமன், சாராவின் பரபரப்பை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடியே எனக்குச் சைகை காட்டினான். மெல்ல ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு எனது செல்களை மைக்ரோஸ்கோப்பினால் உன்னிக்க தலைப்பட்டேன். நேற்றைய பொழுது ஒற்றையாக இருந்த ஸ்டெம் செல், இன்று வேறு செல்களாக உருமாறியிருப்பது சந்தோஷத்தைத் தந்தது. இந்த ஸ்டெம் செல்லின் அதித பகுப்பும், தன்னை வேறுப்பட்ட செல்லாக உருமாற்றும் வித்தையும் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு பிரம்மையும் மையலையும் அதன் மேல் ஏற்படுத்தியிருந்தது. ஆதி நாட்களில் ஆணின் சுக்கிலமும் பெண்ணில் சுரோணிதமும் கலந்து ஒரு ஸ்டெம் செல்லாக மாறி, நூற்றுக்கணக்கான முறை தன்னைப் பகுத்து, பல கோடி செல்களின் தொகுப்பாக, மனித உருவமாக பரிணாமிப்பது எத்தனை மகத்தான விஷயம். அதனையே ஆய்வுக் கூடத்தில் மிக நுண்ணிய தூரத்தில் ஒரு சக மனிதனாக பார்க்கும் போது, கடவுளை வியப்பதா? அல்லது நாத்திகவாதிகள் மதிக்கும் இயற்கையை வியப்பதா? இந்த செல்லிருந்து எவ்வாறு வெவ்வேறு உடல் உறுப்புகளை உற்பத்தி செய்வதுதான் எனது ஆய்வு பணி. இதில்தான் எனது முனைவர் பட்டப்படிப்பும் அடங்கி இருந்தது.
இதையெல்லாம் விட உச்சபட்ச ஆச்சரியம் என்னவென்றால், எப்படி ஒரு ஸ்டெம் செல் தன்னை முதிர்ந்த செல்லாக, ஒரு இருதய செல்லாகவோ அல்லது சிறுநீரக செல்லாகவோ உருமாற்றுகிறது என்பதுதான். தனது சுயத்தை இழந்து, இன்னொரு புதிய ஆகிருதியாக இந்த தாய் செல் எப்படி பரிணாமிக்கிறது எனது கேள்வியும் கூட.
நான் நானாக இல்லாமல் இன்னொரு மனுஷியாய் மாறமுடியுமா?. அப்படி உருமாற எனது சுயமும், அறிவும், ஆணவமும் அனுமதிக்குமா? ‘ச்சீய்’ நினைக்கவே எனக்கு குமட்டுகிறது, நான் நானாக இல்லாமல் போவதைப் பற்றி.
நான்கு வார விடாத ஆராய்ச்சி என்னை சற்று நேரம் மறக்கதான் செய்தது. ஒவ்வொரு செல்லையும் அதனது இடைவிடாத மாறுதல்களை உற்று கவனிப்பது உவப்பாக இருந்தாலும், மற்றவரின் குளியல் அறையை எட்டிப் பார்க்கும் ஒரு வித அறுவருப்பைத் தராமால் இல்லை. கிடைக்கப் பட்ட ஆய்வு அறிக்கை எனக்கு மிகுந்த மகிழ்சியைக் கொடுத்தது வேறு விஷயம்.
இந்த நான்கு வார காலத்தில், டேனியலின் அருகாமையை எப்படி தவிர்த்தேன் என அதிசயமாகவும் இருந்தது. அவனது இரவு நேர தொலைபேசி அழைப்புகளைக்கூட சட்டை செய்யாது களைப்பால் உறங்கி போனது உறுத்தலாகவும் இருந்தது.
இன்றைய இரவு என்னை பார்க்க வருவதாக காதலும் காமமும் சொட்ட சொட்ட குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதனை படிக்கும் போது, தேகத்தில் வெதுவெதுவென உஷ்ண அலைகள் பரவி தொண்டைக் குழியை கமறச் செய்தது. ஆவிப் பறக்க குளியலை முடித்து, அடுக்கி வைக்கபட்டிருக்கும் ஆடைகளின் பேழையைத் திறந்தேன். தொங்கும் டீசர்ட் மற்றும் மடித்து வைத்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட்களின் எனது கண்களைத் தவிர்த்து, பெண்மையாய், என்னை இன்னும் மென்மையாய் காட்டும் உடைகளுக்குக் கண்களைத் துழாவ விட்டேன். சட்டென கண்களுக்குத் தென்பட்டது பிரிக்கப்படாத சானிட்டரி நாப்கின் பொட்டலம். ஆறு வாரங்களுக்கு முன்பு ஒற்றையாய் இருந்த பஞ்சு பொதியை உபயோகித்து தூக்கியெறிந்தது எனது கவனத்தைத் தாக்கியது. அதற்கு பிறகு இதனை நான் உபயோகிக்கவே இல்லை. அன்னிச்சையாய் எனது கைகள் எனது ஒட்டிய வயிற்றைத் தடவிக் கொண்டது. வாழ்க்கையில் நான் அதிகம் பாவிக்க ஒரு வார்த்தை அந்நேரத்தில் அன்னிச்சையாய் வெளியே வந்து விழுந்தது.
“கடவுளே! நான் உண்டாகி இருக்கேனா?” நாள் கணக்கு தவறாமல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை என்னை நீராட்டும் மாதவிலக்கு தள்ளி போனது அப்பட்டமாய் தெரிந்தது.
கைகளுக்கு கிடைத்த உடையை வாரி உடுத்திக் கொண்டு, பார்மசிக்கு ஓடினேன். யூரின் ப்ரெக்னென்ஸி டெஸ்ட் பொஸட்டிவ் என பல்லை இளித்தது. எனது முகத்தடுமாற்றத்தைக் கவனித்து, அங்கு பணிபுரியும் பெண், அபோர்ஷன் பில் வேண்டுமா என கேட்டாள். எனது முளைக்குள் வண்டு குடைந்தது. எப்படி கவனிமில்லாமல் பிசகாக நடந்து கொண்டேன் என்று. இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியலின் பிறந்தநாளைக் கொண்டாட வேல்ஸ் சென்றது ஞாபகம் வந்தது. அன்றைய பொழுதில் அளவுக்கு மீறின ஷம்பேயின் ஆதிக்கத்தால் கருத்தடை மாத்திரையை முழுங்கினேனா என எனக்கு தெரியவில்லை.
இரவின் சாயல் மெல்லியதாய் எனது அறையைத் தழுவும் போது, டேனியல் கைகளில் ரோஜமலர்களோடு பிரசன்னமானான். நெருங்கி வந்தவனில் பிடியில் சுருங்கி அடைக்கலமானேன். பிறகு மெல்ல சுதாரித்து, அவன் கொண்டு வந்த ரெட் வைனில் கொஞ்சம் ஊற்றி அவனுக்குத் தருகையில்,
“டேனி, நான் கர்ப்பமா இருக்கேன்”
புருவங்களைச் சற்று நெறித்தவன், “இன்னொரு
முறை சொல் ஷாம்”
“யெஸ், நான் உண்டாகியிருக்கேன், இது உன் குழந்தைதான்.”
“என்னோட கணிப்பு தப்பில்லன்னா, இது ஒரு ஆறு வார கருவா இருக்குமா?”
நான் தலையை ஆட்டி அவனது அடுத்த சொல்லுக்காக காத்திருந்தேன்
“இந்த குழந்தை உனக்கு வேணுமா ஷாம்? ஆனா கண்டிப்பா ஒரு குழந்தைக்குப்
பொறுப்பான அப்பாவா இருக்கிற நிதானம் எனக்கு கிடையாது.”
எல்லா விஷயங்களிலும் நவநாகரீக யுவதியா சிந்திக்கிற எனக்கு, சட்டென்று பதில் கூற இயலவில்லை. ஏதோ ஒன்று என்னைப் பேச
விடாமல் தடுத்தது. இருந்த போதிலும் எனது ஈகோ வன்மையாய் அடிபட,
“வெல், எனக்கு ஒரு பூனையைக்கூட வளர்க்கிற அளவுக்கு கூட பொறுமை இல்ல, இதுல குழந்தை வேறயா.”
“அப்புறம் என்ன, கலைச்சிற
வேண்டியதுதானே?” என்றான்
மிக இயல்பாக.
அந்த கணம், உதட்டோரம் அவன் கொடுத்த முத்தம் கசந்தது.
இரவு நத்தையாய் ஊர்ந்துக் கொண்டிருந்தது. நான்கு வார தனிமை அவனது நாடி நரம்புகளை
முடுக்கியிருக்க கூடும். அருகாமையில் வந்து தனது கரங்களால் என்னைத் தழுவிக்
கொண்டான். என்னுடைய அனுமதி கோரப்படாமலே எனது அந்தரங்கம்
அவனது கைகளால் அளையப் பட்டது. அவனது வரம்பு மீறும் கணங்களுக்கான ஏங்கிக்
காத்திருக்கும் எனது பெண்மை, அன்றைய பொழுது நத்தையாய்
கூட்டிற்குள் ஒடுங்கிக் கொண்டது.
காலை பொழுது, கலவி முடிந்த களைப்பில், டேனியல் என்னிடமிருந்து விடைப்பெறும் வேளையிலும் கூட எனது இயல்பு நிலை மீளவில்லை. அவனது பிரிவு முத்தத்தைக் கூட சத்தாக என்னால் பெற்றுக் கொள்ளமுடியவில்லை.
மறுநாள் காலையில் லேப்பில் எனக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. இத்தனை நாட்கள் நான் வளர்த்த அந்த மூல உயிரணு ஏதோ ஒரு விதிக்குக் கட்டுபட்டது போல் இரத்த அணுக்களாக பரிணாமித்திருந்தன. இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் புதிதாக மேற்கொண்ட ஆய்வுமுறை, இன்று மிகப்பெரிய பலனைக் கொடுத்திருக்கிறது. எனது ஆராய்ச்சி மேலாளாருக்குச் சந்தோஷம் தலைக் கொள்ளவில்லை. சினேகமாக தோளைத் தட்டி, அருமையான ஆராய்ச்சி என சொல்லிவிட்டு நகர்ந்தார்.
நான் மீண்டும் அந்த ஸ்டெம் செல்களை உருபெருக்கியின் மூலம் ஆழ்ந்து பார்க்கிறேன். நேற்றைய வரையில் தாய்செல்லாக இருந்த ஒரு வஸ்து இன்று எதோ ஒன்றாய், ஒரு இரத்த அணுவாய் மாறியிருக்கிறது. மிகவும் ஆனந்தபட வேண்டிய விஷயம்தான். இந்த மாறுதலினால் பரப்பிரம்மாய் இருந்த ஒரு செல், பயன்படகூடிய இரத்த செல்லாக பரிணாமித்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய விந்தை? எப்பேர்ப்பட்ட தியாகம்? தன்னை, தனது சுயத்தை அழித்து வேறு ஒரு பிரகிருதியாய் மாற என்ன ஒரு வலிவு இருந்திருக்க வேண்டும்? இதற்கான வலிகளையும் அவஸ்தைகளையும் இந்த செல் எவ்வளவு தாங்கியிருக்க வேண்டும்? எனக்கு திடிரென்று இறந்துபோன என்னுடைய அம்மாவின் முகம்தான் ஞாபகத்திற்கு வந்தது. உள்ளுக்குள் கூரிய கத்தியாய் ஒரு வலி இறங்க, அடிவயிறு கனப்பதாய் தோன்றியது. ஒரு மனித செல்லுக்கு உள்ள தியாகமும், வலுவும் கூட எனக்கு இல்லையே? இந்த அவலம் சட்டென்று பிடிபட, உள்ளுக்குள் மரத்து போயிருந்த உணர்வெல்லாம் பிரவாகம் எடுத்து ஆழி பேரலையாய் என்னை முக்கி மூச்சு திணர வைத்தது. தொண்டைச் சங்கு பிளவுபட சத்தம் போட்டு ஆர்பரித்து அழ வேண்டும் என்னும் அடங்கா வெறி என்னைத் தாக்கியது. பற்களை இறுக கடித்துக் கொண்டு, கழிவறைக்கு ஓடினேன். அழக்கூட சுதந்திரமில்லாத, மெல்லிய உணர்வுகளை மழுங்கடித்த ஒரு பெண்ணாய் இருக்கிறேனே என அதற்கும் சேர்த்து அழுதேன். காலையில் மருந்தகத்தில் வாங்கிய அபார்ஷன் மாத்திரையும் சேர்த்து கழிவறையில் காடாசினேன்.
எப்படியோ எனது கருவில் உதித்துவிட்ட உயிரைப் பெற்று எடுப்பதுதான் இனி எனது கடமையும் கூட. இதற்கு டேனியல் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. இந்த குழந்தைக்கு முதலெழுத்தைத் தருவதற்கு அவனுக்குத் தயக்கம் இருப்பினும் எனக்கு கவலையில்லை. இந்த எண்ணம் உதித்த க்ஷணத்தில், என்றோ ஒருநாள் படித்த சல்மாவின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
ஓட்டு விளிம்பில்
தழும்பி சரிகிற வயிற்றோடு
தலை சொறிகிற குரங்கிற்கு
ஒரு சலனமும் இல்லை
தன் உணவை
தானே தேடுவது குறித்து
தன் அடிவயிற்று கனத்தின்
பாதுகாப்பு குறித்து
மேலும்
யாருடைய கரு இதுவெனுவும்
அப்போது தெரியவில்லை, இந்த வரிகளின் வலியும்
வலிமையும்.
தமிழ்மலர், 2020

கருத்துகள்